Thursday, August 19, 2010

சமுத்திரக் கனி

சின்னத் திரையில் அழுத்த முத்திரை... 'நாடோடிகள்' படம் மூலம் வெள்ளித் திரையில்



அதிரடி முத்திரை... சமுத்திரக் கனியை சந்தியுங்கள்!

"விருதுநகர் மாவட்டத்தில் சேத்தூர் கிராமம் எனக்கு. விவசாயக் குடும்பம். எட்டாவது படிக்கும் வரை சினிமா பார்ப்பது குற்றம், அதைப் பத்திப் பேசுறது அதைவிடத் தப்பு என இருந்த சூழல். அப்ப நாங்க குரூப் ஸ்டடின்னு கிளம்புவோம். ஒரு சமயம், என்னதான் இருக்கும்னு ராத்திரி 'அலைகள் ஓய்வதில்லை' படம் பார்த்தேன். அவ்வளவுதான். அநேகமாக அடுத்து தியேட்டருக்கு வருகிற எல்லாப் படங்களையும் பார்க்க ஆரம்பிச்சேன்.

15 வயதில் அப்பா பாக்கெட்டில் இருந்து 130 ரூபாயை எடுத்துக்கிட்டு, வீட்டுக்குத் தெரியாமல், சென்னைக்கு பஸ் ஏறினேன். எங்கே இறங்கணும், எப்படிப் போகணும், யாரைப் பார்க்கணும்னு எந்தத் திட்டமும் இல்லை. ஒரு டைரியில் டி.ராஜேந்தர், பாக்யராஜ் முகவரிகள் மட்டும் இருந்தன. சென்னையில் தாம்பரம் நுழைந்ததும் 'எங்கே இறங்குறீங்க'ன்னு கண்டக்டர் கேட்டுக்கிட்டே இருந் தார். சென்னையில் நான் எதிர்கொண்ட முதல் கேள்விக்கே எனக்குப் பதில் தெரியலை.

மவுன்ட் ரோட்டில் கடைசி ஆளாக என்னை இறக்கிவிட்டார்கள். ஜெமினி பாலத்தின் அடியில் இருந்த நீண்ட இடைவெளியில் படுத்து உறங்கினேன். நல்ல உறக்கத்தில் போலீஸ் ஏட்டின் கைத்தடி என்னை உலுக்கியது.'சினி மாவில் நடிக்க வந்தேன். இங்கே இறக்கிவிட்டுட்டாங்க. தூங்குறேன்'னு சொன்னேன். 'இங்கேலாம் தூங்கக் கூடாது'ன்னு சொல்லி என்னை சைக்கிள்ல உக்காரவெச்சு அண்ணாசாலை காவல் நிலையத்துக்கு அழைத்துப் போனார். காவல் நிலையத்தின் தரையில்பேப் பர் விரிச்சு சென்னையில் என் முதல்நாள் இரவுத் தூக்கம் கழிந்தது.

மறுநாள் டி.ராஜேந்தர் வீட்டுக்குப் போனேன். அவரைப் பார்க்கவே முடியவில்லை. பாக்யராஜ் சார் வீட்டை நெருங்கவே முடியவில்லை. கையில் இருந்த பணம் கரைஞ்சுபோச்சு. சரி, வீட்டுக்குப் போய் காசைத் தேத்திட்டு மறுபடியும் வருவோம்னு நினைச் சுட்டு மிச்சம் இருந்த 20 ரூபாய்க்கு எதுவரை பஸ் போகும்னு கேட்டேன். விழுப்புரம் வரைன்னு சொன் னாங்க. அப்போ நான் நின்னுட்டு இருந்த இடம் எஸ்.எல்.என். ஹோட்டல். 'எனக்கு ஊருக்குப் போக இன்னும் 25 ரூபாய் வேணும். அவ்வளவு காசு சம் பாதிக்கணும். ஏதாவது வேலை கொடுங்க'ன்னு கேட்டேன். '25 ரூபா இப்பவே தர்றேன். ஊருக்குப் போ'ன்னு முதலாளி சொன்னார். ஆனா, நான் நாலு நாள் வேலை பார்த்துட்டுத்தான் காசு வாங்குவேன்னு சொல்லி வேலை பார்த்தேன்.

ஊருக்குத் திரும்பினேன். வீடு அமளிதுமளியா இருக்கு. போலீஸுக்குத் தகவல் சொல்ல, தெரிந்த வீட்டுக்கு எல்லாம் போயி அலசிக் கண் சிவந்து, அப்பாவும் அம்மாவும் இருக்காங்க. போனால் கட்டிப்பிடிச்சிக் கதறி அழறாங்க. கொஞ்ச காலம் அமைதியா இருந்தேன். ப்ளஸ் டூ முடிச்சேன். அப்புறம் அம்மாகிட்டேயே 1,000 ரூபாய் வாங்கிட்டு மறுபடியும் சென்னைக்கு வந்தேன். நடிக்க வாய்ப்பு கேட்டு அலைஞ்சேன். ஒரு இயக்குநர், 'உங்க ஊர்ல முகம் பார்க்கிற கண்ணாடியே விக்காதா?ன்னு கேட்டார். கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் டி.வி-யில் பரபரன்னு இருந்த டைரக்டர் சுந்தர் கே.விஜயனைப் பார்த்தேன். 'நீ படிப்பை முடிச்சுட்டு வா. பார்க்கலாம்'னு நம்பிக்கை கொடுத்து அனுப்பினார். ஊருக்கு வந்தேன். பி.எஸ்ஸி., கணிதம் படிச்சேன். அம்மா ஆசைக்குத் தலை வணங்கிட்டேன். இதுக்கு இடையில் என் அப்பா இறந்துட்டார்.

இனிமேல் சினிமாதான்னு திட்டவட்டமா முடிவு செய்துட்டு மறுபடி சென்னைப் படையெடுப்பு. இப்பக் கொஞ்சம் சுலபமாக இருந்தது. பக்குவம் பிடிபட்டு இருந்தது. நண்பர்கள் கிடைச்சாங்க. நகரத்தின் சாமர்த்தியம் புரிந்தது. கொஞ்சம் நகரத்தோட பழகும் வித்தை தெரிந்தது. சுந்தர் கே.விஜயன் 12 சீரியல்களுக்கு மேல் பரபரப்பாக இயங்கினார். அவருக்குத் துணையாக நான் இருந்தேன். நேரம் காலம் இல்லாமல் வெறித்தனமாக வேலை பார்த்தேன். 'டைரக்ஷனுக்கு வா'ன்னு சுந்தர் சார் சொன்னார். அதுவரைதள்ளி வெச்சிருந்த நடிப்பு தாகத்துக்கு முற்றுப்புள்ளி வெச்சேன்.

கே.பாலசந்தர் சார் கூப் பிட்டார். அவரோடு படங்களில், சீரியல்களில் இறங்கினேன். அவரோட மலைச்சுப்போகிற அனுபவம் எனக்கும் கை கொடுத்தது. அப்புறம்தான் எஸ்.பி.பி. சரண் 'உனக்குப் படம் தர்றேன் வா'ன்னு சொல்லி 'உன்னைச் சரண் அடைந்தேன்' படம் கொடுத்தார். படம் வெளியாகி நல்ல மரியாதை கிடைச்சது. அந்தப் படம் பார்த்துட்டு ஞானவேல் சார் ஒரு பெரிய தொகை கொடுத்து கதை, திரைக்கதை இருக்கு. டைரக்ஷன் பண்ணுன்னு சொன்னார். விஜயகாந்த் நடிச்ச 'நெறஞ்ச மனசு'. மனசை செலுத்தித்தான் டைரக்ஷன் பண்ணினேன். ஆனாலும் வெற்றி இல்லை. மறுபடியும் 'அண்ணி', 'செல்வி'ன்னு சின்னத்திரை வேட்டை.

கையில் 'நாடோடிகள்' திரைக்கதை இருந்தது. நான் அதைச் சொல்லாத நடிகர், தயாரிப்பாளர் கிடையாது. நாலு பேர் சப் ஜெக்ட்டான்னு நடிகர்கள் பின்வாங்கினாங்க. அவங்களைப் பார்த்துட்டு தயாரிப்பாளர்களும்.

இப்படி இருக்கும்போது ஒருநாள் சசிக்குமார் போன். ' 'சுப்பிரமணியபுரம்'னு ஒரு படம். உங்களுக்கு ஒரு கேரக்டர். முடி வளர்க்க ணும். சம்மதமா?'ன்னு கேட்டார். அடடா, இத்தனை வருஷத்துக்குப் பின்னாடி என்னை நடிக்கக் கூப்பிடுறார். 'சரி நண்பா'ன்னு சொல்லி கதையே கேட்காமல், நடிச்சேன். நல்ல பெயர்.அவர்கிட்டேயே 'நாடோடிகள்' சொன்னேன். 'நிச்சயம் பண்ணலாம். ஜனங்க என்னை ஏத்துக்கிட்டா, நான் நடிக்கிறேன்... ப்ராமிஸ்'னு சொன்னார். எனக்கான கதவைத் திறந்து பெரிய வெளிச்சம் காட்டினார். படம் அபாரமான வெற்றி. இன்று அவரது இயக்கத்தில் அனல் தெறிக்கிற பெரிய கேரக்டர். கேள்விப்பட்டு மோகன்லால் அவர் படத்துக்குக் கூப்பிடுகிறார். வெற்றிமாறன் கதை சொல்லிட்டு, 'நீங்க நடிச்சா நல்லா இருக்கும்'கிறார். எல்லாம் சரி. இதற்கெல்லாம் அடிப்படை...?

நான் எப்பவும் என் நம்பிக்கையைக் கைவிட்டது இல்லை. எத்தனை தடவை ஊருக்குப் போய் வந்தாலும் என் கனவு சென்னையில்தான் இருந்தது. என்ன செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்னு நினைக்கிற, இன்னும் கிராமத்தைவிட்டு விலகாத அம்மா கமலா எனக்கு ஆத்ம பலம். மாமா எப்படியும் பெரிய டைரக்டர் ஆவார்னு நம்பி எனக்குக் கழுத்தை நீட்டிய அக்கா பொண்ணு ஜெயலட்சுமி இல்லேன்னா... நான் இல்லை.

போதனை பண்ணுகிற அளவுக்கு நான் சாதிக்கலை. ஆனால், முயற்சிகளில் தளர்வு அடைவது வேண்டாத வேலை. கொஞ்ச வருஷம் உழைத்துவிட்டு ஒண்ணும் கிடைக்கலைன்னு சொல்லிட்டு திரும்பிவிடக் கூடாது. உங்க ளுக்கான மகுடம்

Tuesday, August 17, 2010

நீயும்... நானும்! - கோபிநாத்

என் வேலையைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்யவே முடியவில்லை.



நண்பர்களோடு பேசவோ, ஒரு சினிமாவுக்குப் போகவோகூட முடியாது. 24 மணி நேரமும் ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இருக்கிறேன். இப்படி நிறையப் பேர் சொல்வது உண்டு.

இன்றைக்கு, அநேகமாக எல்லோருமே பிஸியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களா?

குறைந்தபட்சத் தேவைகளின் அளவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும்போது எதையாவது கூடுதலாகச் செய்யவேண்டி இருக்கிறது.

ஒரு காலத்தில் பள்ளிக்கூடம் போகிற ஒரு மாணவனுக்கு அதிகபட்சம் கூடுதலாக ஒரு டியூஷன் வகுப்பு இருக்கும். வேலையில் இருப்பவர் என்றால், என்றைக்காவது ஒரு சனிக்கிழமை, அரை நாள் கூடுதலாக வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். ஆனால், இன்றைய நிலையே வேறு.

ஆக, எல்லோருமே சொல்கிறபடி காலம் ரொம்ப மாறிப்போச்சு. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் சாவகாசமாக சைக்கிள் துடைத்து, ஒரு டம்ளர் காபியை ஒரு மணி நேரம் உறிஞ்சிக் குடித்து, சாயந்திரம் அத்தை வீட்டுக்குப் போய் அரட்டை அடித்துப் பொழுதுபோக்குகிற வியப்புஎல்லாம் முடிந்துவிட்டது என்றே சொல்லலாம்.

இன்று - சனி, ஞாயிறுகளைக்கூட வாரம் முழுதும் தேக்கிவைத்திருந்த வேலைகளைச் செய் வதற்குச் செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி இல்லை என்றால், ஓய்வு எடுத்தல் என்பதும் இன்னொரு வேலை மாதிரி தோன்றுகிறது.

இதற்கு மத்தியில் எங்கே இருந்து இயற்கையை ரசிப்பது, ஜன்னல் ஓரக் காற்று வாங்குவது, ஓவியம் வரைவது, கவிதை வாசிப்பது, நாய்க் குட்டியைக் கொஞ்சுவது, குழந்தையின் குறும்புத்தனங்களை அனுபவிப்பது எல்லாம் நடக்கும்?

அதற்கென்று ஒரு நேரம் வேண்டும். மனசு லேசாக இருக்க வேண்டும் என்று இனிமேலும் பழைய தத்துவங்களைப் பேசிக்கொண்டு இருக்க முடியாது. சரி, வேலை வேலை என்று சர்வ சதா காலமும் அதே வேலையைச் செய்துகொண்டு இருப்பதால் சந்தோஷம் கிடைக்கிறதா? இந்தக் கேள்விக்கும் சரியான பதில் சொல்ல முடிவது இல்லை.

உண்மையில் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்குதல் என்பது இன்றைக்கு நடைமுறைச் சாத்தியங்கள் குறைவான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. காலம் மாறுவதற்கு ஏற்ப சித்தாந்தங்களும் மாறித்தான் ஆக வேண்டும். வேலை எல்லாத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு இரண்டு நாட்கள் கொடைக்கானலோ, குலுமணாலியோ போய் நிம்மதியாக இருந்துவிட்டு வர வேண்டும் என்று அடிக்கடி தோன்றும். அப்படியே காலையில் லேட்டா எந்திரிச்சு, மிதமான குளிர்ல ஒரு வாக்கிங் போய்ட்டு ரோட்டு ஓரக் கடையில சூடா டீ குடிச்சுக்கிட்டே இயற்கையை ரசிக்க வேண்டும் என்று எண்ணற்ற முறை நாம் திட்டம் போட்டு இருக்கலாம்.

திட்டமிட்டபடி சம்பந்தப்பட்ட இடத்துக்குப் போனாலும் மனசு நிம்மதியாக இருக்கிறதா? கொரியர் அனுப்பச் சொன்னேனே... அனுப்பி இருப்பானா, இல்லையான்னு தெரியலையே? நான் பாட்டுக்கு கொடைக்கானலுக்கு வந்துட்டேன். அந்த ரமேஷ் பய இந்த ரெண்டு நாள்ல மாங்கு மாங்குனு மனப்பாடம் பண்ணிடுவானா என்று மனசு பலவாறாக மேயும்.

விஷயம் ரொம்ப சிம்பிள், 'வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்க முடியாது. வாழ்க்கை என்பதே அனுபவித்தலுக்கு உரியதுதான்'. மாறி இருக்கும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப நமது சித்தாந்தங்களையும், வேலை கெடாமல் சந்தோஷமாகவும் இருப்பதற்கான உத்தியையும் கற்றுக்கொள்வதுதான் உத்தமம்.

ஒருவர், நேரம் காலம் தெரியாமல் வேலை செய்கிற பேர்வழி. வாழ்வின் எந்த அழகியலையும் அனுபவிக்க அவரால் முடியவில்லை. என்னடா வாழ்க்கை இது என்று விரக்தி அடைந்த அவர், சந்தோஷமாக இருப் பது எப்படி என்ற ரகசியத்தை எப்படியாவது கண்டு பிடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அதற்காக ஒரு ஞானியைச் சந்திக்கக் கடும் தடை களைத் தாண்டி அவரது இருப்பிடத்துக்கு வந்து சேர்ந் தார். இயற்கை எழில் சூழ்ந்த ஒரு மலையில், அரண் மனை போன்ற ஒரு மாளிகையில் அந்த ஞானி வாழ்ந்து வந்தார்.

வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள், மிக அழகான ஓவியங்கள், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப் பட்ட கலைப்பொருட்கள் என அந்த மாளிகை ரொம்பவே வசீகரமாக இருந்தது. ஞானியைச் சந்திக்கப் பெரிய கூட்டம் காத்திருந்ததால் மூன்று மணி நேரம் பொறுமையாக இருந்து ஞானியிடம் பேசினார் சந்தோ ஷத்தின் ரகசியத்தைத் தேடியவர்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அந்த ஞானி, "நீ முதலில் எனது மாளிகையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வா. பிறகு, பதில் சொல்கிறேன்" என்றார்.

"இதோ கிளம்பிவிட்டேன்" என்று எழுந்தவரிடம் ஞானி சொன்னார், "ஒரு நிமிடம், இதோ இந்த ஸ்பூனை உங்கள் வாயால் பிடித்துக்கொள்ளுங்கள்... அதில் இருக்கிற எண்ணெய் சிந்திவிடாமல் சுற்றிப் பார்."

மாளிகையைச் சுற்றிப்பார்த்துவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ஞானியிடம் வந்தார் அந்த மனிதர். இப்போது ஞானி அவரிடம், "என் படுக்கை அறையில் ரவிவர்மாவின் ஓவியம் இருந்ததே, அது எப்படி இருந்தது?" என்று கேட்டார்.

"மன்னியுங்கள் சுவாமி, நான் அதைக் கவனிக்கவில்லை" என்றார் அந்த மனிதர்.

"அது போகட்டும், மாடிக்குச் செல்லும் வழியில் இருந்த ராமாயண வாசகங்கள்? கிரேக்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒளி விளக்குகள்? நூலக ஜன்னல் வழியே தெரியும் பரமானந்தர் கோயில்?"

எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான்... "மன்னியுங்கள், நான் அதைக் கவனிக்கவில்லை."

"இரண்டு மணி நேரம் என்னதான் செய்தீர்கள்?" என்றார் ஞானி.

"இதோ இந்த ஸ்பூனில் இருக்கிற எண்ணெய் சிதறாமல் பார்த்துக்கொண்டேன்" என்றார் அந்த மனிதர்.

"போகட்டும்... இப்போதும் அதே ஸ்பூனோடு எல்லா வற்றையும் சுற்றிப்பாருங்கள்... அனைத்தையும் ரசித்துப் பாருங்கள்" என்று ஞானி அவரை அனுப்பிவைத்தார்.

இந்த முறை ஞானியிடம் வந்த அவர், சுவாமி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னார். "அது சரி, ஸ்பூனில் இருந்த எண்ணெய் எங்கே?" என்றார் ஞானி. "மாளிகையைச் சுற்றிப் பார்க்கிற சுவாரஸ்யத்தில் எண்ணெய் சிந்திவிட்டது" என்றார் அந்த மனிதர்.

"எண்ணெயும் சிந்தாமல், சுற்றி இருப்பதை ரசிக்கவும், அனுபவிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். மாறாக, ரசிப்பதில் கவனம் செலுத்தினால் எண்ணெய் சிதறும் என்று தர்க்கம் செய்யாதீர்கள். அதுதான் சந்தோஷத்தின் ரகசியம்" என்றார் ஞானி.

இது கதைக்கு வேண்டுமானால் சாத்தியம், யதார்த்த வாழ்க்கையில் இதெல்லாம் நடக்காது என்று மறுபடியும் சண்டைக்கு வராதீர்கள். வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப சில விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. அதற்காகப் பழகிக் கொள்ளத்தான் வேண்டும்.

பணிச் சுமைகளுக்கு மத்தியில் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று திட்டமிடுவதற்கு முன்னதாக, வேலையும் கெடாமல் வாழ்க்கையையும் அனுபவிக்க முடியும் என்று நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை... வேலைப்பளு, வாழ்க்கையை அனுபவித்தல் இந்த இரண்டு விஷயங்களைச் சமன் செய்து கொள்வது குறித்த அறிவைத் தரும்.

சந்தோஷமாக இருப்பது எப்படி என்று தனியாக ஒரு பட்டியல் போட முடியாது. ஞாயிற்றுக்கிழமை வரும் வரை காத்திருக்கவும் வேண்டியது இல்லை. இந்த நாள், இந்த நிமிடம் எப்படி இருக்க வேண்டும் என்று நாம்தான் முடிவு செய்கிறோம்.

எல்லா வேலைகளையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு ஒருநாள் ஒய்யாரமாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிற அந்த நாள் வரப்போவது இல்லை. வாழ்க்கை மாறிவிட்டது. பணி முறைகள், பொறுப்புகள், நடைமுறைகள் மாறிவிட்டன. நாமும் மாறிக்கொள்வோம்.

இவ்வளவு சொல்லிவிட்டீர்கள்... எண்ணெயும் சிந்தாமல், மாளிகையின் அழகையும் ரசிப்பதற்கான உத்தி என்னவென்றும் சொல்லிவிடுங்கள் என்று யாரிடமும் கேட்காதீர்கள். உங்களிடமே கேளுங்கள். உங்களைப்பற்றியும் உங்கள் சூழ் நிலைகள்பற்றியும் உங்களைவிட யாருக்கும் அதிகமாகத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

நினைவில் இருக்கட்டும்... வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று நேரம் ஒதுக்க முடியாது. வாழ்க்கையே அனுபவித்தலுக்கு உரிய ஒன்றுதான்!

நீயும்... நானும்! - கோபிநாத்

2011-ம் ஆண்டில் உலக அளவில் செல்போன்வைத்திருக்கும் இளைஞர்களில் ஐந்தில்



ஒருவர் இந்திய இளைஞராக இருப்பார் என்கிறது ஒரு கணக்கு. இப்போதும்கூட செல்போனின் மிகப் பெரிய சந்தையாக விளங்குவது இந்தியாதான். குறிப்பாக, இந்திய இளைஞர்களின் செல் போன் மார்க்கெட் மட்டும் 21 மில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நம்மைவிட அதிகமான பொருட்களைத் தொடர்ந்து கண்டுபிடிக்கும் சீனாவில், 22 கோடியே 55 லட்சம் இளைஞர்களிடம் செல்போன் இணைப்புகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் 28 கோடியே 10 லட்சம் இணைப்புகள் இளைஞர்கள் வசம் உள்ளன. உலகின் மிகப் பெரிய, 'இளைஞர்களுக்கான செல்போன் சந்தை' இந்தியாதான். அடுத்த ஆண்டு இந்திய அளவில் செல்போன்வைத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த அமெரிக்காவின் மக்கள் தொகையைவிட அதிமாகிவிடும். 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை இப்போது இல்லை. செல்போன் என்பது இந்திய இளைஞர்களிடம், அவர்கள் உடலின் ஓர் அங்கமாகவே மாறி இருக்கிறது.

ஓர் அத்தியாவசியமான தகவல் தொடர்புச் சாதனம் அதிகமான இளைஞர்களின் கையில் இருக்கிறது என்பது தேசம் வளர்ந்து இருப்பதன் அடையாளங்களில் ஒன்றுதான். ஆனால், இந்த செல்போனை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதுதான் முக்கியமான கேள்வி.

ஒரு சராசரி இந்திய இளைஞர் ஒரு நாளைக்கு செல்போனில் நான்கு மணி நேரம் செலவிடுகிறார் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. அடுத்தவருக்கு போன் செய் வது, தனக்கு வருகிற அழைப்புகளுக்குப் பேசுவது, FM கேட்பது, SMS செய்வது செல்போனில் கேம்ஸ் விளையாடுவது, அதில் இருக்கும் வசதிகள் குறித்துத் தெரிந்துகொள்வதற்காக அதனை ஆய்வு செய்வது எனப் பல விஷயங்கள் இதில் அடக்கம்.

'செல்போன் இல்லைன்னா எனக்குக் கை ஒடிஞ்சதுபோல இருக்கும்!' என்று சொல்வது இப்போது சகஜமான டயலாக். இளைஞர்கள் என்று இல்லை; 'செல்போன் அடிக்ஷன்' என்பது அமெரிக்க அதிபர் ஒபாமா வரை நீண்டிருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்க அதிபர் செல்போன் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், தனக்குப் பிடித்த ஒரு குறிப்பிட்ட வகை செல்போன் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்று அவர் சொன்னதால், பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய ஒரு செல்போன் ஒபாமாவுக்காக வடிவமைக்கப்பட்டு அவருக்குக் கொடுக் கப்பட்டுள்ளது.

'எந்தத் தொழில்நுட்பக் கருவியும், அது எந்தக் குறிப் பிட்ட தேவைக்காக உருவாக்கப்பட்டதோ, அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்' என்பார்கள். இந்திய இளைஞர்கள் மத்தியில் அது, அவ்வாறான மதிப்பீட்டில் பயன்படுத்தப்படுவது இல்லை என்பதே உண்மை. இல்லை என்றால் எதற்காக நான்கு மணி நேரம் தேவைப்படப்போகிறது.

அர்த்தம் இல்லாமல் பேசாதீர்கள். 'செல்போன் எவ்வளவு பயனுள்ள கருவி தெரியுமா? அதனால், எனக்கு எவ்வளவு வேலை நடக்கிறது தெரியுமா?' உண்மைதான். ஆனால், நம்மை அறியாமல் அதில் நமது நேரம் எவ்வளவு விரயமாகிறது என்ற கணக்கீடு பதற்ற மாகவே இருக்கிறது.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களை ஒரு முறை பார்க்கச் சென்று இருந்தபோது, அவர் கையில் மிகச் சாதாரணமான, நவீன வசதிகள் அதிகம் இல்லாத ஒரு செல்போன் இருந்ததைப் பார்க்க முடிந்தது. அதுபற்றி அவரிடம் கேட்டேன் 'செல்போன் என்பது பேசுவதற்காக. அதற்கு இந்த மாடலே போதும்!' என்றார்.

சிலர் தனது செல்போனில் எதையாவது செய்துகொண்டே இருப்பார்கள். அழைப்பு வந்தாலும், வராவிட்டாலும் அதனை எடுத்துப் பார்ப்பார்கள், அதில் இருக்கிற ஒரு சிறப்பு வசதியைத் திறந்து உள்ளே போய் வருவார்கள். பேன்ட் பாக்கெட்டில் இருந்து சட்டைப் பாக்கெட்டுக்கு மாற்றுவார்கள். கையில் செல்போனை வைத்துக்கொண்டே அதைத் தேடுவார்கள்.

குளிக்கப்போகும்போது, கழிவறைக்குள் செல்லும்போது, சாப்பிடும்போது, தூங்கும்போது இப்படி எல்லா நேரங்களிலும் அது தன்னுடனேயே இருக்க வேண்டும்... இருந்தாக வேண்டும். அவசரமாக, அவசியமாக ஓர் அழைப்பை எதிர்பார்த்துக் காத்து இருக்கும் நிலையில், இந்த அணுகுமுறை சரிதான். ஆனால், இதுவே நிரந்தப் பழக்கமாக மாறிப்போவது செல்போன் அடிக்ஷன் என்ற மனோவியல் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. அது, செல்போன் இல்லாமல் என்னால் இயங்க முடியாது என்ற நிர்ப்பந்த நிலைக்கு நம்மைத் தள்ளிவிடுகிறது.

முக்கியமான விஷயமாக யாருடனாவது பேசிக்கொண்டு இருக்கும்போது என் செல்போன் எங்கே இருக்கிறது? ஏதாவது அழைப்பு வந்து இருக்குமா? யாராவது SMS அனுப்பி இருக்கிறார்களா? என்னாச்சு தெரியலையே என்று மனசுக்குள் எதிர்பார்ப்பும் பதற்றமும் கலந்த எண்ண ஓட்டம் இருக்கிறது என்றால், நிச்சயமாக செல்போனிடம் நீங்கள் அடிமைப்பட்டுக்கிடக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

தூரங்களைக் குறைக்கவும், செயல்பாடுகளின் வேகத்தை அதிகரிக்கவும் கண்டறியப்பட்ட ஒரு மிகச் சிறந்த அறிவியல் படைப்பு, ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்தை அபகரிக் கிறது என்றால், அதைவிட ஆபத்து வேறொன்றும் இல்லை.

நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை, இந்த செல்போன் என்ற கருவி இல்லாமல்தான் நமது வேலைகள் நடந்துகொண்டு இருந்தன. ஆனால் இன்று, 'இந்திய எல்லையில் இருந்து போருக்கு வரச் சொல்லி எப்போது வேண்டு மானாலும் எனக்கு போன் வரலாம்' என்கிற மாதிரியான படபடப்போடு செல்போனையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

செல்போன் பயன்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிற ஒரு நண்பர் சொன்ன பயிற்சி இது. தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு, 10 நிமிடங்கள் ஒதுக்குங்கள். உங்க ளுக்கு, அன்று காலையில் இருந்து இரவு வரை தொலைபேசி அழைப்புகள் யார், யாரி டம் இருந்து வந்திருக்கின்றன என்று பாருங் கள். அதில் எத்தனை அழைப்புகள் பயன் உள்ளவை? எத்தனை அழைப்புகள் உங்கள் நேரத்தைத் தின்றவை என்று பட்டியலிடுங்கள். அதேபோல் நீங்கள் செய்த போன் கால்களிலும் உபயோகமானவை எத்தனை, அர்த்தம் இல் லாதவை எத்தனை என்று கணக்கிடுங்கள்.

இதெல்லாம் ஒரு வேலையா என்று தோன் றும்... இருந்தாலும், தொடர்ந்து ஒரு வாரம் இதைச் செய்துபாருங்கள். இந்த வேலையைச் செய்யும்போது நமக்கே நாம் அர்த்தமற்று அரட்டை அடித்துக்கொண்டு இருந்த நேர அளவுகள் தெரிய வரும்.

'நான் ஃப்ரீயா இருந்தேன். அதான் போன் செய்தேன்... என்னடா பண்ணிட்டு இருக்கே?', 'சும்மா, ஜஸ்ட் லைக் தட் கால் பண்ணினேன்', 'ஏன்டி இந்த கிரிஜா பொண்ணு ரொம்பதான் பந்தா பண்றா!', 'செம போர் அதான்டி உனக்கு போன் பண்ணினேன்', 'எனக்கு லஞ்ச் டைம் நீ என்ன பண்றேன்னு கேட்கலாம்னுதான் போன் பண்ணினேன்', 'அந்தப் படம் செம மொக்கையாம்ல' - இப்படித் தினந்தோறும் எத்தனை அழைப்புகள் வருகின்றன என்பது கண்கூடாகத் தெரியும்.

நண்பர்கள் யாராவது சும்மா போன் பண்ணினா பேசுவது இல்லையா? அப்புறம் எதுக்கு செல்போன் என்று தோன்றலாம். இல்லை என்று மறுக்கவே இல்லை. ஆனால், 'நான் வெட்டியா இருக்கேன். அதான் உனக்கு போன் பண்ணேன்' என்று சொல் கிறவர்கள் உங்கள் நேரத்தை மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம். 'எனக்குப் பொழுது போகவில்லை என்றால், இவனுக்கு போன் பண்ணலாம்... பொழுதுபோகும்' என்ற எண்ணத்தை எல்லா போன் அழைப்புகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருப்பதன் மூலம் நாமே உருவாக்குகிறோம்.

இந்த ஒரு வாரப் பயிற்சியில் உங்களை ஒரு பொழுதுபோக்குக் கருவியாகப் பயன்படுத்துபவர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கொஞ்சம் தூரத்தில் வையுங்கள். உங்களுக்கு வரும் எல்லா அழைப்புகளையும் எடுத்துப் பேச வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.

செல்போன் என்ற கருவி உங்கள் வசதிக்கானது. உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் நேரத்தை விரயம் செய்ய ஒருவரை அனுமதிக்கிறீர்கள் என்பது உங்களை நீங்களே அவமரியாதை செய்துகொள்வதற்குச் சமம்.

இந்த ஒரு வாரப் பயிற்சிக்குப் பிறகு, யார் அழைப்புக்கு எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்பது விளங்கும். நம்மை அடுத்தவர் எப்படி அணுக வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். ஏதோ ஒரு வேலையாக இருக்கும்போது வருகிற போன் அழைப்பைத் தேர்வு செய்து எடுப்பதற்கும், தேவையான அளவு மட்டும் பேசுவதற்கும் இந்தப் பயிற்சி உங்களுக்கு உதவலாம்.

உங்கள் வேலைக்கு உதவுகிற, வாய்ப்புகளை வழங்குகிற, உங்கள் பிரச்னைகளைத் தீர்க்கிற அழைப்புகளைத் தேர்வுசெய்து பேசுங்கள். இல்லை என்றால், நேரத்தைப் போக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் தேர்வாக நீங்கள் மாறிப்போவீர்கள்.

ஒரு கருவியின் நோக்கம் எதுவோ, அந்த நோக்கத்துக்காக மட்டும் அதைப் பயன்படுத்தும் வரை ஆபத்து இல்லை. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பணம் நேரம்தான். அதை 'தேமே' என்று செலவிடுவது நியாயமற்றது.

2011-ல் இந்திய இளைஞர்கள் எல்லார் கையிலும் செல்போன் வரட்டும். அது நம் வளர்ச்சியின் அடையாளம். அதை மிகச் சரியாகக் கையாள்வதற்கான நெறி மேலும் மேலும் வளர வேண்டும். அதுதான் நாம் மென்மேலும் வளரப்போவதற்கான அடையாளம்.

எனக்கு, உங்களுக்கு எல்லோருக்கும் நேரம் முக்கியம். கடந்துபோன நேரத்தை மீட்கும் சக்தி யாருக்கும் இல்லை. இதைப் படித்து முடித்துவிட்டு, 'கோபி இந்த வாரம் விகடன்ல செல்போன்பத்தி ஒரு கட்டுரை எழுதி இருக்காரு பார்த்தியா...' என்று செல் போனில் நீண்ட நேரம் பேசாதீர்கள். ஒரு SMS அனுப்பி ஒரு நிமிடத்தில் வேலையை முடியுங்கள்.

எந்த அறிவியல் படைப்பும்
நம்மை ஆளக் கூடாது...
நாம்தான் அதை ஆள வேண்டும்!

நீயும்... நானும்! - கோபிநாத்

அது ஆளுமைத் திறன் மேம்பாடு குறித்த ஒரு பயிற்சி வகுப்பு. என் நண்பர் ஒருவர்



மேடையில் பேசிக்கொண்டு இருந்தார். 1,000 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக்காட்டி, 'இது யாருக்கு வேண்டும்?' என்றார். எல்லோரும் கையை உயர்த்தினார்கள்.

'நிச்சயம் தருகிறேன்...' எனச் சிரித்த நண்பர், புத்தம் புதிய அந்த 1,000 ரூபாய் நோட்டை கொசகொசவெனக் கசக்கினார். குப்பைக் காகிதம்போல அதை மேடையின் ஓரத்தில் வீசினார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. 'இப்போ சொல்லுங்க, இந்தக் கசங்கின 1,000 ரூபாய் யாருக்கு வேண்டும்?' என்றார் மறுபடியும். எல்லோரும் கை தூக்கினார்கள்.



'ஓ... அப்படியா?' என்ற நண்பரின் அடுத்த செயல் அதிர்ச்சியாக இருந்தது. கசங்கிய கரன்சியைத் தன்ஷூவால் நசுக்கித் தேய்த்தார். எல்லோரும் கொஞ்சம் குழப்பமாகப் பார்த்தார்கள். நண்பர் இன்னும் சத்தமாகக் கேட்டார், 'யாருக்கு வேண்டும் இந்த ரூபாய்?' கூட்டத்தில் அப்போதும் எல்லோரும் கையை வேகமாக உயர்த்தினார்கள்.

நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார், 'இந்த 1,000 ரூபாய் நோட்டு இதுவரை உங்கள் வாழ்க்கையில் என்ன சொல்லிக் கொடுத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது ஒரு நல்ல வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தந்திருக்கிறது. நீங்களும் இந்த 1,000 ரூபாய் நோட்டு மாதிரிதான்!

இந்த வாழ்க்கையில் நீங்கள் பல்வேறு காரணங்களால், சூழ்நிலைகளால், எத்தனையோ அவமானங்களைச் சந்தித்து இருக்கலாம், ஏளனம் செய்யப்பட்டு இருக்கலாம், நசுக்கப்பட்டு இருக்கலாம், கசக்கித் தூக்கி எறியப்பட்டு இருக்கலாம். ஆனால், எது வானாலும் உங்களுக்கு மதிப்பு இல்லை, நான் எதற்கும் பயன்படாதவன் என்ற முடிவுக்கு மட்டும் வராதீர்கள்!' என்றார் புன்னகையுடன்.

'1,000 ரூபாய் நோட்டு எவ்வளவுதான் கசக்கப்பட்டாலும், நசுக்கப்பட்டாலும் அது தன் மதிப்பை இழக்கவில்லை. நீங்கள் கசங்கிய 1,000 ரூபாய் நோட்டையும் வேண்டும் என்றுதான் சொன்னீர்கள். அப்படியேதான் வாழ்க்கையும்... ஏதோ காரணத்தால் நிராகரிக்கப்பட்டாலும் உங்களுக்கான மதிப்பை நீங்கள் மதியுங்கள்!' என்பதுதான் நண்பரின் செய்தி.

நிறைய ஆளுமைப் பயிற்சி வகுப்புகளில்சொல்லப் படுகிற விஷயம்தான் இது. ஆனால், எத்தனை பேரால் இதைப் பின்பற்ற முடிகிறது என்பதுதான் கேள்வி.

நாம் நிராகரிக்கப்படுகிறபோது இரண்டு விஷயங்கள் தோன்றுவது இயற்கை. ஒன்று, 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' இன்னொன்று, 'நான் அவமானப்படுத்தப்பட்டுவிட்டேன்' என்று நினைப்பது.

எல்லோருக்குமே வாழ்க்கை எளிதாக அமைந்து விடுவது இல்லை. சாண் ஏறினால் முழம் சறுக்குகிற சங்கதி எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிற விஷயம்தான்!

இரண்டாவது, ரோட்டில் கிடக்கிற கல்லை யாரும் உரசிப்பார்ப்பது இல்லை, சட்டை செய்வது இல்லை. அது வைரக் கல்லாக இருந்தால், உரசிப் பார்க்கிறார்கள், உறுதியாக இருக்கிறதா என்று சோதிக்கிறார்கள். நீங்கள் மதிப்பான மனிதர் என்பதால்தான் நீங்கள் கசக்கப்படுகிறீர்கள்... நசுக்கப்படுகிறீர்கள். அந்த 1,000 ரூபாய் நோட்டைப்போல அவற்றை அவமானங்களாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.

யார் மிதித்தாலும், ஏளனம் செய்தாலும், உங்கள் மதிப்பு அதன் தரத்தை இழந்துவிடப்போவது இல்லை. உங்கள் திறன் அழிந்துவிடப்போவது இல்லை. அதற்கு என்று ஒரு விலை இருக்கிறது... அதை நம்புங்கள்.

ஒருவருக்கு நன்றாகப் பாட வரும். இன்னொருவருக்கு ஓவியம் கைகூடும். நடனம் சிலருக்குச் சிறப்பாக அமையும். எந்த ஒரு திறமையாக இருந்தாலும், அடுத்தவரின் பாராட்டைப் பெற்றால்தான், அதற்கு அங்கீகாரம்கிடைக் கிறது என்பதுதான் நம் எண்ணம். ஆழமாக யோசித்தால், உண்மை அதுவல்ல; உங்கள் திறன் மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பீடுதான் அதற்கான முதல் அங்கீகாரம்.

மைக்கேல் ஜாக்சனிடம் ஒரு நிருபர் கேட்டார், "உங்கள் நடனத்தை உலகம் இந்த அளவுக்குப் போற்றிப் பாராட்டும் என்று நீங்கள் நம்பினீர்களா?"

அதற்கு ஜாக்சன் அளித்த பதில் சுவாரஸ்யமானது. "நிச்சயமாக நம்பினேன். காரணம், மக்கள் என் நடனத்தை அங்கீகரிப்பதற்கு முன்னதாகவே, நான் எனது நடனத்தையும் அதன் நளினத்தையும் அங்கீ கரித்து இருந்தேன்!"

'உங்கள் திறனை முதலில் நீங்கள் அங்கீகாரம் செய்யுங்கள். ஒரு பார்வையாளனாக நின்று, உங்களைப் பாராட்டவும், விமர்சிக்கவும் பழகிக்கொள்ளுங்கள்' என்று உளவியல் புத்தகங்கள் பேசுகின்றன. நீங்கள் திறமையானவர் என்று அடுத்தவர் அங்கீ கரிப்பதன் முதல்படி நீங்கள் உங்களை அங்கீகாரம் செய்வதில் தொடங்குகிறது.

இந்த உலகம் எந்த மனிதரின் திறனையும் உடனடியாக ஏற்றுக்கொண்டு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது இல்லை. சவால்கள், அவமானங்கள் உதாசீனங்கள், ஏளனப் பார்வைகள்... இப்படி ஏகப்பட்ட நெருக்கடிகளைத் தாண்டியே அவர்கள் உயரத்துக்கு வந்திருக்கிறார்கள். மேற்சொன்ன விஷயங்களால் எது நடந்தாலும், உங்கள் திறன் மீது நீங்கள் வைத் திருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் குறைத்துக்கொள்ளாதீர்கள்.

இந்த விஷயத்தில் நாம் பின்பற்ற வேண்டிய இன்னொரு முக்கியமான தன்மை, நமது திறனை அங்கீகரிக்காதவர்களை, ஏளனம் செய்கிறவர்களை எதிரியாகப் பார்க்காமல் இருப்பது. அது கொஞ்சம் கஷ்டம்தான். அதற்குக் காரணமும் உண்டு. நமது திறனை அடுத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைப் பாராட்ட வேண்டும் என்கிற ஆசை நமக்குப் பழக்கப்படுத்தப்பட்ட ஒன்று. வெளியில் இருந்து நாம் நினைக்கிறபடியான ஒரு பாராட்டு கிடைத்தால் மனசு குதூகலமாகிறது. இன்னமும் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகமாகிறது. இந்த விருப்பம் நியாயமானதுதான். ஆனால், பாராட்டுக்குப் பதிலாக அவமானம் கிடைத்தால் நொறுங்கிவிடுகிறோம்.

நம்மை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வெளியில் இருந்து ஓர் உந்துதல் எப்போதும் தேவைப்படுகிறது. உண்மையில், அந்த உந்துதல் நம் உள்ளுக்குள் இருந்து வர வேண்டும். என் திறன் மீது நான் வைத்திருக்கும் மதிப்பீட்டின் வெளிப்பாடாக அது வர வேண்டும். வெளியில் இருந்து கிடைக்கிற உந்துதல் எல்லாம் போனஸ்தான்.

வெளியில் இருந்து கிடைக்கிற ஊக்குவிப்பைவிட, உள்ளே இருந்து கிடைக்கும் ஊக்குவிப்பு அதிக சக்திகொண்டதாக இருக்கிறது. அது நிரந்தரமானதும்கூட. ஆனால், அது பெரும்பாலும் நடப்பது இல்லை.

நியாயமாக யோசித்துப்பாருங்கள்... வெளியில் இருக்கிற ஒரு மனிதர் நம் திறனை மதித்து நம்மைப் பாராட்ட வேண்டும், ஊக்குவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அதே வேலையை நமக்கு நாமே செய்துகொள்வது சிரமமா என்ன?

நமது திறனை நாம் மதித்தால், இந்த உலகமும் அதை ஒருநாள் மதிக்கும். நமது அறிவை நாமே சந்தேகித்தால், இந்த உலகமும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கும்.

நாம் ஒவ்வொருவரும் 1,000 ரூபாய் நோட்டுதான்!

நீயும்... நானும்! - கோபிநாத்

கல்லூரிகளுக்கோ, கருத்தரங்குகளுக்கோ, பயிற்சி வகுப்புகளுக்கோ செல்கிறபோது



அடிக்கடி இந்தக் கேள்வியைக் கேட்பது உண்டு. ரொம்ப எளிதானதுதான். உலகிலேயே அதிகமான மக்கள்தொகைகொண்ட நாடு எது? - எல்லாரும் கோரஸாகச் சொல்வார்கள் சீனா என்று.

அடுத்த கேள்வி - உலகிலேயே இரண்டாவது பெரிய மக்கள்தொகைகொண்ட தேசம் எது? - உடனே பதில் வரும் 'இந்தியா'.

மூன்றாவது கேள்வி - இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகைகொண்ட நாடு எது? இப்போது பல்வேறு விதமான பதில்கள்.

ரஷ்யா, பிரேசில், பாகிஸ்தான், ஜெர்மனி, இந்தோனேஷியா, அமெரிக்கா. ஆளாளுக்கு ஒரு பதில் சொல்வார்கள்.

நீங்களும் வேண்டுமானால் எங்காவது கேட்டுப்பாருங்கள். 10 பேர் இருக்கும் இடத்தில் அநேகமாக ஒருவரோ, இருவரோதான் சரியாகப் பதில் சொல்வார்கள். 'அமெரிக்கா' என்று பதில் சொல்ல முடியாத அளவுக்கு இது கடினமான கேள்வி ஒன்றும் இல்லை. ஆனாலும், அந்தக் கேள்விக்கான பதிலை நாம் தேடுவது இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கேள்வியையே எழுப்புவது இல்லை.

உலகிலேயே அதிக மக்கள் சீனாவில் இருக்கிறார்கள். அடுத்தது நாம் இருக்கிறோம். அப்புறம் என்ன போதும்... போதும் இதற்கு மேல் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம் என்று இருந்துவிடுகிறோம். இந்த விஷயம்தான் என்றில்லை, எந்த ஒரு தகவலும் நமக்கென்று எல்லைக் கோடு. அந்தக் கோட்டைத் தாண்டுவதே இல்லை.

அறிதலிலும் தேடலிலும் அளவுகோல் எதற்கு? தெரிந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் ஒரு தொடர் பயணம். நான், நீங்கள் என நம்மில் பலரும் இந்தப் பயணத்தில் நம்மால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ, அதில் பாதி வேகத்தில்தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம். 'இது போதும்' என்று மனசுக்குள் எங்கேயோ மணி அடித்துவிடுகிறது.

என் செல்போனில் ஒரு பிரச்னை. எனக்குத் தெரிந்த செல்போன் விற்கும் கடை ஒன்றுக்குப் போனேன். இதைச் சரிசெய்ய சர்வீஸ் சென்டருக்குத்தான் போக வேண்டும் என்றார், அந்தக் கடையில் இருந்த நண்பர். அது வெகுதொலைவில் இருந்ததால், அருகில் எங்கேயாவது இதைச் சரிசெய்ய முடியுமா என்று கேட்டேன். இங்கே பக்கத்தில் போன் ரிப்பேர் பண்ணும் கடை எதுவும் இல்லை என்றார்.

என்ன செய்வது என்று தெரியாமல் கடையில் இருந்து வெளியே வந்து, வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். நண்பரின் கடையில் இருந்து சில கடைகள் தள்ளி போனைப் பழுதுபார்த்துத் தருகிற கடை இருந்தது. உடனே, நண்பருக்கு போன் செய்து "என்னங்க, பழுதுபார்க்கும் கடை இந்தப் பகுதியிலேயே இல்லை என்றீர்கள். இங்கே, பக்கத்திலேயே ஒரு கடை இருக்கிறதே" என்று கேட்டேன்.

அவரும் ஆச்சர்யமாக அப்படியா என்றார். ஸாரிங்க, நான் கவனித்ததில்லை என்று விளக்கம் சொன்னார். இத்தனைக்கும் அவர் தினமும் பயணிக்கிற பகுதி அது. 'என் வேலை போன் விற்பது. அவ்வளவுதான்' என்கிற எண்ணமே அது தொடர்பான இன்ன பிற விஷயங்களைத் தேடுகிற தாகத்தைத் தடை செய்துவைத்துஇருக்கிறது. என் துறையோடு தொடர்புடைய ஏனைய தகவல்களைத் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டியதும், புரிந்துகொள்ள வேண்டியதும் கூடுதல் வேலை என்று நினைப்பதால்தான் அந்த ஆர்வம் இருப்பது இல்லை.

இந்த உலகத்தில் எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்வது சாத்தியம் இல்லாமல் போகலாம். குறைந்தபட்சம் நாம் இருக்கிற அல்லது நம்மை ஈர்க்கிற விஷயத்தோடு தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் தேடுவதுதான் நம்மை உயரத்துக்குக் கொண்டுபோகிறது.

அந்தத் தேடல்தான் நமக்குப் பல்வேறு தளங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் உங்களைத் தனிச் சிறப்பு பெற்ற மனிதராக அடையாளம் காட்டுகிறது. வாய்ப்புகளை உங்கள் வாசலில் வந்து கொட்டுகிறது. இவை எல்லாவற்றையும் விட, ஆத்ம திருப்தியைக் கொண்டுவந்து சேர்க்கிறது.

நான் பணி செய்யும் ஊடகத் துறையிலும் அப்படியான மனிதர்களைப் பார்த்து நான் வியந்தது உண்டு. எனது நண்பர் ஒருவர், ஒரு படைப்பு தொடர்பான அனைத்தையும் தெரிந்துவைத்திருப்பார். ஒரு நிகழ்ச்சிக்கான களத்தை உருவாக்குவதில் தொடங்கி, தொழில்நுட்பரீதியாக அதைச் செம்மைப்படுத்துவது வரை அத்தனையும் அவருக்கு அத்துப்படி.

அவரைப் பார்க்கிறபோது ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் இருக்கும். அவர் சொல்கிற விஷயத்தைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். இங்கு கவனிக்கத்தக்க மாற்றங்களைச் செய்தவர்கள் எல்லோரும் ஒவ்வொரு முறையும் தன்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடியவர்கள்தான். அப்படி ஓடுவதற்கான ஆர்வம் நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வதன் மூலமே கிடைக்கிறது. புதுப்பித்தல் என்பது 'தேடல்' மூலமே நடக்கிறது.

இந்தத் தேடல்தான் நம்மை முழுமையான மனிதன் ஆக்குகிறது. முழுமையான மனிதன் பல புதிய படைப்புகளை உலகுக்கு முன்வைக்கிறான். பலருக்கும் முன்னுதாரணமாக நிற்கிறான். நாம் நேசிக்கிற, பழிக்கிற மனிதர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் துறையில் பாண்டித்யம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.

என் வேலை கேஷியர். எனக்குப் பணம் எண்ணத்தான் தெரியும் என்று சொல்லிக்கொண்டு இருந்தால், உங்களைவிட வேகமாக பணம் எண்ணத் தெரிந்தவர் வந்தால் உங்கள் இடம் பறி போகும். நீங்கள் வங்கியில் இருந்தால் வங்கிச் சேவைகள், பணிகள் குறித்த தகவல்கள் உங்கள் விரல் நுனியில் இருக்கட்டும்.

தொடர்புத் தகவல்களைத் தேடுவது நமது பார்வையை விசாலமாக்குகிறது. இதில் புதிதாக என்ன செய்யலாம் என்று தூண்டுகிறது. போதும்... போதும்... என் வேலை எனக்குத் தெரியும் என்ற 'போதும் மனோபாவம்' நமது அறிவின் வேகத்தையும் ஆற்றலையும் முடக்கிப் போடுகிறது.

தொலைநோக்குப் பார்வைகொண்ட ஒரு தொழிலதிபர் எனது நண்பர். போன வாரம் அவரைப் பார்க்கச் சென்றபோது ஒரு தகவல் சொன்னார். "ஒருவர் மிகச் சிறந்த மனிதர் ஆவதைத் தடுப்பது அவருடைய மோசமான செய்கைகள் அல்ல; நான் 'சிறந்தது' என்ற இடத்துக்கு வந்துவிட்டேன், அது போதும் என்ற நினைப்புதான்."

எட்டாவது மாடிக்கு ஏறிப் போகிற எல்லா வாய்ப்பும் இருந்தும், மூன்றாவது மாடியின் பால்கனியில் காற்று வாங்கியே காலம் கழித்துவிடுகிறோம். இதில் எட்டாவது மாடி என்பது ஒரு துறையின் உச்சத்தைத் தொடுவதற்கான தகவல்களைத் தெரிந்துகொள்வது. மூன்றாவது மாடி என்பது இப்போது செய்துகொண்டு இருக்கும் வேலையோடு நேரடித் தொடர்பில் இருக்கும் விஷயத்தை மட்டும் தெரிந்துகொண்டு முடங்கிவிடுவது.

கடவுளோ, இயற்கையோ, நம்மைப் படைத்தது எதுவாக இருந்தாலும், நமக்கென்று ஒரு சிறப்புத் தகுதியோடுதான் படைக்கப்பட்டு இருக்கிறோம். அப்படி நமக்கு வழங்கப்பட்டு இருக்கும் வாய்ப்பை மரியாதை செய்யத் தொடர்ந்து தேட வேண்டியது முக்கியமாகிறது.

விஜய் டி.வி. வழங்கும் விருதுகளில், செவாலியே சிவாஜி கணேசன் விருது இந்த முறை ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்வு நடிகர் திலகத்தின் இல்லத்திலேயே நடந்தது.

அங்கு அவரிடம் சில கேள்விகள் கேட்கிற வாய்ப்பும் இருந்தது. அந்த நிகழ்வுக்குப் பிறகு, நடிகர் திலகம் இல்லத்தில் ஓர் அறையில் இருந்த ரஜினிகாந்த் என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். 15 நிமிடங்கள் என்னோடு பேசினார். எந்த அலங்காரங்களும் இல்லாத இயல்பான பெருந்தன்மை அதில் இருந்தது.

"நீங்க சிவாஜி சார் பற்றிப் பேசியவிதமும் உங்க மொழி நடையும் எனக்கு பிரமிப்பா இருந்துச்சு. ஆண்டவன் ஒவ்வொருத்தருக்கும் ஒரு விஷயத்தைக் கொடுத்திருக்கார்... உங்ககிட்ட ஒரு விஷயம் தந்திருக்கார்... நீங்க அதுக்கு விசுவாசமா இருக்கணும். இன்னும் எத்தனை வருஷம் கழிச்சு நீங்க பேசினதைக் கேட்டாலும் எனக்குப் பிரமிப்பா இருக்கணும். அதுக்கு ஏதாச்சும் தேடிக்கிட்டே இருங்க" என்றார்.

இயற்கையும் கடவுளும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றைத் தந்திருக்கிறார். அதை வைத்துக்கொண்டு முழு மனிதனாக உருவெடுக்க வேண்டியதுதான் நமது வேலை.

என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று... ரஜினி அவர்கள் என்னை அழைத்துப் பேசியது. நாம் யாருமே மறந்துவிடக் கூடாத ஒரு விஷயம்... அவர் சொன்னது.

'தேடிக்கொண்டே இருப்போம், திசைகள் எல்லாம்!

நீயும்... நானும்! - கோபிநாத்

தன்னை அவமானப்படுத்திய எதிரியிடம் கோபம் கொப்பளிக்க ஹீரோ சொல்வார்,

'இந்த நிமிஷத்துல இருந்து நீ எனக்கு எதிரி. உன்னை ஒழித்துவிட்டுத்தான் என் அடுத்த வேலை' என்பார். தியேட்டரில் கை தட்டல் சத்தம் காதைப் பிளக்கும். ஆத்திரத்திலும் கோபத்திலும் ஹீரோ எடுக்கும் முடிவை அனைவரும் ஆர்வத்தோடு வரவேற்கிறோம்.

கோபப்பட்டு உணர்ச்சிபூர்வமாகி எடுக்கப்படும் முடிவுகளில் ஒரு ஹீரோயிசமும், அதற்கு ஒரு சிறப்பு அந்தஸ்தும் இருப்பதாக நம்பியே வந்திருக்கிறோம். சினிமாவில் சரி, நிஜ வாழ்க்கையில் கோபத்தில் எடுக்கும் முடிவுகளும் தீர்மானங்களும் சரியாக இருக்குமா? அந்தக் கணத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுகள், ஆய்வுகள் அற்ற... புரிதல் அற்ற அந்தத் தீர்மானம் எத்தகைய விளைவுகளை உருவாக்கும்?

ஆனாலும், பல முடிவுகள் கோபத்திலும் அது தரும் உந்துதலிலும்தான் எடுக்கப்படுகின்றன. அப்படி எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இங்கு பல கதைகளும் உண்டு. கொஞ்சம் நிதானமாக யோசித்தால், நாமும் பல நேரங்களில் அத்தகைய முடிவுகளை எடுத்து சூடு போட்டுக்கொண்டது ஞாபத்துக்கு வரலாம்.

கோபம்பற்றிப் பல்வேறு விதமான பார்வைகள் உண்டு. அவரவரின் அனுபவம், சுற்றுச்சூழல், சமூக அழுத்தம் இப்படிப் பல காரணிகளைப் பொறுத்து அந்தப் பார்வைகள் அமையும். கோபமே படக் கூடாது. சாந்தமாக இருங்கள். கோபப்படலேன்னா வேலை நடக்காது. சரியான இடத்துல, சரியான நேரத்துல கோபப்படணும் - கோபப்படலாம். ஆனா, அதை வெளிப்படுத்தக் கூடாது - கோபத்தை வெளிப்படுத்தலேன்னா அது மனசுக்குள் தங்கிச் சிக்கலை உண்டாக்கிவிடும் - இப்படி நிறையப் பார்வைகள்.

கோபம், சுயநலத்தின் வெளிப்பாடு என்று ஒரு பார்வையும் உண்டு. அவன் மேல எனக்கு செம கடுப்பு. ஆத்திரம்னா அவ்வளவு ஆத்திரம். போனைப் போட்டு திட்டுதிட்டுனு திட்டித் தீர்த்துட்டேன். இப்போதான் மனசு நிம்மதியா இருக்கு என்று சிலர் சொல்வார்கள். அடுத்தவரின் மனநிலையும் சூழலும் என்ன என்ற கவலைகள் எதுவும் இன்றி என் கோபத்தைக் கொட்டியாயிற்று.

கோபத்திலும் 'காரியக்கார' கோபம் ஒன்று உண்டு. எவரால் தனக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாதோ, அவருக்கு எதிராகச் சேர்த்துவைத்திருக்கும் ஆத்திரம் அனைத்தும் அனலாகக் கொப்பளிக்கிற உத்தி அது.

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். எதாவது கோபத்தில் இருந்தால், போனை எடுத்து எடுத்துப் பார்ப்பார். ஏன் இப்படிச் செய்கிறார் என்று ஒருநாள் விசாரித்தேன். 'அது ஒண்ணுமில்லை... நான் கோபமாக இருக்கிற நேரத்தில் கிரெடிட் கார்டு வேணுமா, லோன் வேணுமா என்று முகம் தெரியாத ஆட்கள் போன் செய்தால், அவர்களைத் திட்டுத் திட்டு என்று திட்டித் தீர்ப்பேன். எனக்கு மனசுல இருக்கற பாரம் எல்லாம் குறைந்துபோகும். அதான்' என்றார்.

எதிர்ப்பதற்கு வலு இல்லாத, முகம் தெரியாத மனிதர்களிடம் கோபத்தைக் காட்டுவது அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கான வடிகால் என்று அதை ஓர் உத்தியாகக் கையாளுகிற புத்திசாலி கோபக்காரர்கள் நிறைய உண்டு. கஸ்டமர் சர்வீஸில் இருந்து போன் செய்தவர், போனை வைத்தபிறகு அநேகமாக ஆபீஸ் பையனை அழைத்து காட்டுக் கத்தல் கத்தியிருப்பார்.

ஒரு தனி மனிதரின் கோபம் அவரோடு நின்றுவிடுவது இல்லை. அது ஒரு சங்கிலித் தொடர்போல நிறையப் பேருக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. நிறைய மனங்களைக் காயப்படுத்துகிறது. தன் கோபத்தை வெளிப்படுத்த வலு இல்லாத ஒரு எதிராளியைத் தேடுகிற காரியக்கார கோபவாதிகளாகத்தான் நிறையப் பேர் இருக்கிறோம்.

மேலதிகாரி தன்னிடம் காட்டிய கோபத்தை அப்பா, அம்மா மீது காட்டுகிறார். அம்மா, பிள்ளை மீது காட்டுகிறார். அந்தப் பிள்ளை, தன் தம்பி மீதோ, தங்கை மீதோ காட்டுகிறார். அவர் அந்தக் கோபத்தைத் தன் நண்பரிடம் வெளிப்படுத்துகிறார். அவர் தன் ஆத்திரத்தை இன்னொருவரிடம் கொட்டுகிறார். அந்த இன்னொருவர் தன் கோபத்தை வெளிப்படுத்த, அடுத்த ஆளைத் தேடுகிறார்.

உங்கள் ஒருவரின் கோபம் உங்களைச் சார்ந்தவர்களை மட்டுமல்ல; உங்களோடு தொடர்பில் இல்லாத பலரையும் சங்கடத்துக்கு ஆளாக்குகிறது. கோபம்பற்றி இவ்வளவு ஆராய வேண்டாம்... கோபம் வந்தால் யாரையாவது பிடிச்சுத் திட்ட வேண்டியதுதான். அப்புறம் மன்னிப்பு கேட்டுக்கலாம் என்ற மனோபாவமும் உண்டு. மன்னிப்புக் கேட்பதால், உங்கள் மனசு சாந்தம் அடையலாம். ஆனால், சம்பந்தப்பட்டவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?

கோபம்பற்றி பிரபலமான ஒரு கதை உண்டு. நீங்களும் கேள்விப்பட்டு இருக் கலாம். ஒரு பையனுக்கு பயங்கரமான கோபம் வருமாம். ஆத்திரம் வந்தால் அனைவரையும் திட்டித் தீர்ப்பார். அவரது கோபத்தைக் கட்டுப்படுத்த அவன் அப்பா ஓர் உத்தி சொன்னார்... 'உனக்குக் கோபம் வரும்போது எல்லாம் வீட்டின் பின்பக்கத்தில் இருக்கிற மரப்பலகையில் ஒரு ஆணி அடித்து வை' என்றார். மகனும் அப்படியே செய்ய ஆரம்பித்தார். கோபம் வருகிறபோது எல்லாம் சுத்தியலையும் ஆணியையும் எடுத்துக்கொண்டு மரப்பலகையை நோக்கிக் கிளம்பிவிடுவார். ஒரு நிலையில் மரப்பலகை முழுக்க ஆணிகளாக இருந்தன. ஒரு மனிதர் எவ்வளவு நாட்கள்தான் இப்படிச் செய்ய முடியும். ஆணி அடிக்கிற வேலையைச் செய்வதற்கு அலுத்துக்கொண்டு கோபத்தைக் குறைத்துவிட்டார் அந்த பையன்... கொஞ்ச நாளில் அவருக்குக் கோபமே வருவது இல்லை.

அப்பாவிடம் போய் சந்தோஷமாக தகவலைச் சொன்னார் மகன். அப்பா இப்போது இன்னொரு யோசனை சொன்னார். 'இனி, கோபம் வராத சமயங்களில் எல்லாம், அந்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கு' என்றார். சில நாட்களுக்குப் பிறகு அப்பாவிடம் சென்ற மகன், 'அப்பா, என்னோடு வந்து அந்த மரப் பலகையைப் பாருங்கள். இப்போது அதில் ஒரு ஆணிகூட இல்லை' என்றார்.

மரப்பலகையைப் பார்த்துவிட்டு அப்பா சொன்னார், 'மகனே, உனக்கு இப்போது கோபமே வருவது இல்லை. மகிழ்ச்சி. ஆனால், அத்தனை ஆணிகளையும் பிடுங்கிய பின்னரும் ஆணி அடித்த தடம் இருக்கிறதே அதை என்ன செய்ய முடியும்?' என்றார்.

நீங்கள் கோபப்பட்டதற்கும் கொட்டிய வார்த்தைகளுக்கும் மன்னிப்பு கேட்டுவிடலாம். ஆனால், அது ஏற்படுத்திய காயங்கள் மாறாது என்பதைச் சொல்கிறது இந்தக் கதை. இரவு நன்றாகக் குடித்துவிட்டு, கூட இருப்பவர்களிடம் வம்பிழுத்துத் திட்டிவிட்டு, மறுநாள் காலை மன்னிப்புக் கேட்கிற செயலுக்கும், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டு பிறகு, ஸாரி சொல்கிற குணத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

கோபத்தை எங்கே, எப்படி, யாரிடம் எந்த வகையில் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆய்ந்து அதன்படி கோபப்படுகிற சக்தி பெரும்பாலானவர்களிடம் இருப்பது இல்லை. கோபப்படாமல் இரு என்று பொத்தாம் பொதுவாக சொல்லித் தருகிற சமூகமும், ஒரு மனிதனால் கோபப்படாமல் இருக்க முடியாது என்பதைத் தெரிந்துகொண்டுதான் அதைச் சொல்கிறது. அப்படி ஒற்றை வரியில் சொல்லிவிடுவது எளிதாகவும் இருக்கிறது.

கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நிறைய உத்திகள் சொல்லித்தரப்படுகின்றன. ஆனாலும், எந்தக் குறுக்கு வழியும் கோபத்தைக் கையாள்வதற்கான நிரந்தர வழியைச் சொல்லித்தருவது இல்லை.

கோபம் வந்தால், தண்ணீர் குடியுங்கள், கோபம் வந்தால் 100 வரை எண்ணுங்கள், கோபம் வந்தால், தனி அறைக்குள் போய் அடைந்துகொள்ளுங்கள், கோபம் வந்தால், மெல்லிய இசை கேளுங்கள், கோபம் வந்தால், யோகா செய்யுங்கள், கோபம் வந்தால், டி.வி-யில் காமெடி பாருங்கள், கோபம் வந்தால், இளைத்தவன் யாராவது இருந்தால் அவனை எட்டி உதையுங்கள், கோபம் வந்தால், வெறித்தனமாக விளை யாடுங்கள்... இப்படி நிறைய வழிகள் உண்டு, கோபத்தைக் கட்டுப்படுத்த.

இதைவிட மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. 'கோபம் வந்தால், அதற்கான காரணத்தைக் கவனியுங்கள். கோப மனநிலையில் நீங்கள் ஒரு முடிவு எடுத்தால், அதனால் என்ன ஆகும் என்று யோசியுங்கள். அதற்கான ஒரு வாய்ப்பை மேற்சொன்ன உத்திகள் உங்களுக்கு வழங்கலாம். மற்றபடி, அவை தற்காலிக ஏற்பாடுகள்தான்'.

கோபத்தைக் கட்டுப்படுத்துவதைவிட நெறிப்படுத்துதல்தான் அவசியம். பொதுமைப்படுத்திச் சொல்வதுபோல, கோபம் ஒன்றும் கெட்ட குணம் இல்லை. அதுவும் ஆளுமையின் அடையாளம்தான். உங்கள் கோபம் எதை நோக்கியது என்பதுதான் கேள்வி.

அது ஓர் ஆணவத்தின் வெளிப்பாடா? அதிகாரத்தின் துணிச்சலா? வெற்று வேடமா? சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான முயற்சியா என்பதை அறிந்துகொள்ள வேண்டியதுதான் அவசியம்.

பாரதிக்குக் கோபம் இருந்தது, பெரியாருக்குக் கோபம் இருந்தது, நேதாஜிக்குக் கோபம் இருந்தது, சே குவேராவுக்குக் கோபம் இருந்தது... அவை எல்லாம் அர்த்தமற்ற கோபங்கள் இல்லை. அவசியமான கோபங்கள். சமூகத்தின் அவலங்கள் மீதான கோபங்கள், சாதியக் கட்டுமானத்தின் மீதான கோபங்கள், அடிமைத்தனம் மீதான ஆத்திரங்கள், புரட்சிக்கு வழிவகுத்த கோபங்கள்.

இளைத்தவனை ஏறி மிதிப்பதற்கான உத்தியாக நாம் வெளிப்படுத்துவது கோபம் அல்ல; அகம்பாவம். அந்தக் கோபத்தால் நம் சுற்றத்தை மாசுபடுத்துகிறோம். இயலாதவனின் நிலையை ஏளனம் செய்கிறோம். அடையாளங்களின் மீது ஆபரணப் பூச்சு செய்யப் பார்க்கிறோம்.

எதிரில் இருப்பவனின் உண்மை பேசுவதற்கான வெளியைக் குறைக்கிறோம். அவரைப் பொய்யராக்குகிறோம். ஒரு ரம்மியமான சூழலைக் கலவரமாக்குகிறோம். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிறோம்.

இன்னும் சொல்லப்போனால், இன்னொரு மனிதனின் நியாயமான உரிமைகளையும் நமது நியாயமற்ற கோபங்கள் பறித்துவிடுகின்றன. உங்கள் கோபத்துக்குப் பயந்தே, பலரும் தங்கள் தரப்பு நியாயத்தையும், வார்த்தை களையும் புதைத்துவிடுகிறார்கள். இந்தக் கோபத்தால் யாருக்கு என்ன லாபம்?

கோபத்தைக் கட்டுப்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதனை நெறிப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. அந்த நெறிப்படுத்தல் சமூகத்தின் எல்லாத் தளங்களையும் சலவை செய்யும். தனி மனித உரிமைக்காக வாதாடும். உண்மைக்காகப் போராடும். தவறுகளைத் தட்டிக் கேட்கும். அநியாயத்தை அடக்கப் பார்க்கும். அடக்குமுறையை எதிர்த்து நிற்கும். அரசியலைக் கேள்வி கேட்கும்.

கோபம் ஓர் அற்புதமான சக்தி. சமூக மாற்றங்களுக்கான திறவுகோல். அதை அற்ப காரணங்களுக்காகச் செலவிடுவது மூடத்தனம்.

உங்கள் கோபம் நியாயமானதா இல்லையா? என்பதை உங்களைவிட வேறு யாரால் சரியாக உணர முடியும். அந்த உணர்தல் நிச்சயமாக அதைக் கையாள்வதற்கான நெறிமுறையைச் சொல்லித்தரும்.

கோபம் தரும் வெப்பத்தையும் அனலையும் சமூக அவலங்களுக்கு எதிராகத் திருப்புங்கள்.

தங்களுக்கு அடுத்த தலைமுறை, கோபம் என்ற ஆற்றலைச் சமூகத்தின் மேம்பாட்டுக்காகச் சரியாகப் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையோடுதான் நிறைய 'நியாய கோபக்காரர்கள்' மரித்துப்போய் இருக்கிறார்கள்.

எவ்வளவு வேண்டுமானாலும் கோபப்படுவோம். அது, இன்னொருவரைக் காயப்படுத்துவதற்குப் பதிலாக, காயங்களுக்கு மருந்து போடும் என்று முழுமையாக நாம் நம்பும் பட்சத்தில்... கோபப்படுங்கள்!

நீயும்... நானும்! - கோபிநாத்

பெயின்ட் விற்பனை செய்கிற கடையில் சமீபத்தில் பார்த்த ஒரு காட்சி...



பெயின்ட் வாங்க வந்த ஒருவர், "வீட்டுக்குள்ள என்ன கலர் பெயின்ட் அடிச்சா நல்லா இருக்கும்? இருக்கிறதுலயே நல்ல கலர் எது?" என்று கேட் டார். கடைக்காரர் அழகாக ஒரு பதில் சொன்னார்... "கலர்ல நல்ல கலர், கெட்ட கலர்னு ஒண்ணும் கிடையாது. உங்களுக்கு எந்த கலர் பிடிக்குதோ, அது நல்ல கலர். உங்களுக்குப் பிடிக்காத கலர், இன்னொருத்தருக்குப் பிடிக்கும். அதனால எல்லா கலருமே நல்ல கலர்தான்!"

எல்லா மனிதர்களுக்குள்ளும் ஏதோ ஒரு ரசனை இருக்கிறது. அதைக் கவனிப்பதைவிட, அதை ரசிப்பதைவிட, அடுத்தவரின் ரசனைபற்றியே அதிகம் யோசிக்கிறோம். நம் சமூகச் சூழலும் நல்ல ரசனை, மோசமான ரசனை என்று பிரித்துவைத்து இருக்கிறது. அது காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது.

ரசனை என்பது அவரவரின் தனிப்பட்டகுணாம் சம். சாந்தமாக, வாழ்வியல் சூழல் சார்ந்ததாக, அனுபவங்கள் ஒட்டியதாக, சுய உணர்வோடு தொடர்பு உடையதாக இருக்கும்போது, உயர்வான ரசனை, மட்டமான ரசனை என்று தரம் பிரிப்பது எப்படிச் சரியாக இருக்கும்?

ஒரு வகையில் ரசனை என்பதே ஒரு கற்பிதம் தான். ஐஸ்வர்யா ராய் அழகு என்று சொல்லப் பட்டதால், அவர் அழகானவர் என்று ஏற்றுக்கொள்கிறோம். ஒரு பெண்ணுக்குரிய அழகியல் அம்சங்கள் என்று தனிப்பட்ட முறையில் நாம் வைத்து இருக்கிற ரசிப்புச் சித்தாந்தங்களுக்குள் அவர் வருகிறாரா, இல்லையா என்றெல்லாம் யோசிக்க முடிவது இல்லை.

நாம் கொண்டாடுகிற, பெருமை பேசிக் கொள்கிற உயர்வினை, மதிப்பீடுகளாக நாமே சித்திரிக்கிற நமது பல ரசனைகள், புறச் சூழல் களாலும், செயற்கையான ஏற்பாடுகளாலும் நம்முள் புகுத்தப்பட்டவைதான். இதில் உயர் வான ரசனை, கேவலமான ரசனை என்று பாகுபாடு செய்வது எப்படி நியாயமாகும்?

இயற்கை எழிலையும் நிலவின் அழகையும் ரசிக்காத ஒருவர் நல்ல ரசனை இல்லாதவர் என்ற முடிவுக்கு வர முடியாது. அவருக்கு புழுதிக் காடும் எருமைக் கூட்டமும் பிடித்து இருக்கலாம். தத்தித் தத்தி ஓடும் அணில் அழ கானது என்பது உங்கள் ரசனையாக இருந்தால், அங்குலம் அங்குலமாக நகரும் ஆமை இன் னொருவரின் ரசனையாக இருக்கலாம்.

அழகான ரசனை என்று தனியாக ஒரு பட்டியல் தயாரித்துக்கொள்வது, உண்மையில் போலித்தனத்தின் வெளிப்பாடு. உங்களால் எதை எல்லாம் இயல்பாக ரசிக்க முடிகிறதோ அவை எல்லாம் அழகானவைதான்.

செடிக்குச் செடி தாவும் பட்டாம்பூச்சி உங்க ளுக்குள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தலாம். அதற்காக பன்றிக் குட்டியை ரசிக்கிறவனுக்கு ரசனை கெட்டவன் என்று பட்டம் கட்ட முடியாது.

நம்முடைய பெரும்பான்மையான ரசிப்புத் தன்மைகள், நம்மைவிடப் பெரிய ஆட்கள் என்று நம்புகிற மனிதர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்டவை. அழகான ஆங்கிலம் பேசுகிற, அழுக்கு இல்லாத சட்டை உடுத்துகிற, பரவலாகப் பலராலும் கவனிக்கப்படுகிற மனிதர்கள் முன்மொழிந்த ரசனைகளை நாம் வழிமொழிகிறோம். பிறகு, அதையே சிறந்த ரசனை என்று கொண்டாடுகிறோம். அதை அடுத்தவர் மீதும் திணிக்கிறோம். அதை ஏற்காதவரை ரசனை இல்லாதவர் என்றும் விமர்சிக்கிறோம்.

இந்த உலகம் பல்வேறு ரசனைகளால் ஆனது. இங்கு மணிரத்னம் படம் ஓடும், பேரரசு படம் ஓடும், கௌதம் மேனன் படம் ஓடும், எஸ்.பி.முத்துராமன் பாணி படம் ஓடும், மகேந்திரன் பாணி படங்கள் ஓடும், சசிகுமார் ஒரு பக்கம் தன் படைப்பை முன் வைப்பார். கே.எஸ்.ரவிக்குமார் இன்னொரு படைப்பை முன்னிறுத்துவார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசனை.

இந்த நிலையில் அந்த இயக்குநரின் படங்களைப் பார்ப்பது உயர்வான ரசனை என்றும், வேறொரு இயக்குநரின் படங்களைப் பார்ப்பது மட்டமான ரசனை என்றும் அந்த உணர்வியலைப் பாகுபாடு செய்வது இயல்புக்கு விரோதமானது. பெயின்ட் கடைக்காரர் சொன்னது மாதிரி, ரசனையிலும் நல்ல ரசனை, கெட்ட ரசனை என்ற வேறுபாடு இல்லை.

உங்களது ரசனை உயர்வானது என்று எப்படி நம்புகிறீர்களோ, அதேபோல் அடுத்தவரின் ரசனையும் உயர்வானதே. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று முத்திரை குத்த முனைவது நம் பிடிவாதத்தையே காட்டுகிறது.

ரசனை என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் எதுவும் வகுக்க முடியாது. அது மாறிக்கொண்டே இருக்கக் கூடியது. இன்றைக்கு நீங்கள் கொண்டாடும் ஒரு விஷயத்தை நாளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு. அப்படி இருக்கும்போது, இதுதான் சிறந்தது என்று எதையும் சொல்வதற்கு இல்லை.

சில இசைக்கு தலை ஆடும், சில இசைக்குக் கால் ஆடும். ஓர் இசை காதைக் கிழிக்கும், ஓர் இசை காற்றில் தவழும், ஒரு நிறம் கண்ணைப் பறிக்கும், ஒரு நிறம் லேசாய் மிளிரும், ஓர் ஓவியத்தில் உருவம் தெரியும், இன்னொன்றில் கோடுகள்தான் புரியும். கண்ணில் நீர் வர காரம் சாப்பிடுதல் ஒரு ரசனை, உறைப்பே இல்லாமல் ஆகாரம் என்பது இன்னொரு ரசனை. இதில் எதுவுமே நிரந்தரமானது அல்ல.

நீங்கள் இன்றைக்கு சிறந்த ரசனை என்று நினைத்துப் போற்றும் ஒன்றை நாளை நீங்களே விமர்சிக்கலாம். அப்படி இருக்க, ரசனைகளில் ஏற்றத் தாழ்வு பார்க்க வேண்டியது இல்லை.

ரசனை என்பது சொந்த உணர்வுகளின் வெளிப்பாடு. அதை யாரிடமும் கடன் வாங்க வேண்டியது இல்லை. பிரபலமாக நிறையப் பேர் ஏற்றுக்கொண்டதால், அது சிறந்த ரசனையாக இருக்க வேண்டும் என்ற அவசி யம் இல்லை. உங்கள் ரசனைகளையும் ரசிப்புத் தன்மையையும் உங்களுக்குள் தேடுங்கள்.

என் நண்பர் ஒருவர் அழகான உடைகள் உடுத்துவார், அவர் எது அணிந்தாலும் அவ ருக்கு அது பொருத்தமாகவே இருக்கும். ஆனால், அவர் ஜீன்ஸ் அணிந்து நான் பார்த் ததே இல்லை. உலகமே அதை அணிகிறபோது அந்த ரசனை இல்லாமல் இவர் இருக்கிறாரே என்று தோன்றும். ஒரு முறை அதை கேட்க வும் செய்தேன். "நான் ஒன்றும் சுரங்கத்தில் வேலை செய்யவில்லை" என்றார்.

என்னை எனக்கு எப்படிப் பிடித்து இருக்கிறதோ, அப்படி இருப்பதுதான் அழகு. அதுதான் ரசனை. நிறையப் பேர் எதைச் சரி என்கிறார்களோ, அதைப் பின்பற்றுவது ரசனை இல்லை. 'நானும் இருக்கிறேன்... என்னையும் ஆட்டத்துக்குச் சேர்த்துக்கொள்ளுங்கள்' என்பதற்கான முயற்சி.

நீங்கள் ரசிப்பதை இன்னொருவர் ரசிக்கவில்லை என்றால், அது அவர் கோளாறு இல்லை. அவர் வேறு ஒரு ரகம். முடிந்தால், அவரின் ரசனையை நீங்களும் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். நீரோடையின் அழகை ரசித்துக்கொண்டு இருக்கும் உங்களுக்கு, நீரோடைக்கு அப்பால் அம்மாவின் மடியில் குழந்தை படுத்திருக்கும் அழகை ரசிப்பவரின் ரசனை அந்நியமாகத் தெரியலாம். பூத்துக் குலுங்கும் மலர்களின் குளுமையில் உங்கள் ரசனை பொதிந்துகிடக்கலாம்... காய்ந்துகிடக்கும் கரு வேல மரங்களைக் கவனித்துக்கொண்டு இருப்பவரின் ரசனைக்கும் காரணம் இருக்கும்.

மேல்தட்டு வாழ்க்கையின் வெளிப்பாடுகள் மட்டுமே உயர் வான ரசனை என்ற மனோபாவம் நமது தாழ்வு மனப்பான்மையைத்தான் காட்டுகிறது. மேற்கத்திய இசை நாகரிகமான ரசனை என்று ஒருவர் ஏற்றுக்கொண்டு இருப்ப தைப்போலவே இன்னொருவர் உருமி மேளத்தின் இசையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். இதில் உயர்வென்ன... தாழ்வு என்ன?

எல்லா ரசனைகளும் மேலானதுதான். அநாகரிகம் அல்லாத அனைத்தும் ஏற்புக்கு உரிய ரசனைகள்தான். உங்களால் புரிந்துகொள்ள முடியாத ரசனைகளைக் குறைவாக மதிப்பிட வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு தனி மனிதரையும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். மாறிக்கொண்டே இருக்கும் ரசனைகளை ஒரு காரணியாகக்கொண்டு மனிதர்களை மதிப்பீடு செய்ய முடியாது.

முடிந்தால் அடுத்தவரின் ரசனையில் இருக்கும் ரசனைகளையும் அறிந்துகொள்ள முயற்சிக்கலாம். அது மனித உறவுகளை மேம்படுத்தும்!

நீயும்... நானும்! - கோபிநாத்

வெளிநாடுகளில் உணவகங்களிலோ, பல்பொருள் அங்காடிகளிலோ நிறைய மாணவர்கள் பகுதி நேரப் பணியாளர்களாக வேலை செய்வதைப் பார்க்க முடியும். கார் கழுவுவது, பாத்திரங்களைச் சுத்தம் செய்வது, உணவு பரிமாறுதல், கணக்கர் பணி என்று ஏதாவது ஒரு வேலை.

இவர்களிடம் இல்லாத காசா? எதற்காக இந்த இளம் வயதில் இப்படி வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தோன்றும். வெளிநாட்டில் ஒரு குறிப்பிட்ட வயது வந்த பிறகு, அவரவர் செலவுக்கு அவர்களேசம்பாதித்துக் கொள்ள வேண்டும். அப்பா, அம்மா பணம் தர மாட்டார்கள் என்றுகேள்விப்பட்டு இருக்கிறோம்.



நமக்குத்தான் இப்படிப்பட்ட எண்ண ஓட்டங்கள் மனதில் சுழலுமே ஒழிய, அந்த மாணவர்கள் ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும் அந்தப் பணிகளைச் செய்வார்கள். நானும் எனது நண்பரும் ஒரு முறை ஓர் உணவகத்துக்குச் சென்றபோது, பகுதி நேரப் பணியாளர்களாக நிறைய மாணவர்கள் வேலை செய்வதைப் பார்த்தோம். 'நம்ம பொழப்பு பரவாயில்லடா நண்பா... இவங்க சின்ன வயசிலயே இப்படிப் பணம் சம்பாதிக்க வேண்டி இருக்கே' என்று ஆற்றாமையோடு சொன்னான்.

வெளிநாட்டில் இதுபோல் பகுதி நேரப் பணி செய்யும் இந்திய மாணவர்கள் நிறையப் பேரைப் பார்க்க முடியும். ஒரு பக்கம் படித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் சம்பாதித்துக்கொண்டு இருப்பார்கள். பகுதி நேரப் பணி செய்யும் குணம் உள்ளூர்ச் சூழலிலும் இப்போது அதிகரித்து வருகிறது என்பது உண்மை.

வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் அடுக்கி, லாரியில் ஏற்றி இன்னோர் இடத்துக்குக் கொண்டுசேர்க்கும் பணியைச் செய்வதற்காக நான்கு இளைஞர்கள் வந்தார்கள். அவர்களிடம் பேசியபோதுதான் தெரிந்தது, அவர்கள் அனைவரும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். ஓய்வு நேரங்களில் இதுபோன்ற வேலைகள் செய்து பணத் தட்டுப்பாட்டைச் சரிசெய்துகொள்வதாகச் சொன்னார்கள். அந்த நிறுவனத்தை நடத்துவதே கல்லூரி மாணவர்கள்தான்.

படிக்கிற மாணவர்கள், கௌரவம் பார்க்காமல் சுமை தூக்குவது போன்ற வேலைகளைச் செய்வதைப் பார்க்கிறபோது கொஞ்சம் புதிதாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. இதுபோன்ற இளைஞர்கள்பற்றி விசாரிக்க ஆரம்பித்தபோது நிறையத் தகவல்கள் கிடைத்தன. ஏ.சி. பொருத்துபவருக்கு உதவியாளர், இரவு நேர ஆட்டோ டிரைவர், விடுமுறை நாட்களில் கணக்கு எழுதிக் கொடுப்பது. மாலை நேரங்களில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக்கொடுப்பது எனப் பல்வேறு விதமான பகுதி நேரப் பணிகள் இங்கும் நடந்துகொண்டு இருக் கின்றன.

இப்படிப் படிக்கிறபோதே வேலை செய்வது, வெளி நாடுகளில் ஒரு கலாசாரமாகவும் வாழ்க்கை முறை யாகவும் மாறி இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். நமது இத்தகைய வேலைகள் பணத் தட்டுப்பாடுகளைச் சரிசெய்யவும், கைச் செலவுக்குத் தேவைப்படும் பணத்தைச் சம்பாதிக்கவுமே மேற் கொள்ளப்படுகிறது. அப்பா, அம்மாவின் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பது பாராட்டுக்கு உரியது. ஆனால், தேவை கருதி நடக்கும் இந்தப் பணிகளை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற வேண்டியது காலத்தின் அவசிய மாகி இருக்கிறது.

படிப்பதே ஒரு வேலையைப் பெறுவதற்குத்தான் என்கிற மனோபாவத்தில் இருந்து, வெளியே வந்து சுயமாகச் செயல்படவும் வகுப்பு அறைகளுக்கு அப்பால் இருக்கும் வாழ்க்கையின் அனுபவங்களை உணரவும் இந்தப் பகுதிப் நேர பணிகள் நிச்சயம் பயன்படும். வெகுஜன மக்களின் குணாதிசயங்கள் என்ன? விதவிதமான மனிதர்களின் தேவைகள் என்ன என்பதை விளங்கிக்கொள்ளவும் உதவும்.

பாடப் புத்தகங்களில் சொல்லித்தரப்படாத அல்லது சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாத பல்வேறு வாழ்க்கைச் சூத்திரங்களை இந்தப் பகுதி நேரப் பணிகள் சொல்லித் தரும்.

பணத்தைச் சம்பாதிக்கச் சொல்லித் தரும் நம் சமூகம், பெரும் பாலான நேரங்களில் அதைக் கையாள்வது குறித்து, தெளிவாகச் சொல்வது இல்லை. அப்பாவின் பணத்தைச் செலவழிப்பதில் இருக்கிற சுகமும், தான் சம்பாதித்த பணத்தைச் செலவு செய்வதில் இருக்கிற சுதந்திரமும் வேறுவேறானவை.

சுயமாகச் சம்பாதித்து அதைக் கையாள ஆரம்பிக்கிறபோது, ஓர் இளைஞன் தன் வாழ்வின் மிக முக்கியமான அம்சத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறான். அந்த அவசியமான அனுபவத்தை ஒரு சமூக ஆசிரியராக நின்று, பகுதி நேரப் பணிகள் சொல்லிக்கொடுக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட வயது வரை சந்தோஷமாகச் சுற்றித் திரிந்துவிட்டு, வேலையில் சேர்ந்த பிறகு, 'பொறுப்பான பிள்ளையாக' மாற வேண்டும் என்கிற மனோபாவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மரபாகவே மாறிப்போய் இருக்கிறது.

கொஞ்ச காலம் வரை படிக்கிற இயந்திரமாகவும் பிறகு, சம்பாதிக்கிற இயந்திரமாகவும் இளைஞர்களின் வாழ்க்கைச் சூழல் அமைந்துவிட்டதற்கு அதுவே காரணம்.

இந்த மூச்சுப் பிடிக்கிற பயணத்தில் 1,000 ரூபாயைச் சம்பாதிக்க ஒரு சராசரி இந்தியன் எவ்வளவு உழைக்க வேண்டும்... எவ்வளவு தியாகம் செய்ய வேண்டும் என்பதை இந்தப் பகுதி நேரப் பணிகள் உணர்த்துகின்றன.

எப்போதும் கண்டுகொள்ளாமல் விடப்படும் சராசரி இந்தியப் பிரஜையின் கஷ்டங்களைக் கவனிக்கவும், அதைவிட மேலாகப் படிக்க வேண்டிய வயதில் புத்தகங்களைத் தொலைத்துவிட்டு, குழந்தைத் தொழிலாளர்களாக ஓடிக்கொண்டு இருக்கும் சமகால இந்தியாவை உணரவும் இந்தப் பகுதி நேரப் பணிகள் அவசியம்.

நமது சூழலில் வாழ்க்கையின் காயங்களையும் அதற்கு மருந்து போட வழி இல்லாமல் தவிக் கும் மனிதர்களையும் இந்திய இளைஞனுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக் கிறது. அந்தத் தேவையைப் பூர்த்திசெய்வதன் வாயிலாகவும், வாய்ப்பாகவும்கூட இந்தப் பகுதி நேரப் பணிகள் அமையலாம்.

ஓர் உணவகத்தில் பில் போட்டுக் கொடுக்கும் பகுதி நேரப் பணி செய்யும் ஓர் இளைஞன், கொல்லைப்புறத்தில் சாக்கடைக்கு அருகே அமர்ந்து, எண்ணெய்ப் பிசுக்கு ஏறிய பாத்திரத்தை ஒருவர் கழுவிக்கொண்டு இருப்பதைக் கவனிக்காமலா போவான்? ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் பகுதி நேரப் பணியில் இருக்கும் ஒரு கல்லூரி மாணவன், தன் தங்கையின் வயதில் இருக்கும் சிறுமி அற்ப சம்பளத்துக்குத் தன் உழைப்பைக் கொட்டிக்கொடுக்கும் சூழலை அறிந்துகொள்ளாமலா போவான்.

படித்து முடித்து வேலையில் இருக்கும்போதும் இவை எல்லாம் கண்ணில்படுமே என்று கேள்வி வரலாம். அந்தச் சூழ்நிலையில், சம்பாதிப்பதற்காக வேலை பார்க்கும் இயந்திரமாகத்தான் இந்திய இளைஞன் தயாரிக்கப்பட்டு வந்திருக்கிறான். சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் குறித்த பார்வைகள் அந்தக் காலகட்டத்தில் பலம் இல்லாததாகவே இருக்கின்றன.

பணத்துக்காக மட்டுமின்றி; வாழ்க்கைபற்றிய புரிதலுக்காகவும், சமூகத்தின் யதார்த்தங்களை அணுகவும், சுயத்தை மேம்படுத்தவும் பகுதி நேரப் பணிகளில் ஈடுபடுங்கள். குறைந்தபட்சம் கௌரவமான வேலை - கௌரவக் குறைச்சலான வேலை என்று தரம் பிரித்துவைத்திருக்கும் பார்வையாவது மாறும்.

இன்றும் தமிழ்ச் சமூகத்தின் நிறையப் பிரிவுகளில் படிக்கும்போதே ஒரு வேலையில் இருந்து அதன் நீக்கு போக்குகளை அறிந்துகொள்ளச் சொல்கிற வழக்கம் உண்டு.

பாக்கெட் மணிக்காகவும், பணத் தட்டுப்பாட்டுக் காகவும் மட்டும் அல்லாது, பணம் இருக்கிறவர்களும் பகுதி நேரப் பணிகளில் கவனம் செலுத்துவது சமூகத்தின் மீதான இளைஞர்களின் கவனிப்பை இன்னும் அழுத்தமாக்கும்.

கிளம்புங்கள்...

எல்லாத் தெருக்களின் மூலைகளிலும் எதிர்கால இந்தியா என்னைக் கவனிக்குமா என்று ஏக்கத்தோடு பலர் காத்திருக்கிறார்கள்!

நீயும்... நானும்! - கோபிநாத்

உங்கள் மனதுக்குப் பிடித்தவர்கள் எப்போது அழகாக இருக்கிறார்கள் என்று ஒரு கேள்வி எழுப்பினால், அநேகமாகப் பலரது பதிலும் 'அவர்கள் உறங்கும்போது' என்பதாகவே இருக்கும். குழந்தைகள் உறங்கும் அழகை ரசிக்கிற அப்பா - அம்மாக்கள், கணவன் தூங்கும் அழகை ரசிக்கிற மனைவி, மனைவி தூங்கும் அழகைக் கவனிக்கிற கணவர் என்று தூக்கம் ரொம்ப அழகானது.



வெளியுலகம் தன்னைக் கவனிக்கிறது என்ற அழுத்தங்கள் இல்லாமல், ஆயாசமாக ஒரு மனிதன் தன்னையும் தன் சுற்றத் தையும் மறந்து லயிக்கிற ஓர் உலகம் அது. சிலர் கையைத் தலையணையாக்கிக்கொள்வார்கள். சிலருக்குக் காலுக்குத் தலையணை வைக்கவில்லை என்றால் தூக்கம் வராது. நைட் லேம்ப்பின் மெல்லிய வெளிச்சம் வேண்டும் சிலருக்கு. எல்லாக் கதவுகளையும் அடைத்துவிட்டுக் கும்மிருட்டில் தூங்குவது சிலருக்குச் சுகம்.

ஒரு சிலர் ஒருக்களித்துப் படுத்துக்கொள்வார்கள். சிலர் படுத்த இடம் மாறாமல் சிலைபோல் அப்படியே தூங்குவார்கள். சிலர் அறையின் இந்த மூலையில் படுத்தால், எதிர் மூலை வரை உருள்வார்கள். முழங்காலை மடக்கிக்கொண்டு விடியும் வரை அதே நிலையில் தூங்குபவர்களும் உண்டு.

சிலருக்குத் தனியாகத் தூங்கப் பிடிக்கும். சிலருக்குப் பக்கத்தில் யாராவது இருந்தால்தான் தூக்கமே வரும். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறபோது எங்கள் ஹாஸ்டல் நண்பன் ஒருவனை நான்கு பேர் தூக்கிக்கொண்டு போய் பாத்ரூமில் போடுவோம். அதுவரை அவன் விழிக்க மாட்டான்.

அலாரம் அடிக்கிற கடிகாரம் தலையில் விழுந்ததைக்கூடச் சட்டை செய்யாமல் தூங்கிய நண்பர்களும் உண்டு. தூங்கும்போது கிரிக்கெட் கமென்ட்ரி சொல்கிறவர்கள், கெட்ட வார்த்தை பேசுபவர்கள், அடுத்தவர் மேல் காலைப்போட்டுத் துன் புறுத்துபவர்கள், குறட்டைவிட்டுக் கொல்கிறவர்கள் என்று தூக்கத்திலும் தூங்குபவர்களிலும் பல வகை உண்டு.

எனக்குத் தெரிந்த ஒருவர், அவர்தான் தூங்குகிறாரே என்று நினைத்து எதுவும் பேசிவிட முடியாது. மறுநாள் காலை வார்த்தை மாறாமல் எல்லாவற்றையும் சொல் வார்.

இப்படி தூக்கம் சுதந்திரமான உலகமாக, கிண்டலும் கேலியும் நிறைந்த கலவையாக, அழகிய கவிதையாகப் பல ரூபங்களில் கவனிக்கப்படுகிறது. அல்லது அதிகமாகத் தூங்குபவர்களைக் கும்பகர்ணன் என்றோ தூங்குமூஞ்சி என்றோ வசவு பாடுகிற மொழியாக இருக்கிறது.

உழைப்பு, விசுவாசம், நன்றிக்கடன் போன்ற பொறுப்பான விஷய மாகத் தூக்கம் பார்க்கப்படுவது இல்லை. ஓய்வு எடுத்தல் என்பது உழைப்புக்குப் புறம்பான விஷயம் என்று பழக்கப்படுத்தப்பட்டு இருப்பதால், தூக்கம் என்பது சோம்பேறிகளின் உலகம் என்ற உணர்வு விதைக்கப்பட்டு இருக்கிறது. உடல் தேவை சார்ந்த, மூளை மற்றும் மனதின் இயக்கம் சார்ந்த இந்த அறிவியல் வெறும் சமூகப் பார்வையோடு கவனிக்கப்படுகிறது.

தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு செய்கிற பணிகள் சிறப்பாகக் கவனிக்கப்படுகின்றன. 'ரெண்டு நாளாத் தூங்கலை; ஏகப்பட்ட வேலை' என்று சொல்லிக்கொள்கிறபோது ஒரு பெருமிதம் ஏற்படத்தான் செய் கிறது. இரவு நேரம் விழித்திருந்து வேலை செய்பவர்கள், தூங்கி வழியும் முகத்தைக் கழுவிவிட்டு காரியசித்தியோடு கடமையாற்று கிறவர்கள் ஆகியோருக்குக் 'கடின உழைப்பாளி' என்ற பட்டமும் பாராட்டும் கிடைக்கிறது.

ஆனால், தேவையான அளவு தூங்கிவிட்டு இந்த வேலைகளை இன்னும் சுறுசுறுப்பாகவும், தெளிவாகவும் செய்ய முடியும் என்பதுதான் உண்மை. இந்த உடல் ஓர் அபூர்வமான அறிவியல் கருவி. அது தனக்குத் தேவையான ஓய்வை ஏதாவது ஒரு வழியில் பெற்றே தீரும். உண்மையில் சொல்லப்போனால், தூக்கத்துக்கு எதிராகச் செயல்படுவது, இயற்கைக்கு எதி ராகச் செயல்படுவதுதான்.

சுறுசுறுப்பாக இயங்குவதற்கான உடல் ஆரோக்கியம் இருக்கும் இளமையில் அதிகம் தூங்க வேண்டியது இல்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இந்த வயதில் எட்டு மணி நேரம் தொடர்ந்து தூங்க வேண்டும் என்று அறிவியல் உலகம் அறிவுறுத்துகிறது. சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பு, 16-ல் இருந்து 26 வயதுக்கு உட்பட்டவர்கள் நாலு முதல் ஆறு மணி நேரம்தான்தூங்குகிறார்கள் என்று சொல்கிறது. அதுவும் ஆழ்ந்த தூக்கமாக இல்லை. பெரு நகரங்களில், வேலை நிமித்தமாகவோ, குடும்பச் சூழல் காரணமாகவோ, படிப்புச் சுமை காரணமாகவோ இந்த நிலை ஏற்படவில்லை. இணையதளத்தின் வழியாக சோஷியல் நெட்வொர்க்கிங் வலைதளங்கள் வழியாக நண்பர்களுடனும், முகம் தெரியாத நட்புகளுடனும் நேரம் போவதே தெரியாமல் 'சாட்டிங்' செய்துகொண்டு இருப்பது முக்கியக் காரணமாகிறது.

இளம் பிராயத்தில் தூக்கம் மிக முக்கியமான பங்கு பெறுகிறது. மூளை துடிப்போடு இயங்க, அதற்குத் தேவையான ஓய்வு வழங்கப்பட வேண்டும். அதைத் தூக்கமே வழங்க முடியும். இளம் தலைமுறையிடம் அதிகமான மனஅழுத்தமும், படபடப்பும் ஏற்படத் தூக்கமின்மை முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது.

உடல் நலத்தைத் தாண்டி, இன்றைய இளைஞர்களின் மனநலத்தைத் தூக்கமின்மை பெரிதும் பாதித்துவிடுகிறது என்பதே வருத்தம் அளிக்கிறது. குறைவான தூக்கம் ஹார்மோன் கோளாறுகளை உருவாக்குகிறது. செய்கிற பணியில் ஆழ்ந்து இயங்குகிற ஆற்றலைத் தடுக்கிறது. அர்த்தம் இல்லாமல் கோபம் ஏற்படுத்துகிறது. எதன் மீதும் எளிதாக எரிச்சல்கொள்ளவைக்கிறது. பொறுமை கிலோ என்ன விலை என்று கேட்கவைக்கிறது. சின்னத் தடங்கல்களைக்கூட பெரிய தடை யாகத் தோன்றவைக்கிறது.

இவ்வளவு பிரச்னைகளைத் தாண்டி ஒரு வேலை எப்படி வெற்றி பெறும், போட்டி நிறைந்த உலகில் தூக்கத்தைத் தியாகம் செய்யாவிட்டால், வாழ்க்கை என்ன ஆகும் என்று ஒரு மருத்துவரிடம் கேட்டேன். 'தூக்கம் விழித்து நீங்கள் நான்கு மணி நேரத்தில் செய்கிற வேலையைத் தேவையான அளவு தூங்கிவிட்டு, மூன்று மணி நேரத்தில் செய்துவிட முடியும். உறக்கத்தைத் தொலைத்தால்தான் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பது நீண்ட காலமாக விதைக்கப்பட்டு இருக்கும் நம்பிக்கை. உண்மையில் தேவையான அளவு தூங்கினால்தான் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும்' என்று விளக்கம் அளித்தார்.

தூக்கக் குறைவில் இளைஞர் உலகம் சந்திக்கும் இன்னொரு மிக முக்கியமான பிரச்னை. உடல் எடை அதிகரிப்பு. தூக்கம் இன்மை. உணவுப் பழக்கத்தை முறையற்றதாக்கி மீனீஷீtவீஷீஸீணீறீ மீணீtவீஸீரீ என்று சொல்லப்படுகிற அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுகிற பழக் கத்தை ஏற்படுத்திவிடுகிறது.

இந்த உலகத்தையும் அதன் செயல்பாடுகளையும் கண் முன்னே காட்சிப்படுத்தினால், ஆங்காங்கே யாராவது தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அலுவலகங்களில், வகுப்பறையில், கடை கல்லாவில், மீட்டிங்குகளில், கடற்கரைகளில், சினிமா படப்பிடிப்பில் இப்படி இதுதான் இடம் என்றில்லாமல் எல்லா இடங் களிலும் தூங்குகிறோம். தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் இருந்ததும், தூங்க முடியாமல் போனதும்தான் இதற்குக் காரணம்.

படப்பிடிப்புத் தளங்களில் உதவி வேலைகள் செய்பவர்கள் கிடைக்கிற இடுக்குகளில் தலையைச் செருகிக்கொண்டு தூங்குவார்கள். தலைக்கு மேலே சூரியன் மாதிரி லைட்டுகள் எரியும். அறைக்குள் நிலவும் சத்தம் காதைப் பிளக்கும். இது எதையுமே உணர முடியாமல் அவர்கள் தூங்குவதைப் பார்க்கும்போது மனசு கனக்கும். தூக்கம் எவ்வளவு அற்புதமானது என்று அவர்களைக் கேட்டால் தெரியும்.

பகலில் வேலை நிமித்தம் இழந்த சக்தியை இரவின் தூக்கம் மீட்டுத் தருகிறது. மேற்கு உலகம் இப்போது தூக்கத்தின் அவசியத்தை மேலும் உணர்ந்து இருக்கிறது. படுக்கை அறையை மனசை லேசாக்கும் தன்மைகளோடு வடிவமைப்பது. சுவர்களில் அதற்கு உரிய வண்ணங்கள் பூசுவது என்று அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள்.

தொடர் வேலைகளுக்கு நடுவே 'பவர் நாப்' (Power nap) என்று சொல்லப்படும் குட்டித் தூக்கத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்தியச் சூழலிலும் அந்த முறை வந்துகொண்டு இருக்கிறது. ஒருநாளில் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்துக்காகச் செலவிடுவதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு முக்கியமான முதலீட்டை நாம் செய்கிறோம்.

டி.வி. பார்த்துக்கொண்டே தூங்குதல், ஏதாவது புத்தகம் படித்தால்தான் தூக்கம் வரும், மதுகுடித்தால் தான் தூக்கம் சாத்தியம், மாத்திரை போடாமல் தூக்கம் வராது என்ற நிலைகளை நிச்சயமாக மாற்றியாக வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். தூக்கம் குறித்த நமது பொருட்படுத்தாமைகள் நமது வாழ்க்கைத் தரத்தைச் சிதைத்துவிடும் என்பதும் அவர்கள் எச்சரிக்கை.

அறிவியலின்படி உடல் ஒரு கருவி. ஆன்மிகத்தின்படி அது ஆலயம். எந்தத் தத்துவத்தின்படி பார்த்தாலும் உடலைக் கையாளுதல் என்பதற்குச் சில வழி முறைகள் இருக்கின்றன. கருவி என்றால் அதனை இயக்குவதற்கு உரிய முறைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லை என்றால் அது பழுதாகும்.

ஆலயம் என்றால், அதற்குள் பிரவேசிக்கவும்இருக்க வும் சில நடைமுறைகள் இருக்கின்றன. தூங்குவதற்குக் கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறவர்கள், முடிந்தவரை தூங்கப் பார்க்கிறார்கள். தூங்குவதற்கு வாய்ப்பு இருந்தும் வெறுமனே விழித்துக்கிடப்பவர்கள்தான் தூக்கம் இன்மையால் நிறையப் பாதிக்கப்படுகிறார்கள்.

தூக்கம் விழிக்க என்னால் முடியும் என்று மோதுகிறவர்களுக்கு, மூச்சைப் பிடித்துக்கொண்டு தண்ணீருக்குள் இருக்க முடியும். ஆனால், எவ்வளவு நேரம் தாக்குப் பிடிப்பீர்கள் என்று ஒரு கேள்வியை மருத்துவ உலகம் எழுப்புகிறது.

படிச்சது போதும், போய்த் தூங்குங்க!

நீயும்... நானும்! - கோபிநாத்

'எப்படியும் 1,100 மார்க் வந்துரும்னு உறுதியா நம்பினேன். நான் நினைச்சதைப் படிச்சிடலாம்னு இருந்தேன். ஆனா, 1,000 மார்க்கூட வரலை. எல்லாம் போச்சு சார்!'' என்று ஆற்றாமையோடு கண்கள் பனிக்கப் புலம்பிய ஓர் இளைஞரிடம் ''நீங்கள் நினைத்ததை அடையவும், நீங்கள் குறித்துவைத்த இலக்கை எட்டவும் வேறு பல வகைகளிலும் வாய்ப்புகள் வரும்'' என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். அவரால் சமாதானம் அடைய முடியவில்லை.

''1,100 மதிப்பெண்கள் பெறுவதற்கான தகுதி என்னிடம் இருக்கிறது. அதற்காக நான் கடுமையாக உழைத்தேன். ஆனால், என் எதிர்காலமே இருண்டுபோச்சு'' என்று தொடர்ந்து அரற்றிக்கொண்டே இருந்தார்.



நினைத்தது நடக்கவில்லை என்பதால், ஆசைப்பட்டதை அடைய முடியாது என்று பல தருணங்களில் முடிவுக்கு வந்துவிடுகிறோம். அந்த முடிவுதான், இலக்கை அடைவதற்கு ஏதுவாகக் கண் முன்னே இருக்கும் இன்ன பிற வாய்ப்புகளையும் கவனிக்க முடியாமல் செய்துவிடுகிறது.

இன்றைக்கு வாழ்க்கையில் ஜெயித்துவிட்டதாக நாம் நினைக்கிற பலரும் அவர்கள் சிறு வயதில் அல்லது இளம் பிராயத்தில் என்னவாக வேண்டும் என்று நினைத்தார்களோ, அதுவாகத்தான் ஆகியிருக்கிறார்களா என்று கேட்டால், நூற்றுக்கு 80 சதவிகிதம் இல்லை என்றுதான் பதில் வரும். இருந்தாலும், அவர்கள் செய்ய நினைத்ததை வேறு ஒரு ரூபத்தில் அல்லது வடிவத்தில் செய்ய முடிந்திருக்கிறது.

இலக்கை அடைவதற்கு மனதுக்குள் தீர்மானித்துக்கொண்ட பாதை மட்டும்தான் ஒரே வழி என்று நினைத்துக்கொள்ள வேண்டியது இல்லை. அந்தப் பாதை அடைக்கப்படுகிறபோது, இலக்கை நோக்கிய பயணம் நின்றுபோகிறது.

நமக்குக் கிடைக்க வேண்டிய விஷயங்கள் நாம் நினைக்கிற வடிவத்திலேயே கிடைக்க வேண்டும் என்று மனதுக்குள் ஒரு குறியீட்டைப் பதிவுசெய்துகொள்கிறோம். அதற்கு குறிக்கோள் என்றும், கொள்கை என்றும், இலக்கு என்றும் ஏதோ ஒரு பெயர்வைக்கிறோம்.

அந்த இலக்கை அடைவதற்குத் தீர்மானிக்கப்பட்ட வழிகள் தவிர, வேறு எந்தப் பாதைகள் உகந்தவை என்று அநேக நேரங்களில் ஆராய்வது இல்லை. ப்ளஸ் டூ வகுப்பில் 1,100 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். தமிழகத்தின் தலை சிறந்த கல்லூரியில் சேர வேண்டும். அங்கு 90 சதவிகிதம் எடுக்க வேண்டும். பிறகு, பெயர் சொல்லிக்கொள்ளும்படியான டாப் 10 கம்பெனிகளில் 30,000 ரூபாய் துவக்கச் சம்பளத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும். யோசித்துப் பாருங்கள்... உங்கள் இலக்கை அடைய நீங்களே எத்தனை கண்டிஷன்கள் வைத்திருக்கிறீர்கள்.

இப்படி எல்லாம் திட்டமிட்ட குறிக்கோள் வைத்திருந்தால்தான், இலக்கை அடைய முடியும் என்று சொல்லலாம். இப்படிக் கட்டுப்பாடான திட்டம் வைத்திருப்பவர்கள்தான் ஜெயிக்கலாம் என்றால், வெற்றிபெற்றவர்களில் பெரும்பாலானோர் நினைத்தது ஒன்று... செய்துகொண்டு இருப்பது ஒன்று என்று ஏன் சொல்கிறார்கள்?

இலக்குகளை விசாலமாக வையுங்கள். உலகத்தையும் வாய்ப்புகளையும் அகலமாகப் பாருங்கள். குறியீடுகளை மனதில் பொருத்திக்கொண்டு இலக்குகளைத் துரத்தாதீர்கள். இந்தத் துரத்தலால் உங்களை அறியாமல் நீங்களே ஒரு கடிவாளத்தைக் கட்டிக்கொள்கிறீர்கள். உங்கள் இலக்குகளை அடைய வாசல் வரை கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளைத் தவறவிடுகிறீர்கள்.

உங்கள் உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய பரிசும், உங்களுக்கு வழங்கப்பட்ட ஆசியும், வரமும் உங்கள் முன்னால்தான் இருக்கிறது. ஆனால், அது நீங்கள் எதிர்பார்த்திருக்கும் வடிவில் இல்லை. அவ்வளவுதான். ஆனால், அது வேறு ஒரு வடிவில் இருப்பதால், கவனிக்கத் தவறவிடுவது எவ்வளவு பெரிய தவறு.

ஒரு பணக்கார வீட்டுப் பையனுக்கு ஸ்போர்ட்ஸ் கார் மீது ஆசை. எப்போதும் அது குறித்துதான் சிந்தனை. யார் அது மாதிரி கார் ஓட்டிப் போனாலும், மிக ரசிப்பான். எங்காவது அந்த கார் நின்றிருந்தால், ஒரு காதலியைப் பார்ப்பதுபோல் ரசித்துப் பார்ப்பான். நண்பர்களுடன் பேசும்போதுகூட, அந்த கார்பற்றிதான் பேசுவான்.

அப்பா ஒருநாள் சொன்னார், 'நீ கல்லூரிப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறு... உனது பட்டமளிப்பு நாளில் அந்த காரைப் பரிசாகத் தருகிறேன்' என்று. இளைஞனுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. அவன் கனவு கண்ட ஸ்போர்ட்ஸ் கார் அவனுக்குக் கிடைக்கப் போகிறது.

கார்பற்றிய கனவுகளோடு தீவிரமாகப் படிக்க ஆரம்பித்த அவன் முதல் வகுப்பில் தேறினான். பட்டமளிப்பு விழா நாளும் வந்தது. அவன் கனவு நிறைவேறப் போகிற நாள். பட்டத்தைக் கையில் வாங்கிக்கொண்டு அப்பாவைப் பார்க்க ஓடோடி வந்தான். அப்பாவிடம் பட்டத்தைக் கொடுத்துவிட்டு கண்கள் நிறைய எதிர்பார்ப்போடு நின்றான்.

மகிழ்ச்சியோடு அவனை அணைத்துக்கொண்ட தந்தை அருகில் இருந்த அறைக்கு அழைத்துப் போனார். இளைஞனுக்கு ஆர்வம் அளவில்லை. அங்கே அழகாக பேக் செய்யப்பட்டு இருந்த ஒரு பைபிளைப் பரிசாக வைத்திருந்தார் அப்பா. மகனுக்கு மாபெரும் ஏமாற்றம். அப்பா மீது ஆத்திரம்... அவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்ற கோபம் வேறு.

அந்தப் பரிசை அவன் கையால்கூடத் தொடவில்லை. கோபமாக வீட்டைவிட்டு வெளியேறினான். தந்தை சொல்ல முனைவது எதையும் அவன் கேட்கத் தயாராக இல்லை. கண் முன்னே அவன் ஸ்போர்ட்ஸ் கார் வந்து வந்து போனது. அன்று வீட்டைவிட்டு வெளியேறியவன், 10 வருடங்களில் நன்கு வளர்ந்து இருந்தான்.

அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று அவ்வப்போது தோன்றினாலும் ஏமாற்றியவரை ஏன் பார்க்க வேண்டும் என்று இருந்துவிடுவான்.

ஒருநாள் தந்தி ஒன்று வந்தது. தந்தை இறந்துவிட்டார் என்று. கனத்த இதயத்தோடு வீட்டுக்குப் போனான் இளைஞன். அப்பாவின் போட்டோ மட்டுமே தொங்கியது. பழைய நினைவுகளோடு வீட்டைச் சுற்றி வந்தவன், தற்செயலாக அந்த அறைக்குள் போனான். அப்பா பரிசாகக் கொடுத்த அந்த பைபிள் அப்போதும் பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது.

அதைக் கையில் எடுத்தபோது அதன் பின்பகுதியில் ஏதோ தட்டுப்பட்டது. திருப்பிப் பார்த்த மகனுக்கு அதிர்ச்சி. கண்களில் இருந்து கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அந்த பைபிளின் பின்னால் அவன் ஆசைப்பட்ட ஸ்போர்ட்ஸ் காரின் சாவியும் அதை முழுத்தொகையையும் கொடுத்து பட்டமளிப்பு நாளில் வாங்கியதற்கான ரசீதும் இருந்தன.

அடியில் ஒரு வாசகம் 'அன்பு மகனுக்கு ஆசீர்வாதங்களுடன் அப்பா' என்றிருந்தது. அப்பாவையும் அவரின் அன்பையும் நினைத்து அழுவதைத் தவிர, வேறெதுவும் செய்ய முடியவில்லை. ஒருவேளை அந்த அறைக்குள் அப்பா அழைத்துச் சென்ற நாளில் ஸ்போர்ட்ஸ் கார் நின்று இருந்தால் மகனின் கனவு நிறைவேறி இருக்கும். ஸ்போர்ட்ஸ் கார் என்ற குறியீட்டை மனதுக்குள் வைத்திருந்த மகனுக்கு பைபிளுக்குப் பின்னால் அதன் சாவி இருக்கலாம் என்று தோன்றவில்லை. இப்படி நாமும் நமக்கு வழங்கப்பட்ட விவரங்களையும் ஆசீர்வாதங்களையும் எத்தனையோ முறை கவனிக்காமல் விட்டு இருக்கிறோம்.

இலக்கை அடைவதற்கு உரிய பாதை ஒன்று மட்டும்தான் இருக்கிறது. அது அடைபட்டுவிட்டது என்று நினைப்போம் என்றால், நம் எண்ணத்தில் ஏதோ கோளாறு இருப்பதாக அர்த்தம். உங்கள் வெற்றியின் வடிவம் நீங்கள் கற்பனை செய்ததுபோல் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது வேறு ஒரு வடிவில் உங்களுக்கு வந்து சேர நீங்களே தடையாக இருந்துவிடாதீர்கள்.

பரீட்சை முடிவுகள் வந்திருக்கின்றன. நீங்கள் நினைத்தது நடக்காமல் இருந்திருக்கலாம். உங்கள் இலக்கை அடைய இன்னும் எண்ணற்ற வழிகள் உங்கள் முன்னே இருக்கத்தான் செய்கின்றன.

கழற்றி எறியுங்கள் அந்தக் கடிவாளத்தை...

ஆள்வதற்கு இந்த உலகமே இருக்கிறது!

நீயும்... நானும்! - கோபிநாத்

இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்னதாக ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். சில கேள்விகளுக்குப் பதில் எழுத வேண்டும். கேள்விகளுக்கான பதில் எழுத ரொம்ப நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதிகபட்சம் ஒரு கேள்விக்கு ஒரு நிமிடம் எடுத்துக்கொள்ளலாம்.

ஆரம்பத்திலேயே இவ்வளவு நிபந்தனைகளா என்று கேட்காதீர்கள். எனக்கு இந்த விஷயத்தைச் சொன்னவரும் இப்படித்தான் நிபந்தனைகள் விதித்தார். சரி, கேள்வி களுக்குச் செல்லலாம்.

முதல் கேள்வி: உலகின் டாப் 5 பணக் காரர்கள் யார்?



இரண்டாவது கேள்வி: நோபல் பரிசு பெற்ற ஐந்து பேரை எழுதுங்கள்?

மூன்றாவது கேள்வி: ஆஸ்கர் விருது பெற்ற ஐந்து பேரை சொல்லுங்கள்?

நான்காவது கேள்வி: உலக அழகிப் பட்டம் பெற்ற ஐந்து பேரை ஞாபகம் இருக்கிறதா?

கடைசிக் கேள்வி: இதுவரை நிலவுக்குச் சென்று வந்தவர்கள் யார் யார்? அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?

நேரம் முடிந்தது. எவ்வளவு பதில்கள் எழுதி இருக்கிறீர்கள்? எவ்வளவு யோசித்தாலும் அநேகமாக எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்து இருக்காது... அல்லது ஞாபகம் இருக்காது. பாதி பதில் எழுதிய வர்கள், 30 சதவிகிதம் விடை தெரிந்தவர்கள், முக்கால்வாசிக் கிணறு தாண்டியவர்கள் இருக் கலாம்.

இந்தக் கேள்விகளுக்கான பதிலாக இருக்கிறவர்கள் யாரும் சாதாரண மனிதர்களாக இருக்க முடியாது. ஒவ்வொருவரும் அவர்கள் துறையில் மிகப் பெரிய சாதனை செய்தவர்கள்தான். காலத்தாலும், வரலாற் றாலும் மறக்க முடியாத, மறக்கக் கூடாத மனிதர்கள்தான். ஆனாலும், ஞாபகத்துக்கு வரவில்லையே? இவர்கள் செய்த சாதனைகள், கிடைத்த பாராட்டுக்கள், ஊடக வெளிச்சம்... இப்படி எல்லாமும் நம்மால் மறக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு ஏன்? நேற்று காலை நாம் படித்த செய்தித்தாளில் வந்த தலைப்புச்செய்திகூட நிறையப் பேருக்கு மறந்துபோய் இருக் கலாம்!

இப்போது மீண்டும் பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். அதே நிபந்தனைகள்தான். ஐந்து கேள்விகள். அதிகபட்சம் ஒரு கேள்விக்கு ஒரு நிமிடம் எடுத்துக்கொள்ளலாம்.

முதல் கேள்வி: நீங்கள் கஷ்டப்பட்டபோது துணை நின்று தோள்கொடுத்த ஐந்து நண்பர்களின் பெயர் என்ன?

இரண்டாவது கேள்வி: நீங்கள் மிகவும் நேசிக்கிற... மரியாதை செய்கிற ஐந்து ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா?

மூன்றாவது கேள்வி: உங்களோடு நேரம் செலவழிக்க விரும்பும் ஐந்து நபர்கள் யார்... யார்?

நான்காவது கேள்வி: உங்கள் வாழ்க்கைக்குத் தேவைப்படுகிற, உபயோகமான விஷயங்களைச் சொல்லிக் கொடுத்த ஐந்து நபர்கள் யார்?

கேள்வி எண் ஐந்து: அலுவலகச் சூழலில் ஏற்படும் சிரமங்களை, பணிச்சுமையை உங்களோடு யார் பகிர்ந்துகொள்கிறார்கள்?

கேள்வி முடிந்தது. அநேகமாக உங்கள் அனைவரிடமும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் இருக்கலாம். குறைந்தபட்சம் முக்கால் வாசிக் கேள்விகளுக்காவது நிச்சயம் பதில் இருக்கும்.

இவர்கள் நம்முடைய ஞாபகத்துக்கு வருவதற்கு உடனடிக் காரணம் ஒன்றே ஒன்றுதான். நம் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியதில் நம் அருகில் இருந்த இந்தச் சாதாரண மனிதர்களுக்கு நிறையப் பங்கு இருக்கிறது. நம் வாழ்க்கையில், கல்வி யில் தொழிலில், முயற்சிகளில் போராட்டங்களில் பங்கெடுத்துக்கொள்வது மகாபுருஷர்கள் இல்லை... மிகச் சாதாரண அண்டை வீட்டு மனிதர்கள்தான்.

யோசித்தால்கூட ஞாபகம் வர மறுக்கிற மனிதர் களுக்கு நாம் கொடுக்கிற முக்கியத்துவத்தையும்,மரியாதை யையும் நம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துகிற மனிதர்களுக்குப் பல நேரங்களில் தருவது இல்லை. அவர்கள் நமக்கு அருகில் இருப்பதாலோ என்னவோ, அவர்களது மகத்துவம் மிகச் சாதாரணமாகப் பார்க்கப் படுகிறது.

வீட்டில் நடக்கிற வைபவங்கள், சுபகாரியங்கள் இவற்றில்கூட குடும்பத்துக்குள் இருக்கிற வி.ஐ.பி-க்கள் அல்லது வெளியில் இருந்து வரும் முக்கியஸ்தர்களுக்குத்தான் முதல் வரிசை தரப்படுகிறது. அவர்களின் ஆதரவு வேண்டும், அவர்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும், அதன் மூலம் எதிர்காலத்தில் சில காரியங்களைச் சாதித்துக்கொள்ள முடியும் என்று நமக்குள் ஏதோ ஒரு மனக்கணக்கு ஓடுகிறது.

எல்லோருக்கும் முக்கியமானவராக இருக்கும் ஒரு மனிதரின் நெருக்கமான நண்பராக நம்மைக் காட்டிக்கொள்வதன் மூலம் ஒரு சமூக அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கையோடுதான் நம் நடவடிக்கைகள் நடக்கின்றன. இந்த புத்திசாலித் தனமான திட்டத்துக்கு முன்னால் இந்த இடத்துக்கு உயரவும், வளரவும் உறுதுணையாய் நின்ற, இன்னும் நிற்கிற சாமானிய மனிதர்கள் மறக்கப் படுகிறார்கள்.

இங்கு ஒரு விஷயத்தை ஆழமாகக் கவனிக்க வேண்டும். எல்லோரும் கொண்டாடும் அந்த முக்கியமான மனிதருக்கு நீங்கள் பத்தோடு பதினொன்றுதான். அவரால் உங்களுக்கு நடக்கப் போகும் சாதகங்கள் என்று நீங்கள் வைத்து இருக்கும் பட்டியலில் ஒன்றுகூட நடக்காமல் போகலாம். ஆனால், அருகில் இருக்கிற உங்களது பொருட் படுத்தாமையைக்கூட உணராமல் உங்களை நேசிக்கிற அந்தச் சாதாரண மனிதர்கள்தான் கடைசி வரை உங்கள் வாழ்க்கையில் பல சிறப்பான மாற்றங்களை உருவாக்கப் போகிற வர்கள்.

இந்தக் குணம் இளைஞர்கள் உலகம் வரை விரிந்துகிடக்கிறது. நிறையப் பணம் வைத்திருக்கிற, அதிகாரம் செய்யும் தகுதி இருக்கிற நண்பனைக் கொண்டாட, அவனைச் செவிமடுக்கத் தயாராக இருக்கும் பலரும்... எல்லா காலத்திலும் துணை நிற்கிற அந்த எளிமையான நண்பனைக் கொண் டாடுவது இல்லை. அவன் எப்படியும் என்னோடு தான் இருப்பான் என்ற அலட்சியமும் பொருட் படுத்தாமையும் இயல்பாகவே நமக்கு வந்து விடுகிறது.

நட்பிலும் சரி, உறவிலும் சரி, பெரும்பாலும் பலம்கொண்ட மனிதர்களின் குறைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. குற்றங்கள் மன்னிக்கப்படு கின்றன. அநேக நேரங்களில் சாமானிய மனிதர் களை, கூடவே இருக்கிற நல்ல இதயங்களிடம் குற்றம் காணுவதும், குறை சொல்வதும் நமக்குச் சுகமாக இருக்கிறது.

அருகில் இருக்கிற மனிதன் அரிதானவனாக இல்லை என்பதற்காக அவன் முக்கியமானவன் இல்லை என்று பொருள்கொள்ள முடியாது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வளர்ந்த பிறகு கிடைக்கிற உறவுகள் உங்களிடம் எதையோ எதிர் பார்க்கின்றன. உங்கள் வளர்ச்சிக்காக உதவிய இதயங்களை அந்தக் காலகட்டத்தில் கவனிக்கத் தவறாதீர்கள். அவர்களின் தவறுகளையும் குறை களையும் மன்னிக்கவும் மறக்கவும் பழகுங்கள்.

இரண்டு நண்பர்கள் ஒரு பாலைவனத்தில் பயணித்துக்கொண்டு இருந்தபோது தண்ணீர் குடிப்பதில் சண்டை வந்தது. அதில் ஒருவன் இன்னொருவனை அடித்துவிட்டான். அடி வாங்கியவன் அழுதுகொண்டே 'என் நண்பன் என்னை அடித்துவிட்டான்' என்று பாலைவன மணலில் எழுதிவைத்தான். சிறிது நேரம் கழித்து ஓரிடத்தில் ஆழமான பள்ளத்துக்குள் தவறி விழப்போனான் அடிவாங்கியவன்... சடாரென ஓடி வந்த நண்பன், உயிரைப் பணயம்வைத்து அவனைக் காப்பாற்றினான்.

இப்போது நண்பன் அருகில் இருந்த பாறை யில் செதுக்கிவைத்தான், 'என் நண்பன் என்னைக் காப்பாற்றினான்' என்று. காப்பாற்றிய நண்பனோ, 'நான் உன்னை அடித்ததை மண்ணிலும் காப்பாற்றியதைப் பாறையிலும் ஏன் எழுதிவைத்தாய்?' என்று கேட்டான்.

'நீ எனக்கு இழைத்த தீங்கு காற்றால் மறைந்து போகட்டும் என்று மண்ணிலும், நீ செய்த உதவி மறக்கப்படக் கூடாது என்பதற்காகப் பாறையிலும் எழுதிவைத்தேன்' என்றான் நண்பன்.

எளிய மனிதர்கள் உங்களுக்குச் செய்தவற்றை இதயப் பாறைகளில் செதுக்கிவையுங்கள்.

நம் வாழ்க்கையில் மிகப் பெரிய, மிகச் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்துவது மகா புருஷர்கள் அல்ல... அருகில் இருக்கிற சாமானியர்கள்தான். அவர்களை முக்கியமானவர்களாக நடத்துங்கள்!

நீயும்... நானும்! - கோபிநாத்

அர்க்கான்சசில், ஒருவர் தண்ணீர் கேட்டு நாம் இல்லை என்று சொன்னால், அது சட்டப்படி தவறு. அங்கே, பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் 'பாப் கட்' செய்து கொண்டால் அவரது சம்பள உயர்வு கட்.

நார்த் டகோட்டாவில், ஷூக்களை அணிந்துகொண்டே தூங்குவது சட்ட விரோதச் செயல்.

ஐயோவாவில், ஒருவர் ஐந்து நிமிடங் களுக்கு மேல் தொடர்ந்து முத்தம் கொடுக்கக் கூடாது.

கலிஃபோர்னியாவில் ஒரு பெண் ஹவுஸ்கோட் அணிந்துகொண்டு கார் ஓட்டக் கூடாது.

பொது இடத்தில் ஏப்பம்விட்டால், குற்றம். பயன்படுத்திய உள்ளாடையினால் கார் கழுவுவது குற்றம் என்று உலகத்தில் பல்வேறுவிதமான சட்டங்கள் உண்டு.

இவற்றைப் படிக்கிறபோது, இரண்டு விஷயங்கள் தோன்றும். இப்படி எல்லாம்கூடவா சட்டம் போடுவார்கள் என்பது ஒன்று. இரண்டாவது, நம் நாட்டிலும் இப்படி நிறையச் சட்டங்கள் இருந்தால் நாடு நன்றாக இருக்குமே என்று.



அமெரிக்காவில் கார்கள் வரிசையாகச் செல்லும். ஐரோப்பாவில், சிக்னலைத் தாண்டிச் செல்ல மாட்டார்கள்.

இந்தச் சட்டங்களுக்குப் பின்னால் இருக்கிற மனோநிலை, மக்களுக்கான வாழ்வியல் சூழல் இரண்டையும் கவனித்துப் பார்க்க வேண்டும். கோட்பாடுகளால் உருவாக்கப்பட்ட சமுதாயங்களின் கொள்கைகள் நம்மை எப்போதுமே ஈர்க்கின்றன. சமூக விழுமியங்களாலும் நன்னெறி களாலும் வார்க்கப்படுகிற நம்முடைய சமூக அமைப்பை நாம் பெரிதாக எண்ணுவது இல்லை.

எல்லாவற்றையும் சட்டங்களால் ஒழுங்குபடுத்திவிட முடியும் என்றால், இந்த உலகில் குற்றங்களே இல்லாமல் இருந்திருக்கும். சட்டங்களால் மக்களை இயக்குகிற சமூக அமைப்பு அவ்வளவு திருத்தமானது அல்ல. சட்டங்களும் கட்டுப்பாடுகளும் - நெறிமுறைகளாக, வாழ்வியல் போதனைகளாகப் பயிற்றுவிக்கப்படுகிற சமூகம்தான் தன்னை நாகரிக சமுதாயமாகப் பார்த்துக்கொள்ள முடியும்.

முன்பு எல்லாம் பள்ளிக்கூடங்களில் நீதிபோதனை வகுப்பு என்று ஒரு பீரியட் உண்டு. இப்போது எல்லாம் அது நடக்கிறதா என்று தெரியவில்லை. அது பொறியியல் படிப்பில் சேரவும், மருத்துவக் கல்லூரியில் ஸீட் வாங்கவும் பயன்படப்போவது இல்லை என்பதால், கண்டுகொள்ளாமல்விடப்பட்டது.

ஒரு ஜனநாயகத்தன்மை என்பது நெறிமுறைகளை உணர வைக்கிற சித்தாந்தங்களை உள்ளடக்கியது. நம்முடைய அரசியல் அமைப்புகூட ஒரு தனி மனிதன் நல்லவனாக, தேச நலனில் அக்கறை கொண்டவனாக, சுயநலம் அற்ற மனிதனாக வளர்வதில் தார்மீகப் பொறுப்புகளோடு நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கிறது.

ஆனால், தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதை ஒரு நெறிமுறையாக உணர்த்த வேண்டிய நம் சமூக அமைப்பு, தண்டனை தருவதால் உடனடி நிவாரணம் பெறும் அவசர மனோபாவத்துடன்தான் இயங்குகிறது. பள்ளிக்கூடங்களில், கல்லூரி களில் இப்படி எல்லா இடங்களிலும் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது.

தாமதமாக வந்தால் தண்டத்தொகை கட்ட வேண்டும் என்ற நடைமுறை ஒரு கட்டுப் பாடாகப் பார்க்கப்படுகிறதே அன்றி, நேரம் தவறுதல் என்பது தீய பழக்கம் என்ற நெறி முறையைச் சொல்லித்தருவது இல்லை. தண்டத் தொகைக்குப் பயந்து பள்ளிக்கூடத்துக்குச் சரியான நேரத்துக்கு வர வேண்டும் என்று நினைக்கிற மாணவனின் மனோபாவத்தில், ஒழுங்கீனமாக நடந்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சமும் வருவது இல்லை.

கோட்பாடுகளால் உருவாக்கப்பட்ட மேற் கத்திய நாடுகள் பலவற்றின் மனோபாவம் இதுதான். சட்டத்தையும் கட்டுப்பாடுகளையும் பிரம்புபோலக் கையில் வைத்துக்கொண்டு ஆட்டு மந்தைகளை அடித்து ஓட்டுகிற முறைமைக்கு நாமும் பயணித்துக்கொண்டு இருக்கிறோம்.

எல்லா மட்டங்களிலும் தவறோடு தண்டனை தொடர்புபடுத்தப்படுகிறது. இந்தத் தவறை நான் செய்தால் எனக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற கோட்பாட்டுச் சிந்தனைக்கு முன்னால், என் தவறால் அடுத்தவன் பாதிக்கப்படுவான் என்று உணர வேண்டிய நன்னெறிச் சிந்தனை பொய்த்துப்போகிறது. உண்மையில், கோட்பாடுகளை முன்வைக்கிற சமூகங்களின் சட்டங்களைவிட, சமூக விழுமியங்களை முன்வைக்கிற நமது சமூகத்தில் நன்னெறிகளாக, போதனைகளாக நம் கூட்டங்கள் வேறு வடிவில் விரிந்துகிடக்கின்றன.

துரதிருஷ்டவசமாக நம் பள்ளிக்கூடங்கள் அதை வெறும் மனப்பாடச் செய்யுள் பகுதியாக மாற்றிவைத்து இருக்கிறது. திருக்குறளிலும், ஆத்திசூடியிலும், திருவாசகத்திலும், நன்னெறி நூல்களிலும் இன்னும் பல இதிகாசங்களிலும், பாட்டி சொன்ன கதைகளிலும் கொட்டிக்கிடக்கிறது நமக்கான வாழ்க்கையும் நெறியும். அதை எந்தச் சட்டமும் சொல்லித்தர முடியாது.

இந்த உடையைத்தான் அணிந்துகொள்ள வேண்டும், இப்படித் தான் நடந்து செல்ல வேண்டும் என்று பல்வேறு சட்டங்களை மேற்கத்திய நாடுகள் முன்வைத்து இருக்கின்றன. அதில் விநோதமான பல சட்டங்களும் உண்டு.

கோட்பாடுகளால் உருவாக்கப்பட்ட அந்தச் சமூகங்கள் எதையும் சட்டத்தின் வழியாகச் சந்திக்கின்றன. இங்கு தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுக்கவில்லை என்றால் தண்டனை என்று சட்டம் இல்லை. எதிர் வீட்டுக்காரரோடு நட்பு பாராட்டவில்லை என்றால் குற்றம் என்று இல்லை. 'வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவில்லை என்றால், நீ குற்றவாளி' என்று வீட்டுக்கு நோட்டீஸ் வராது. மனைவியை முறை வைத்து முத்தமிட வேண்டும் என்று அரசு ஆணையிடாது. நம் சமூகம் நன்னெறிகளால் வளர்ந்த சமூகம்.

நம்மைச் சட்டம் கவனித்துக்கொண்டு இருப்பதை மனசாட்சி கவனித்துக்கொண்டு இருக்கிறது. 'உன்னை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்துத் தவறு செய்யாதே; மேலே இருந்து ஒருவன் பார்த்துக்கொண்டே இருக்கிறான்' என்று பெரியவர்கள் சொல்வார்கள். சட்டத்தைவிட இந்த மனோபாவத்துக்குச் சக்தி அதிகம் என்றே தோன்றுகிறது.

எது சரி என்றும் எது தவறு என்றும் உணரவைக்கிற, புரிந்துகொள்ளத் தூண்டுகிற எல்லாமும் நம் கதைகளில், முன்னோர்களின் வாழ்க்கையில் நிரம்பிக்கிடப்பது நமது வரப்பிரசாதம். சட்டங்கள் நம்மை ஆள்வதைவிட, சமூக வாழுமிடங்கள் நம்மை ஆள்வது சிறந்தது.

மனித உரிமை மீறல்களுக்கு, தனி மனித உரிமையை மீட்டெடுப்பதற்கு, ஏற்றத்தாழ்வுகளை உடைப்பதற்கு, தீய சக்திகளை ஒடுக்குவதற்குச் சட்டங்கள், தண்டனைகள் கொண்டுவரப்பட்ட இந்தத் தேசத்தில், சக மனிதனை நேசிக்கவும் அவனை மரியாதை செய்யவும்கூட சட்டங்கள் வருகிற நாள் தூரத்தில் இல்லை.

நமக்கும் நம் வாழ்க்கைச் சூழல்களுக்கும் அது நிச்சயமாக நல்லதல்ல. அக்கம்பக்கம் சட்டம் என்னைக் கண்காணிக்கிறதா என்று கவனித்துக்கொண்டே வாழ்வதைவிட, மனசாட்சிக்கும் அதன் குற்ற உணர்ச்சிக்கும் மரியாதை கொடுக்கிற வாழ்க்கை மேலானது.

இது கோட்பாடுகளின் சமூகம் அல்ல... சமூக விழுமியங்களின் சமூகம், நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் துவக்குங்கள். போலீஸ்காரர் கையில் இருக்கிற பிரம்பைவிட, ஒளவைப் பாட்டி பிடித்துக்கொண்டு நிற்கிற கம்புக்குப் பலம் அதிகம்!

நீயும்... நானும்! - கோபிநாத்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம். ஒரு சர்வதேசக் கருத்தரங்கில் கலந்துகொள்ளப் போயிருந்தேன். Dating Harbour என்று ஓர் அழகான இடம். ஒரு பக்கம் படகுகள் சீறும்... மறு பக்கம் ஹோட்டல்களில் கேளிக்கைகள் களைகட்டும்.

நம் ஊர் கோயில் குளத்தில் இருக்கிற படிக்கட்டுகள் மாதிரி அங்கும் படிக்கட்டுகள் நிறைய இருக்கும். ஜோடி ஜோடியாக, குடும்பம் குடும்பமாக நிறையப் பேர் உட்கார்ந்திருப்பார்கள்.

ஒருநாள் மாலை நான்கு மணி இருக்கும் கருத்தரங்குக் கூடத்தில் இருந்து வெளியே வந்து அந்தப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தேன். சரியான குளிர். ஐந்து நிமிடங்கள் இருக்கும், அழகான வெள்ளைக்காரப் பெண் வந்து அமர்ந்தாள். என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். நானும் ஒரு ஹலோ சொன்னேன். இரண்டு நிமிடங்கள்கூட இருக்காது எங்கிருந்தோ ஓடி வந்த ஓர் இளைஞன், என் அருகில் இருந்த பெண்ணை இதழோடு இதழ் பதித்து முத்தமிட்டான். மிக நீண்ட முத்தம். அவளைக் கட்டி அணைத்தான். இருவரும் இறுகத் தழுவிக்கொண்டனர்.

அருகில் நான் இருப்பதையோ, அங்கு நிறையக் கூட்டம் இருப்பதையோ அவன் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அதற்குப் பிறகுதான் கவனித்தேன். நடந்து போகிறவர்கள், அமர்ந்து இருப்பவர்கள் என எல்லாருமே இறுக அணைத்தபடி, தடவிக்கொடுத்தபடி இருந்தார்கள்.

'என்ன ஊருடா இது... விவஸ்தை கெட்டவனுங்க' என்று கோபம் எனக்கு. அரை மணி நேரம் கழித்து கருத்தரங்கில் என்னோடு பங்கேற்ற ஆஸ்திரேலிய நண்பன் வந்தான். அவனிடம், இருந்த கோபத்தை எல்லாம் கொட்டினேன், 'என்ன கலாசாரம் இது? ஆணும் பெண்ணும் இப்படி அணைத்துக்கொண்டு திரிகிறார்கள். இதைப் பார்த்து எங்கள் மக்களும் கெட்டுப்போகிறார்கள்' என்றேன்.

அவன் என்னிடம், 'உங்கள் ஊரில் ஆண், பெண் உறவின் கலாசாரம் என்ன?' என்றான். நான் மௌனமாக இருந்தேன். 'பெண்ணை நேசிப்பதும், அவளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதும் நல்ல கலாசாரம்தானே' என்றான். 'ஆமாம்' என்று தலையாட்டினேன்.



'அதைத்தான் இவர்களும் செய்துகொண்டு இருக்கிறார்கள். இதழோடு இதழ் பதிப்பது முத்தம் பரிமாறுதல் மட்டுமல்ல. வெப்பத்தைப் பரிமாறுதலும்தான். உடல்ரீதியாகத் தன்னைவிட மென்மையான பெண்ணை அணைத்து அவளுக்குத் தடவிக்கொடுத்து வெப்பத்தை அவள் உடலுக்குத் தருகிறான்.' இந்த விஷயத்தை அவன் சொன்ன போது குளிர் நான்கு டிகிரியாக இருந்தது. எனக்கும் உடம்பு நடுங்கியது.

'பெண்களை மட்டுமல்ல... குழந்தைகளையும் அணைத்துக்கொண்டும், தடவிக்கொடுத்துக்கொண்டும் இருப்பதைக் கவனியுங்கள் . இது குளிர்ப் பிரதேசம்... இங்கே அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிற முறை இது. இதை 38 டிகிரி வெப்பத்தில் நீங்கள் செய்தால் அது உங்கள் முட்டாள்தனம். அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது' என்றான். எனக்குப் பொட்டில் அடித்த மாதிரி இருந்தது.

அதென்னவோ தெரியவில்லை. நம்மைவிடப் பலசாலியாக நம்பும் யார் செய்கிற காரியமும் சரி என்றே நமக்குத் தோன்றுகிறது. நம் சொந்த அடையாளம், நம் அபிப்ராயங்கள் எல்லாவற்றையும் தூக்கித் தூர எறிந்துவிட்டு, அடுத்தவருடைய ஷூவுக்குள் அடைந்துகொள்வதில் பேரானந்தம்.

குறைபாடுகளை ஒளித்துவைத்துக்கொண்டு, வெளிப்படுத்துகிற முகமும் பேச்சும் பொய்யானவை. நீங்கள் நீங்களாக வெளிப்படும்போதுதான் ஆரோக்கியமான தோழமை அமைகிறது. அந்த தோழமைக்குள் அழகியல் என்ற அம்சத்தைத் தாண்டி அறிவுப் பகிர்தல் நடக்கிறது.

எதிர்பாலின நட்பு, ஈர்ப்பு தொடர்பானதும்தான் என்றாலும், அடுத்த தலைமுறைக்குள் அதிகமான அறிவுப் பகிர்தல் நடக்க, பாசாங்குகளைக் குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது ஆண்-பெண் நட்பு குறித்தது மட்டுமல்ல... தேசத்தின் வளர்ச்சி தொடர்பானதும் ஆகும்.

எனக்கு என்னவெல்லாம் தெரியும் பார் என்ற தொனியில் எதிர்பாலின நண்பரோடு அறிவியல், அரசியல், சமூகம், உலக வரலாறு என்று பல்வேறு விஷயங்கள் இப்போதும் பேசப்படுகின்றன. ஆனால், இவை பெரும்பாலும் நான் எவ்வளவு தகவல்கள் தெரிந்துவைத்திருக்கிறேன் பார் என்ற 'நிரூபிக்கும்' தோரணையாகவே நடக்கிறது. இந்த அலங்காரங்களைக் கழற்றிவைத்துவிட்டு 'கருத்துப் பரிமாற்றம்' என்ற அளவில் நடைபெறுவது குறைவுதான்.

பெண் தோழிக்குப் பிடித்த மாதிரி உடை அணிந்துகொள்வது, அருகில் வரும்போது ஆங்கிலம் பேசுவது, பிறந்த நாளுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கித் தருவது, தினமும் காலையில் Good morning Sms அனுப்புவது, ஏதாவது பிரச்னை என்றால், உடனடியாகப் போய் உதவுவது, கவிதைப் புத்தகங்கள் பரிமாறிக்கொள்வது இந்த எல்லாப் பரிவர்த்தனைகளும் அழகானதுதான்.

இந்த ஈர்ப்பு எல்லையைத் தாண்டி, வெறும் சென்ட்டிமென்ட் நட்புறவைத் தாண்டி நீயும், நானும் அறிவுள்ள இரண்டு மூளைகள் என்ற அளவுகோலிலும் நட்பு அளக்கப்பட வேண்டும்.

ஆண்-பெண் தோழமையை இந்தியச் சமூகம் சந்தேகத்தோடுதான் பார்க்கிறது என்பது ஓரளவு உண்மைதான். ஆனால், போலியான எந்த வெளிப்பாடுகளையும் சமூகம் சந்தேகத்தோடுதான் கவனிக்கிறது. உலகம் முழுவதும் அப்படித்தான்.

ஆண்-பெண் தோழமை மிகவும் அற்புதமான, தேசிய விருத்திக்கான ஒரு நட்புறவு. இந்தத் தோழமையில் வெளிப்படுகிற உடல் மொழி, பேச்சு, தொடுதல் இவை அனைத்தும் அந்தத் தோழமை எவ்வளவு யதார்த்தமானது என்பதைச் சொல்லிவிடுகிறது.

இந்தியச் சமூகத்தின் அழுக்குப் படிந்த பழைய கட்டுக்கோப்புகளை நான் உடைக்கிறேன் என்ற மனோபாவத்திலோ, நான் ரொம்ப மாடர்ன் என்ற அளவிலோ, எதிர்பாலினத் தோழமை என்பது ஸ்டேட்டஸ் சிம்பல் என்ற உணர்வோடோ இயங்குகிற தோழமைக்குள் உண்மை இருக்க வாய்ப்பு இல்லை.

இயக்குநர் கரு.பழனியப்பன் 'நீயா... நானா' நிகழ்ச்சியில் ஒரு முறை சொன்னார், 'என் தந்தையிடம் எதையெல்லாம் சொல்ல முடிகிறதோ, அதெல்லாம் சரி. அவரிடம் நான் எதை மறைக்க முயல்கிறேனோ, அது தவறு' என்று.

உங்கள் எதிர்பாலினத் தோழமை குறித்து இயல்பாக உங்கள் வீட்டில் சொல்ல மனசு இடம் கொடுத்தால் அந்த நட்புக்குள் ஈர்ப்பைத் தாண்டிய அறிவுப் பகிர்தல் அவசியம் நடக்கும்.

நாகரிகம், உறவு பேணுதல், வசீகரித்தல், புனைவுகள் இன்றி நடந்துகொள்ளல், தன்மையாகப் பேசுதல், இடங்கண்டு செயல்படுதல் போன்றவற்றை வேறு யாரிடமும் கற்றுக்கொள்ள வேண்டிய நெருக்கடிகள் நமக்கு இல்லை.

அந்தப் பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் நமக்கு நீண்ட வரலாறு இருக்கிறது.

அற்புதமான ஆண்-பெண் தோழமைஅறிவுப் பகிர்தலோடு நடக்கட்டும்!

நீயும்... நானும்! - கோபிநாத்

தமிழகத் தலைநகரத்தின் பிரதானமான சாலை அது. சிவப்பு விளக்கு விழுந்தவுடன் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிற்கின்றன. எல்லாருக்கும் ஏதோ ஒரு அவசரம் இருக்கிறது. ஒரு பக்கம் சுட்டெரிக்கும் வெயில். சிக்னல் விளக்கில் 40, 39, 38 என விநாடிகளின் எண்ணிக்கை குறைவதை எல்லாரும் ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.





நீளமாக நிற்கும் வாகன வரிசையில் முதலில் நிற்கிறது ஒரு கார். 60 வயது தாத்தா ஒருவர் ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி பச்சை விளக்குக் காகக் காத்திருக்கிறார். 5, 4, 3என்று வந்துகொண்டு இருக்கையில் எல்லாரும் ரேசுக்குத் தயார் ஆவதைப்போலத் தயாராக நிற்கிறார்கள். பச்சை விளக்கு எரிகிறது... முன் காரில் இருக்கும் தாத்தா கிளட்ச்சை மெதுவாக ரிலீஸ் செய்து, ஆக்சிலேட்டரை அழுத்துகிறார், இரண்டு முறை உதறிய அவரது கார் நின்றுவிட்டது.

அடுத்த நொடிக்குள் ஹாரன்கள் அலறுகின்றன. இன்னும் இருக்கும் 30 விநாடிகளுக்குள் போயாக வேண்டும். ஆனால், தாத்தாவின் வண்டி நகர மறுக்கிறது. ஹாரன்கள் தொடர்ந்து அலறுகின்றன. பின்னால் இருக்கும் இளைஞர் ஏதோ சொல்லித் திட்டுகிறார். தாத்தாவை நோக்கியே எல்லா கண்களும் ஆத்திரமாகப் பார்க்கின்றன. அவர் முகத்தில் பதற்றம். வேகவேகமாக சாவியைத் திருகுகிறார். ஆக்சிலேட்டரை மிதித்துப் பார்க்கிறார். ஒன்றும் நடக்கவில்லை. பின்னால் இருப்பவர்கள் கத்துகிறார்கள்.

அந்தப் பெரியவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிக்னல் மறுபடி சிவப்புக்கு வந்துவிட்டது. வழி கிடைக் காத பலரும் தாத்தாவைத் திட்ட... தர்மசங்கடத்துடனும் அவமானத்துடனும் என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கிறார்... டிராஃபிக் கான்ஸ்டபிள் உதவியுடன் வண்டி ஓரம் கட்டப்படுகிறது.

வண்டியைத் தள்ள முடியாமல் அந்தப் பெரியவர் தள்ளிக்கொண்டு போனபோதுகூட அவரைச் சிலர் கோபமாகத்தான் பார்த்தார்கள். அடிக்கடி சிக்னல்களில், அவசரமான சாலைகளில், நெருக்கடியான தெருக்களில் இதுபோன்று வண்டிகள் நின்றுபோகும். வண்டியை ஓட்டி வந்தவர் தவியாகத் தவிக்க... அவரை இன்னமும் பதற்றமடையும் விதமாக ஹாரன்கள் மூலம் எல்லாரும் எதிர்ப்பு காட்டுவார்கள். அந்தப் பெரியவரோ அல்லது வேறு யாருமோ அந்த இக்கட்டான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டம் போட்டுச் செய்யவில்லை. நமது காரும் நாளை அப்படி நின்றுபோகலாம். என்ன செய்தாலும் கிளம்ப மறுக்கலாம்.

எல்லாருக்கும் வேலை இருக்கிறது. ஆளாளுக்கு ஓர் அவசரம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த ஹாரன்களுக்குப் பின்னால் ஒரு எளியவனின் இயலாமையை ஏளனம் செய்கிற நம்முடைய மனப்போக்குதான் தெரிகிறது. ஐயோ! கார் நின்னுபோச்சே என்று அவர் பதறுகிறபோது, இன்னமும் அவரைப் பதற்றப்படுத்த முனைவது எப்படிச் சரியாகும்?

ஆளாளுக்குத் திட்ட, கையைப் பிசைந்துகொண்டு அவமானத்துடன் பெரியவர் நிற்பதைப்போல யார் வேண்டுமானாலும் நிற்க வேண்டிய நிலை வரலாம். தடித்த இரண்டு உயரமான ஆசாமிகள் பாதையை மறித்துக்கொண்டு, 'ஏ! நீதான் என் காரை இடிச்சடா...' 'யாரைப் பார்த்துடா டான்னு சொல்ற?' என்று உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டு இருக்கிறபோது, பெரும்பாலானவர்கள் வண்டியை வளைத்துக்கொண்டு அந்த இடத்தைத் தாண்டிச் செல்கிறோம்.

தாத்தா வண்டி தடுமாறி நிற்கிறபோது எழுப்பப்பட்ட அந்த எதிர்ப்பு ஹாரன்கள் இப்போது குறைவாகவே ஒலிக்கின்றன. பலசாலியைப்போல பார்வைக்குத் தெரிகிற, ரோட்டை மறித்து காரை நிறுத்தி இருக்கிற அவர்கள் மீது ஆத்திரம் காட்ட ரொம்பவே யோசிக்கிறோம்.

எளியவனாக இருந்தால், அந்தக் கோபம் வெளியே கொப்பளிக்கிறது. பலசாலியாகத் தெரிந்தால் உள்ளுக்குள்ளேயே பொருமிக்கொள்கிறோம். ஒட்டுமொத்தத்தில் பொறுத்துக்கொள்ளலும், சகிப்புத்தன்மையும் இந்தப் பரபரப்பான வாழ்க்கையில் 'அவுட் ஆஃப் சிலபஸ்' ஆகி மன அழுத்தமும் ரத்த அழுத்தமும் எகிறுகிறது.

எல்லாம் உடனே நடந்துவிட வேண்டும். நினைத்தபடி நடந்துவிட வேண்டும், தடையில்லாமல் கிடைத்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள். அதற்கு இடையூறாக எது வந்தாலும் அதில் இருக்கும் நியாயம், தர்மங்களைப் பார்க்காமல் கோபமடையச் செய்கிறது.

ஒருவருக்கு போன் செய்கிறோம். மணி ஒலிக்கிறது... தொடர்ந்து ஒலிக்கிறது அவர் எடுக்கவில்லை. அநேகமாக அவர் வண்டியில் சென்றுகொண்டு இருக்கலாம். நம்மோடு பேச முடியாத இடத்தில் இருக்கலாம்... மருத்துவமனையில் இருக்கலாம்... தொலைபேசியை சைலன்ட் மோடில் வைத்திருக்கலாம் என எதைப்பற்றியும் யோசிக்காமல்... உடனடியாக மீண்டும் மீண்டும் அதே எண்ணுக்கு முயற்சித்துக்கொண்டே இருக்கிற பலரைப் பார்த்திருக்கலாம்.



5 முறை, 6 முறை தொடர்ந்து முயற்சித்துவிட்டு எதிர்முனையில் எந்தப் பதிலும் இல்லை என்ற கோபத்தில் போனைப் போட்டு உடைப்பவர்கள்கூட உண்டு. ஒரு அசாதாரணமான சூழலில், மிக அவசியமான நெருக்கடியில் இருக்கும்போது, அந்தக் கோபம் வருவது இயற்கைதான். சொல்ல விரும்பும் தகவலை எதிர்முனையில் இருப்பவருக்குத் தெரிவிக்கத் தேவையான கால அவகாசம் இருக்கும்போது தொடர்ந்து போன் செய்கிற பழக்கம் பலரிடமும் உண்டு.

என் வேலை நடக்க வேண்டும் என்கிற வேகம்... எதிர்முனையில் இருப்பவன் என்ன செய்வான் என்பதை யோசிக்கவே அனுமதிப்பது இல்லை. பரபரப்பாக இயங்குவதாக நினைத்துக்கொண்டு பதற்றமாக, எரிச்சலூட்டும் விதமாக நடந்துகொள்கிறோம் என்பதே உண்மை. இதை எல்லாம் தாண்டி என் வேலையும் என் நேரமும்தான் முக்கியம் என்ற சுயநலமே அத்தனைக்கும் காரணம். நான் சிறப்பு அந்தஸ்து பெற்றவனாக நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

ஆனால், ஜனநெருக்கடி அதிகம் நிறைந்த, வேலைப் பளு கூடுதலாக இருக்கிற சமூகச் சூழலுக்குள் பொறுமையாக இல்லாமல், விட்டுக்கொடுக்காமல், பொறுத்துக்கொள்ளாமல் வேலை நடக்காது என்பதை ஏற்றுக் கொண்டு ஆக வேண்டும். காரை மிகக் கவனமாக ரிவர்ஸில் எடுக்கிறபோது எதைப்பற்றியும் கவலைப்படாமல் பின்பக்கம் இருக்கிற சிறிய இடைவெளியில் விருட்டெனப் பாய்கிற இரு சக்கர வாகன ஓட்டியின் மீது எக்கச்சக்கமாக ஆத்திரம் வரும். ஆனால், அதே வேலையை நாமும் பலமுறை செய்திருக்கிறோம்.

அடுத்தவரைப் பதற்றப்படவைப்பதிலும், என் வேலைதான் முக்கியம் என்பதிலும் நமக்குள் நிறையக் குரூரம் ஒளிந்திருக்கிறது. இல்லையென்றால், அந்த அப்பாவித் தாத்தாவின் மீது அவ்வளவு ஆத்திரம் வராது.

நம் இயல்பு வாழ்க்கையை, சௌகரியத்தைப் பாதிக்கிற எதன் மீதும் நமக்குக் கோபம் வருகிறது. பக்கத்தில் இருக்கிற கல்யாண மண்டபத்தில் நாளை நடக்கப்போகும் கல்யாணத்துக்காக இப்போது இருந்தே கத்துகிற ஒலிபெருக்கி எரிச்சலூட்டுகிறது. ஆனால், நம் வீட்டுக் கல்யாணத்தில் இதே வேலையைச் செய்கிறபோது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அது தொந்தரவாக இருக்குமா, 50 அடி தூரத்தில் இருக்கிற மருத்துவமனையில் பெரியவர்கள் எப்படித் தூங்க முடியும் என எத்தனை பேர் அக்கறையோடு யோசித்து இருப்போம்.

நமக்கு அடுத்தவர் எதையெல்லாம் செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ, அது அனைத்தையும் நாம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். எல்லார் வீட்டு வாசலிலும் 'நோ பார்க்கிங்' என்ற பலகை தொங்குகிறது. என் வீட்டு வாசலில் எந்தக் காரணத்தைக்கொண்டும் வேறு ஒருவர் வண்டியை நிறுத்தக் கூடாது என விரும்புகிறோம். ஆனால், நாம் எங்காவது செல்கிறபோது யார் வீட்டு வாசலிலேயோதான் வண்டியை நிறுத்த வேண்டி இருக்கிறது.

இது அதிகமான மக்கள் வாழுகிற, இடவசதி குறைவாக உள்ள தேசம். இங்கு இது நடக்கத்தான் செய்யும். அநியாயங்களுக்கு எதிராக சகிப்புத்தன்மையோடு இருக்க வேண்டாம். ஆனால், வாழ்க்கை யதார்த்தச் சிக்கல்களில் அந்த சகிப்புத்தன்மை அவசியம் ஆகிறது.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சகிப்புத்தன்மையுடன் இருந்துதான் ஆக வேண்டும்.

விரும்பியே இருக்கலாமே!

நீயும்... நானும்! - கோபிநாத்

கேரளாவுக்கு நண்பர்கள் சுற்றுலா செல்கிறார்கள். அழகான இயற்கைச் சூழலில், ஒரு மலையடிவாரத்தில் கூடாரம் அமைத்துத் தங்குகிறார்கள். இரவெல்லாம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கழிகிறது. விடிந்த பிறகு நான்கு பேர் முதுகில் ஒரு பையுடன் மலைஏறத் தயாராகிறார்கள். செங்குத்தாக இருக்கும் மலையில் கிடைக்கும் பிடிமானங்களைப் பிடித்துக்கொண்டு மலை ஏறி, இறங்க வேண்டும்.

அந்த சுவாரஸ்யமான பயணத்துக்காகக் கிளம்பும் நால்வர் குழுவுடன், 'நானும் வருகிறேன்' என்கிறார் ஒரு நண்பர். 'இது கஷ்டம்... இதற்கு முன் இப்படி ஏறிய அனுபவம் உனக்கு இல்லை. அது மட்டுமில்லை; நேற்று இரவு நீ சரியாகத் தூங்கவில்லை. அதனால், ரிஸ்க் எடுக்காதே!' என்கிறது நால்வர் குழு.

'எனக்கு ரிஸ்க் எடுக்கிறதுதான் பிடிக்கும். நீங்க ஏறும்போது, நான் ஏற முடியாதா? இத்துனூண்டு மலைல ஏறணும். அவ்வளவுதானே... நானும் வர்றேன்!' என்கிறார். நால்வர் குழுவுடன் சேர்ந்து மலை ஏற ஆரம்பிக்கிறார்.



அடுத்த நாள் கால் இரண்டும் வீங்கி, காய்ச்சலோடு ஆஸ்பத்திரியில் படுக்க வேண்டி இருந்தது. காரணம், பாதி மலை ஏறுவதற்குள்ளேயே களைத்துப்போன அவர், சக்தி அனைத்தையும் திரட்டி ஒருவழியாக மலையில் ஏறிவிட்டார். ஆனால், ஏறிய உயரம் திரும்பவும் இறங்கியாக வேண்டுமே? அவருடைய ரிஸ்க் எண்ணத்தில் மலை ஏறுவதை மட்டுமே மனதில்வைத்திருந்தார். இறங்குவதுபற்றி எந்தத் திட்டமும் இல்லை. நால்வர் குழு உதவியுடன் படாதபாடுபட்டு இறங்கிய அவர், படுத்திருப்பது ஆஸ்பத்திரியில்!

ரிஸ்க் எடுப்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. சிலருக்கு அது ஒரு புதிய அனுபவம். சிலருக்கு ஒரு த்ரில். சிலருக்கு, 'நான் எப்பேர்ப்பட்ட ஆள் பார்த்தியா?' என்ற பெருமை. கொஞ்சம் பேருக்கு, 'நான் துணிச்சல்காரன்!' என்று நிரூபிக்கிற ஆசை. இன்னும் சிலருக்கு, 'இள வயசுலதான் ரிஸ்க் எடுக்கலாம்' என்ற பொத்தாம் பொதுவான நினைப்பு. தன்னைத் தனித்துவம் மிக்க மனிதராகக் காட்டிக்கொள்ள இன்னும் சிலர் ரிஸ்க் எடுப்பார்கள்.

ரிஸ்க் எடுத்ததால், பலர் மிகப் பெரிய வெற்றி பெற்றார்கள் என்ற தன்னம்பிக்கைக் கதைகள் இங்கு நிறைய உண்டு. ஆனால், அவர்கள் எடுத்த ரிஸ்க் எப்படிப்பட்டது என்பதுதான் முக்கியம்.

ரிஸ்க் எடுப்பது மன உறுதி மற்றும் துணிச்சலோடு மட்டும் தொடர்புடையது அல்ல; நிறையத் திட்டங்களோடும் செயல்முறைகளோடும் தொடர்புடையது. முன்பெல்லாம் ஜல்லிக்கட்டு நடக்கிறபோது மாட்டை அடக்க வருபவர்களைவிட, முன் வரிசையில் நின்று வேடிக்கை பார்ப்பவர்கள்தான் நிறையக் காயப்படுவார்கள். 'நாங்க எல்லாம் எதுக்கும் பயப்பட மாட்டோம்!' என்று காட்டுவதற்காக எடுத்த திட்டம் இல்லாத அந்த மாதிரியான கைப்புள்ள பாணி ரிஸ்க்குகள் காயங்களைத்தான் தரும்.



சன் டி.வி-யின் தலைவர் கலாநிதி மாறன் ரிஸ்க் எடுப்பதுபற்றி அழகான ஒரு விளக்கம் சொன்னார்... 'எனக்கு ரிஸ்க் எடுக்க ரொம்பப் பிடிக்கும். ஆனா, அது எப்படிப்பட்டதுங்கிறதும், அதை எப்படிச் செய்யணும்கிறதும் ரொம்ப முக்கியம். ஆறாவது மாடியில் இருந்து குதிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றால், அது ரிஸ்க்தான். ஆனால், அவ்வளவு உயரத்தில் இருந்து குதித்தாலும் பாதிப்பு ஏற்படாத அளவுக்குப் பாதுகாப்புக் கவசங்களோடு குதிக்கலாம். அதுதான் கால்குலேட்டட் ரிஸ்க் (Calculated Risk)!'

ஆம், வெற்றியாளர்கள் சும்மா ரிஸ்க் எடுப்பது இல்லை. அவர்கள் இன்னும் இன்னும் கூடுதல் திட்டங் களுடன்தான் ரிஸ்க் எடுக்கிறார்கள்.

உண்மையாகச் சொல்லப்போனால், சாதாரணமாக ஒரு விஷயத்தைச் செய்வதைவிட, ரிஸ்க் எடுக்கும்போதுதான் கூடுதலாகத் திட்டம் தீட்ட வேண்டி இருக்கிறது. தெளி வாகச் செயல்படுத்த வேண்டி இருக்கிறது. ரிஸ்க் எடுத்தால் சுவாரஸ்யமானது என்ற அளவுகோலில் பார்க்கப்படுவதால், அதன் சாதக பாதகங்களை ஆராயாமல் விட்டுவிடுகிறோம்.

இன்னொரு முக்கியமான விஷயம், இது போன்ற முடிவுகளில் இலக்குகளை அடைவது மட்டுமே நோக்கமாக இருக்கிறது. தடைகள் ஏற்பட்டால், அதைக் கையாள்வதற்கான உத்தி, திரும்பி வருவதற்கான திட்டம் எதுவும் இருப்பது இல்லை. 'அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்' என்று அசட்டுத்தனமாக முடிவெடுத்துக்கொண்டு, 'எனக்கு அசாத்தியத் துணிச்சல்' என்று மார்தட்டிக்கொள்கிறோம்.

நண்பர்களிடம் பந்தயம் கட்டிவிட்டு, இரவு 12 மணிக்கு சுடுகாட்டில் உட்கார்ந்து இருப்பது, ஜன நெருக்கடியான சாலையில் ஆக்சிலேட்டரை முறுக்கிவிட்டபடி வண்டியை விரட்டுவது, பஸ்ஸின் ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு ஒரு காலைத் தரையில் தேய்த்துக்கொண்டே தொங்குவது, ரயில் வந்துகொண்டு இருப்பது தெரிந்தும், பயப்படாத மாதிரியே முகத்தை வைத்துக்கொண்டு தண்டவாளத்தைக் கடப்பது, கணக்கு வாத்தியார் பைக்கில் காற்றைப் பிடுங்கிவிடுவது இது எல்லாமே த்ரில் வகையறா ரிஸ்க்குகள்தான்.

ரிஸ்க் என்பது அற்புதமான ஒரு விஷயம். அதனை அற்பக் காரியங்களில் விரயம் செய்யாதீர்கள்!

ஒரு வெள்ளைக்காரர், ஆப்பிரிக்காவின் ஆதிவாசிக் கிராமங்களின் வழியே பயணித்துக்கொண்டு இருந்தார். அவருக்கு ரிஸ்க் எடுப்பது என்றால் ரொம்பப் பிடிக்கும். தேர்ந்த நீச்சல் வீரரும்கூட. போகிற வழியில் ஒரு பெரிய ஏரியைப் பார்த்தார். அந்த ஏரியை நீந்திக் கடந்தால், அந்தப் பக்கம் இருக்கும் கிராமத்துக்குப் போகலாம். ஏரியைப் பார்த்தவுடன் குதித்து நீந்த வேண்டும் என்று ஆசை... ஆழம் அதிகமாக இருக்குமோ என்று ஒரு யோசனை. அதனாலென்ன... நீச்சல் தெரியுமே என்று உடைகளைக் கழற்றி வைத்துவிட்டு, உள்ளாடையோடு ஏரிக்குள் டைவ் அடித்து நீந்த ஆரம்பிக்கிறார். பாதி தூரம் போன பிறகு ஏரியின் மறுபக்கம் இருக்கும் ஆதிவாசிகள் அவரை நோக்கிக் கையசைத்து ஆர்ப்பரிப்பதைப் பார்த்து, ஆச்சர்யப்படுகிறார் வெள்ளைக்காரர்.

தண்ணீருக்குள்ளே குட்டிக்கரணம் அடித்து வேடிக்கை பார்ப்பவர்களைக் குஷிப்படுத்துகிறார். ஆதிவாசிகள் கைத்தட்டி மீண்டும் ஆர்ப்பரிக்கிறார்கள். சிறிது நேரத்தில் கரைக்கு வந்த அவருக்கு ஏக வரவேற்பு. கைத்தட்டல்களும் பாராட்டல்களுமாக வெள்ளைக்காரரை எல்லாரும் தட்டிக்கொடுக்கிறார்கள்.

''அடேயப்பா, என்னமா டைவ் அடிக்கிறீர்கள்? பயப்படாமல் எவ்வளவு வேகமாக நீந்துகிறீர்கள்?'' என ஆதிவாசிகள் சொல்ல... ரிஸ்க் வெள்ளைக்காரருக்குப் பெருமிதம். ''எனக்கு டைவ் என்றில்லை... கால்களை மடக்கிக்கொண்டு டைவ் அடிப்பது, அப்படியே அசையாமல் மிதப்பது என நிறையத் தெரியும். வேண்டுமானால், உங்களுக்கும் சொல்லித் தருகிறேன்'' என்றார்.

''நண்பரே, எங்களுக்கும் இந்த டைவ் எல்லாம் தெரியும். நாங்கள் அதற்காக உங்களைப் பாராட்டவில்லை. நூற்றுக்கணக்கான முதலைகள் இருக்கிற ஏரியில், பயப்படாமல் நீந்தி வந்தீர்களே... அதற்குத்தான் இந்தப் பாராட்டு!'' என்று ஆதிவாசிகள் சொன்னதும் வெள்ளைக்காரருக்கு மூச்சே நின்றுவிட்டது.

திரும்பிப் பார்த்தால், நாலைந்து முதலைகள் தலையை வெளியே நீட்டிக்கொண்டு, 'தப்பிச்சிட்டியா?' என்பது போல் நிற்கின்றன.

அந்த வெள்ளைக்காரர் மறுகரையில் இருக்கும் துணியை எடுப்பது எப்படி என்று தெரியாமல், இன்னமும் அங்கே இருக்கும் ஆதிவாசிகள்போலவே சுற்றிக்கொண்டு இருக்கிறார். ஆழம்பற்றி யோசித்தவர், வேறு என்ன ஆபத்து இருக்கும் என்று யோசிக்கவே இல்லை. கணக்குப் போடாமல் ரிஸ்க் எடுப்பவர்கள், தன்னால் எதுவெல்லாம் முடியும் என்று யோசிக்கிறார்களே தவிர, எதுவெல்லாம் முடியாது, அதைச் சரிசெய்ய என்ன வழி என்று யோசிப்பது இல்லை.

புதிதாக யோசியுங்கள், பெரிதாகச் சிந்தியுங்கள். அதற்காக ரிஸ்க் எடுங்கள், அந்த ரிஸ்க் கால்குலேட்டட் ரிஸ்க் ஆக இருக்க வேண்டும்.
ஆம் நண்பர்களே... ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுற மாதிரி இல்லை!

நீயும்... நானும் - கோபிநாத்

கல்லூரிகளில் பேசச் செல்கிறபோது, பெரிய மனிதர்கள் இருக்கிற மேடைகளில் அமர வாய்ப்புக் கிடைக்கிறபோது ஆச்சர்யமான சில மனிதர்களைக் கவனிப்பேன். அமைதியாக இருப்பார்கள். அருகில் வந்து பவ்யமாக ஒருவர் ஏதோ சொல்வார். அதனைக் கவனித்துக் கேட்பார்கள். அதிர்ந்துகூடப் பேச மாட்டார்கள். ஆனால், அவர்கள் சொல்வதை அனைவரும் கேட்பார்கள்... மறுக்காமல் செய்வார்கள்.

அந்தக் கல்லூரியின் நிறுவனராகவோ, அல்லது அந்த நிறுவனத்தின் தலைவராகவோ சகல அதிகாரங்கள்கொண்ட மனிதர்களாக அவர்கள் இருப்பார்கள். அவர்கள் விரல் அசைவுக்குப் பலர் ஓடி வரத் தயாராக இருப்பார்கள். ஆனாலும், அவர்கள் எந்தப் படாடோபமும் இல்லாமல் பாந்தமாக இருப் பார்கள்... நட்பாகச் சிரிப்பார்கள்.

இப்போது ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்குச் சென்று இருந்தபோதும் அப்படி ஒரு மனிதரைப் பார்க்க நேர்ந்தது. மேடையில் பேசுகிற எல்லோரின் பேச்சையும் அவர் கூர்ந்து கவனித்தார். நிகழ்ச்சி முடிந்து வருகிறபோது ஒரு தந்தை தன் மகனுடன் வந்து, 'சார்... இவன் நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான், நீங்க கொஞ்சம் சொல்லுங்க சார்' என்றார். அந்தப் பையனோ, 'அவர் சொல்றது எல்லாத்தையும் அப்படியே கேட்கணும்கிறார். நான் சொல்ற எதையும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறார்' என்றான்.



இந்தப் பிரச்னை நம் வீடுகளின் தினசரிப் பிரச்னைதான். நான் அவர்கள் இருவரையும் அந்தப் பெரியவரிடம் அழைத்துச் சென்றேன். அவர் இவர்களுக்கு என்ன சொல்லுவார் என்று தெரிந்துகொள்ள எனக்கும் ஆசையாக இருந்தது.

பெரியவர் நீண்ட நேரமெல்லாம் பேசவில்லை. இரண்டே வரிகளில் முடித்துக்கொண்டார். 'நீங்கள் சொல்வதை உங்கள் பிள்ளை கேட்க வேண்டுமென்றால், உங்கள் பிள்ளை சொல்வதற்குச் செவி கொடுங்கள். உன் அப்பா உன் கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நீ அவர் சொல்ல வருவதைப் புரிந்துகொள்.'

இப்போது பெரியவரும் நானும் காபி குடித்துக்கொண்டு இருக்கிறோம். நான் மெதுவாகக் கேட்டேன், 'அதிகாரம் கைக்கு வந்துவிட்டால், கீழ்ப்படிதல் தானாக வந்து விடுமா சார்? நான் அப்படிப்பட்ட நிறையப் பேரைப் பார்த்து இருக்கிறேன் என்றேன்.' அவர் அழுத்தமாகச் சொன்னார், 'இல்லை தம்பி. கீழ்ப்படிதலோடு இருந்ததால்தான் அதிகாரம் செய்கிற உரிமை கிடைத்தது. அடுத்தவர்கள் சொல்வதில் இருக்கிற உண்மையையும் நியாயத்தையும் நான் கவனித்துக் கேட்கிறேன். அதனால், நான் சொல்வதை மற்றவர்கள் கேட்கிறார்கள். இது ஒண்ணும் கம்பசூத்திரம் எல்லாம் இல்லை, சாதாரண விஷயம்' என்றார்.



அவர் சாதாரணமாகச் சொன்னாலும், ரொம்பவே ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விஷயம் அது. 'அப்பாக்கள் படுத்தும்பாடு தாங்க முடியவில்லை' என்று பிள்ளைகளும், 'என் பிள்ளை சொல்பேச்சு கேட்பது இல்லை' என்று அப்பாக்களும் மாறி மாறிப் புலம்புவது நிறைய வீடுகளில் கேட்கிறது.

வயதுக்கு வந்த பிறகு கீழ்ப்படிதல் என்பது அடங்கிச் செல்லுதல் அல்லது அடிமைபோல் நடத்தப்படுதல் என்ற எண்ணத்துக்குள் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறது. அப்பா இன்னிங்ஸ் முடிஞ்சுபோச்சு, இனி என் ஆட்டம் என்று இளைய தலைமுறை வேகம் எடுக்கிறது. இருவருமே அதிகாரம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், பெரியவர் சொன்னதுதான் உண்மை. அதிகாரம் செய்ய ஆசைப்படுபவன் முதலில் அடுத்தவன் கருத்துக்குக் காது கொடுக்க வேண்டும்.

இங்கே இருக்கிற பெரும்பாலான சூழலில் கீழ்ப்படிதல் அல்லது அடுத்தவர் சொல்வதைக் கேட்டல் என்பது வேறு வழியின்றி நடக்கிற, முணுமுணுப்புடன் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. அல்லது பயந்துகொண்டு நிர்ப்பந்தத்துக்காகப் பணிந்துபோவதாக நடக்கிறது.

கீழ்ப்படிதல் என்பது கட்டாயத்தின் பேரில் நடக்கிற விஷயமாக இருப்பதால்தான், அப்பாவுக்கு முன் பவ்யமாகத் தலையாட்டிவிட்டு, நண்பனிடம் வந்து அப்பாவைத் திட்டித் தீர்க்க வேண்டி இருக்கிறது. அவர் சொல்கிற விஷயத்தில் இருக்கிற நல்லது கெட்டதை ஆராயாமல், இந்த அப்பா எப்பவுமே இப்படித்தான் என்று நினைக்கவைக்கிறது.

அன்னப் பறவையைத் தூது விடுகிற மாதிரி எல்லா வற்றுக்கும் அம்மாவையே தூது விட்டுக்கொண்டு இருந்தால், அப்பா என்பவர் அதிகாரம் செய்கிற மனுஷராகவும், நீங்கள் அடங்கிப்போகிற சேவகனாகவுமே காலம் தள்ள முடியும். அப்பாவை அதிகாரத்தின் பிரதிபலிப் பாகப் பார்க்கிற காரணத்தால்தான், அவரின் வார்த்தை கள் ஆணைகளாகத் தெரிகின்றன. இந்த இடைவெளியை இட்டு நிரப்ப ஏதுவான சூழல் எது கிடைத் தாலும் அதைப் பயன்படுத்துங்கள்.

நாம் சொல்வதை நம் பிள்ளை விரும்பித்தான் ஏற்றுக்கொண்டு இருக்கிறான் என்ற நம்பிக்கையோடு, 'என் பிள்ளை என் பேச்சை மீற மாட்டான்' என்று பெருமை பேசிக்கொண்டு இருக்கிற அப்பாக்கள் நிறையப் பேர் உண்டு. கீழ்ப்படிதல் என்ற பெயரில் உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் இடையிலான புரிதலே பொய்த்துப்போகிறது.

திடீரென்று ஒருநாள், 'நீங்க சொல்ற எல்லாத்துக்கும் நான் தலையாட்டணுமா?' என்று கேட்கிறபோது, இத்தனை நாள் அப்படித்தானே... இப்ப என்ன என்று அப்பாவுக்கும் கோபம் வருகிறது. இந்த நிலைக்கான காரணம் என்ன? ஆரம்பத்தில் இருந்தே அப்பாவின் பேச்சில் இருக்கும் நியாயத்துக்காக நீங்கள் கீழ்ப்படியவில்லை. அவரை அதிகாரத்தின் பிம்பமாகப் பார்த்தே உங்கள் தலையாட்டல்கள் நடந்திருக்கின்றன.

அப்பாவின் தயவு இல்லாமல் என்னால் எழுந்து நிற்க முடியும் என்ற எண்ணம் வருகிறபோது 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என்று மனசு பொருமுகிறது. ஆனால், பாவம் உங்களுக்குள் இவ்வளவு மனோரீதியான சங்கடங்கள் இருக்கின்றன என்று அப்பாவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

கீழ்ப்படிதலும், செவிமடுத்தலும் பொய்த்தனங்களோடு நடப்பதில் மீசை முளைக்க ஆரம்பித்த பிறகு, அதைத் தன்மானத்தோடு தொடர்புபடுத்துகிறோம். கீழ்ப்படிதல் என்பது விருப்பத்தோடு கூடிய உணர்வாக வெளிப்பட வேண்டும்... அது உண்மையானதாகவும் உளப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டும். அந்தப் பின்னணியில் நீங்கள் வெளிப்படுத்துகிற கருத்துக்களைப் புரிந்துகொள்ளவே மாட்டார் என்று நீங்கள் நினைக்கிற அப்பாவும்கூடப் புரிந்துகொள்வார்.

கீழ்ப்படிதல் என்பது தண்டனையாக, தன்மானப் பிரச்னையாக, எதேச்சதிகாரத்தின் ஏற்பாடாக மாறிப் போனதற்குக் காரணம், வாலிப வயது வந்த பிறகு அப்பாக்களோடு அளவளாவுதலில் யதார்த்தமாகவே ஓர் இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது. பேச்சுக்கள் குறைந்துபோவதால் இதைத்தான் செய்ய வேண்டும் என்று அப்பா ஒரே வரியில் சொல்லிவிட்டுப்போகிறார். வழக்கம்போல் அடுக்களையில் அம்மாவிடம் வந்து என்ன 'நினைச்சுட்டு இருக்காரு இவரு?' என்று பிள்ளை பொருமித் தள்ளுகிறது.

தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையைத் தோழனாக நடத்த வேண்டும் என்பது அப்பாவுக்கு மட்டுமல்ல; பிள்ளைகளுக்கும்தான். எத்தனை இளைஞர்களுக்கு அப்பாவை நண்பனாகப் பார்க்கவும், அணுகவும் முயல வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது?

நமக்கு உலகத்தைப் புரிந்துகொள்கிற வயது வந்துவிட்டது என்று சொல்லிக்கொள்வது உண்மையானால், அப்பாவையும் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் கவனிக்காத, அம்மாக்களே கவனிக்கத் தவறிய, உங்களுக்கும் அப்பாவுக்கும் இடையிலான தூரத்தைக் குறையுங்கள். தேவைகள் அடிப்படையில் மட்டும் பேசாமல், நட்புரீதியாகவும் பேசுங்கள்.

அம்மாவிடம் பேசுவதுபோல், அப்பாவிடம் விளையாட்டாகவும் நட்பாகவும் பேசுவது நிறையப் பேருக்குக் கூச்சமாகக்கூட இருக்கலாம். பழகிக்கொள்ளுங்கள். இந்த அப்பாவின் மீதுதான் ஏழு வயது வரை படுத்திருந்தீர்கள்.

கீழ்ப்படிதல் என்பது அடங்கிப்போவது அல்ல; அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதும் அல்ல; இன்னொருவரின் பேச்சில் இருக்கிற நியாயத்தை உணர்ந்துகொள்ள முனைவது. அப்பாவும் இதில் அடக்கம்.

உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்றால், உங்கள் அதிகாரத்தை அடுத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் உளப்பூர்வமாகக் கீழ்ப்படியலாம். அதில் தவறேதும் இல்லை. கடைசியாக, உரிமையோடு அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும்.

அம்மாக்களுக்கு...

அப்பா என்கிற மனிதரை அச்சுறுத்தும் ஆயுதமாக அதிகாரத்தின் பிம்பமாகி, தண்டனை தருகிற அதிகாரியாகப் பிள்ளைகளின் மனதில் பதியவிடாதீர்கள்.

அப்பாக்களுக்கு...

கௌதம்மேனன் படத்தில் வருகிற அப்பாக்கள் சினிமாவில்தான் வர வேண்டும் என்றில்லை. வீட்டிலும் இருக்கலாம்!