Friday, April 30, 2010

ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும் !! - சுகி. சிவம்

ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும் !!


“பிறகு” “பிறகு” என்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். பலருக்கும் இது புரிவதில்லை. ஒத்தி வைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம். -- சுகி. சிவம்

தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சலி தெரிவித்த பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது என்றும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதிய உணவு வேளை வரை அவையை ஒத்தி வைத்தார் என்றும் அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கிறோம்.

ஒத்திவைப்பு என்பது சின்ன சம்பவம் அல்ல. முன்னேற்றத்தை, வளர்ச்சியை, வெற்றியை, உயர்வைத் தள்ளிப்போடும் கசப்பான நிகழ்ச்சி. அவமானப்பட வேண்டிய அக்கிரமம். பதைபதைக்க வேண்டிய பயங்கரம். ஆனால், பலருக்கும் இது புரிவதில்லை.

காலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கிறது. எழுந்திருக்க வேண்டியவர் அலாரம் அடிக்கும் கடிகாரத்தை ஓங்கி அடிக்கிறார். கடிகாரம் கப்.. சிப். வாய் மூடிக்கொண்டது.
உண்மையில் அலாரம் மீது அடி விழவில்லை. அவரது முன்னேற்றம் என்கிற முதுகெலும்பின் மீது விழுந்த அடி அது. படுக்கையை விட்டு எழுகின்ற நேரத்தை அவர் தள்ளிப்போடவில்லை. தமது தோல்வியை விட்டு எழுகின்ற முயற்சியை அவர் தள்ளிப் போட்டிருக்கிறார்.

இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே… பிறகு எழுத்திருக்கலாமே என்று ஆசைப் படுகிறவர்கட்கு ஒரு வார்த்தை, இதைவிட செத்துப் போகலாம். காரணம் தூங்குவதும் சாவதும் ஒன்றுதான். உறங்குவது போலும் சாக்காடு. அதிகம் தூக்கத்தை நேசிக்கிறவர்கள் உண்மையில் சாவை நேசிக்கிறவர்கள். எழுவதை ஒத்தி வைக்கிறவர்கள் எழுச்சியை ஒத்தி வைக்கிறார்கள்.

“பிறகு படித்துக் கொள்ளலாம்… அப்புறம் வேலை பார்க்கலாம்… கடைசியாகச் செய்து விடலாம்” என்று பேசுகிறவர்கள்… நினைக்கிறவர்கள் சுய துரோகிகள். சொந்த விரோதிகள். காரணம் “நிறைய நேரம் இருக்கிறது பிறகு செய்து கொள்ளலாம் என்று நினைத்தவர்கள் எதையுமே செய்ய முடியாது என்பது அதிசயமான உண்மை.

இப்போது மறைந்த போப்பாண்டவருக்கு முன்னால் இருந்த போப்பாண்டவர் சொன்னதாக ஒரு நல்ல சம்பவம். மூன்று அமெரிக்கர்கள் இத்தாலிக்கு வந்தவர்கள் ரோமில் வந்து போப்பாண்டவரைத் தரிசித்தனர். முதல் நபரைப் பார்த்து நீங்கள் எவ்வளவு நாள் இத்தாலியில் தங்கப் போகிறீர்கள்? என்று கேட்டார். ஆறு மாதம் என்று பதில் வந்தது. நீங்கள் இத்தாலியை அதிகமாகச் சுற்றிப் பார்க்க மாட்டீர்கள்… முடியாது என்றார் போப்.

அடுத்தவர் பதறிப் போய் நான் மூன்று மாதம்தான் தங்கப் போகிறேன் என்றார். நீங்கள் கொஞ்சம் பார்ப்பீர்கள் என்றார் போப். பிறகு அடுத்தவரைப் பார்த்து நீங்கள் எவ்வளவு நாட்கள் தங்குவதாக எண்ணம்” என்றதும் அவர் ஒரு வாரம்தான் எனக்கு விடுமுறை… அதற்குள் நான் எப்படி இத்தாலியைச் சுற்றிப் பார்க்கப் போகிறேன்” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்.

போப்பாண்டவர் சிரித்தபடி “ஒரு வாரம் தான் என்றால் நீங்கள் கண்டிப்பாக இத்தாலி முழுவதையும் பார்த்து விடுவீர்கள்…!” என்றார். பிறகு அவரே காரணமும் கூறினார். நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிறவர்கள் முழுமையாக அதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் பிறகு பார்ப்போம் என்று எதையுமே முழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்” என்று அழகான விளக்கம் அளித்தார்.

உண்மை “பிறகு” “பிறகு” என்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்.

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் காலத்தில் தமிழ் அச்சில் இல்லை. ஓலைச் சுவடியிலும் தமிழறிஞர்கள் வாயிலும் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது. ஆனால், தேடித்தேடி படிக்கிற ஆர்வம் உ.வே. சாமிநாதய்யர் அவர்கட்கு இருந்தது. ஒவ்வொரு வரிமட்டும் பாடி பிச்சை எடுத்த ராப்பிச்சைக்காரனிடம் முழுப் பாட்டையும் கேட்க பின்னாலேயே போய்ப் பாட்டை முழுதாகச் சேகரிக்கும் வெறி இருந்தது.

இன்று தமிழ்ப் பாடல்கள் அச்சு வாகனம் ஏறி புத்தகம் ஆகி வெளிவந்தபடி இருக்கின்றன. ஆனால், படிக்கும் வெறி எத்தனை பேருக்கு இருக்கிறது. கவனமாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய வாய்ப்புகள் இருக்கும் போது பலரும் அதனைப் பயன்படுத்துவதே இல்லை. கொஞ்சம் தான் வாய்ப்பு என்றால் அதனை முழுதாகப் பயன்படுத்தி விடுவார்கள்.
நிறைய நேரம்… நிறைய வாய்ப்புகள்… என்று நிரம்பி வழிகிறவர்கள் நிச்சயம் வாழ்க்கையை வீணாக்கி விடுகிறார்கள்.

கொஞ்சம்தான் நேரம்… கொஞ்சம்தான் வாய்ப்பு… கொஞ்சம்தான் பணம்… கொஞ்சம்தான் ஆயுள்… என்று கைவசம் கொஞ்சமாக வைத்திருக்கிறவர்கள் நிச்சயம் ஜெயிக்கிறார்கள்.
நாளை… நாளை என்று நாளை ஒத்திப் போடுகிறவர்களைப் பார்த்து ஆழ்வார் கேட்கிறார்… நாளை நாள் நமது நாளா? நமனது (எமன்) நாளா? யார் அறிவார். எனவே ஒத்திப்போடாமல் இன்றே… இப்போதே… இந்த கணமே என்று அவசரப்பட அழைக்கிறார் ஆழ்வார் ஒருவர்.

இரண்டு நண்பர்கள். ஒருவர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மற்றவர் விஞ்ஞானத்தில்… இருவரும் ஒரே கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தனர். அவரவர் துறைக்கு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு உடனே பணியில் சேர உத்தரவு வந்தது. தமிழ் படித்தவர் இன்று சனிக்கிழமை… நாள் நன்றாக இல்லை… திங்கட்கிழமை சேருவோம்” என்று ஒரு நாளை (இடையில் உள்ள ஞாயிற்றுக் கிழமையை) ஒத்திவைத்தவர். மற்றவரோ சனிக்கிழமையே பணியில் சேர்ந்து விட்டார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி முதல்வர் பணித் தேர்வின்போது விஞ்ஞானப் பேராசிரியர் முதல்வர் ஆனார். மிக முக்கிய காரணம் பணிமூப்பு. ஒருநாள் தமிழ்ப் பேராசிரியருக்கு முன்பாகவே சேர்ந்துவிட்டதால் பணிமூப்பு என்ற காரணம் காட்டி முதல்வர் பதவி பெற்றார். பத்தாண்டுக் காலம் கல்லூரி முதல்வராக இருந்தார். ஒரு நாள் தாமதமாகச் சேர்ந்தவர் கடைசி வரை முதல்வராக முடியாமலேயே பணி ஓய்வு பெற்றார்.

ஒரு நாள் முன்னால் சேர்ந்த காரணத்தால் கல்லூரி முதல்வராகப் பத்தாண்டு இருக்க முடிந்தது. ஒத்திவைத்த ஒருவரைப் பதவியும் ஒத்தி வைத்து விட்டது. பரபரப்பும் படபடப்பும் வேண்டாம். ஆனால், ஓயாமல் ஒத்தி வைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம். -- சுகி. சிவம்

Wednesday, April 28, 2010

தினமும் ஒரு இஞ்ச்! - பால் மெக்கென்

தினமும் ஒரு இஞ்ச்!


'இது ஃபாஸ்ட் ஃபுட் காலம். எங்கும், எதிலும், எப்போதும் அவசரம்தான் வேதம். இந்த நிலையில், தன்னம்பிக்கையை வளர்க்க வாரக்கணக்கில் கோச்சிங் கிளாஸ், மாதக் கணக்கில் புத்தகங்கள் என்று திரிய முடியாது. இப்போதே, இந்த நிமிடமே, இந்த நொடியே எனது தன்னம்பிக்கை அதிகரிக்க வேண்டும்!' என்கிற பார்ட்டியா நீங்கள்? உங்களுக்காகவே 'Instant Confidence' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார் பால் மெக்கென். அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப நிமிடங்களில் உங்கள் தன்னம்பிக்கை மீட்டரை ரீ-சார்ஜ் செய்து கொள்ளும் யுக்திகள் புத்தகம் முழுக்க...

உள்ளுக்குள் உறங்குது எரிமலை!

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டீர்கள். என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்றே தெரியாமல் சில முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறீர்கள். அப்போது என்ன செய்வது? இந்த இடத்தில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்...

1) உங்கள் வீட்டுக் கதவின் நிறம் என்ன?

2) அந்தக் கதவில் சாவித் துவாரம் எந்தப் பக்கம் இருக்கிறது?

இந்த நொடி உங்கள் கற்பனையில் உங்கள் வீட்டுக் கதவு, அதன் நிறம், சாவித் துவாரம் ஆகியவை காட்சி களாக விரிகின்றனவா? அதுதான்... அதேதான்!

இந்த நிஜத்தைக் கற்பனை செய்யும் யுக்தியைத்தான் சிக்கலான சூழல்களைச் சமாளிக்கவும் நாம் கையாள வேண்டும். மனம் நொந்து வெந்து நீங்கள் சொதப்பிக் கொண்டு இருக்கும் சமயம், ஒரு நிமிடம் அமைதியாக உட்காருங்கள். அதற்கு முன் உங்கள் சாதனை என்று நீங்கள் நினைக்கும் சம்பவத் தருணங்களையோ, 'பின்னிட்டப்பா!' என்று மற்றவர்கள் உங்களைப் பாராட் டிய தருணங்களையோ மீண்டும் உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள். முன்னரே நீங்கள் அனுபவித்த இனிய நினைவுகளை 'ஃப்ளாஷ்பேக்'கும்போது உங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தும் அந்தத் தருணத் துக்கே சென்று மீளும். நிற்க. அதிகபட்சம் ஒரு நிமிடம் தான். அந்த சந்தோஷத் தருணத்தில் கொஞ்சமே கொஞ்சம் நீச்சலடித்து மீண்ட பிறகு, இந்த நொடிக்குத் திரும்புங்கள். இப்போது உங்கள் முன் இருக்கும் இக்கட்டு அத்தனை மிரட்டலாக இருக்காது!

இலகுவானது அல்ல இலக்கு!

'size does matter' என்பார்கள். அதாவது, அளவும் முக்கியம்! வெறுமனே இலக்குகளை நிர்ணயிப்பது மட்டும் போதாது. உங்களைச் செயல்படத் தூண்டும் அளவுக்கு இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். உதாரணமாக, 'நாளை எழுந்து எட்டாவது சேப்டரை மட்டும் படித்தால் போதும்' என்பது இலக்காக இருந் தால், தாமதமாகப் படுத்து சோம்பலாக எழுந்து நிதானமாக அடுத்தடுத்த வேலைகளைப் பார்ப்பீர்கள். அதுவே, '10, 11, 12 என மூன்று சேப்டர்களை முடிக்க வேண்டும்' என்பதை இலக்காக நிர்ணயித்துக்கொண்டால், அதிகாலை ஐந்து மணிக்கு மேல் உங்களுக்குத் தூக்கம் பிடிக்காது. தீப்பிடித்ததுபோல அலறி ஓடுவீர்கள். அந்த ஓட்டத்தின் ஒவ்வொரு துளி வியர்வையும், ஒரு பவுன் தங்கக் காசுதான்.

படிப்பு, வேலை என்றில்லை... அன்றைய தினம் நீங்கள் எது சம்பந்தமாகத் திட்டமிட்டு இருந்தாலும், அதன் இலக்கைச் சில மி.மீ. (முடிந்தால் கி.மீ.) உயர்த் துங்கள். 'ஐந்துக்குப் பதில் இன்று 50 வாடிக்கை யாளர்களைச் சந்திப்பேன்!', 'இன்றைய பார்ட்டியில் அனைவரது கவனமும் என் பக்கம் இருக்கும்படி ஜோக் அடிப்பேன்', 'இன்று ஜிம்மில் வழக்கத்தைவிட அரை மணி நேரம் அதிகமாகச் செலவழிப்பேன்!' என்று அன்றைய அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலக்கு நிர்ணயிங்கள். இவ்வாறு நீங்கள் செயல்படும்போது, உங்களுக்குள் நிகழும் மாற்றங்களை மற்றவர்கள் பளிச் என உணர்வார்கள். இப்படி இலக்குகளை உயர நிர்ண யிப்பதில் இன்னொரு வசதி என்னவென்றால், இலக் கில் பாதியை எட்டினாலே அது வழக்கத்தைக் காட்டி லும் அபாரப் பாய்ச்சலாக இருக்கும்!

இந்த நாள்... உன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்!

வீடு வாங்குவது, இன்ஜினீயரிங் படிப்பில் டிஸ்டிங்ஷன் பெறுவது, விருப்பப்பட்ட வேலையைப் பெறப் போராடுவது, ஆசைப்பட்ட பெண்ணிடம் காதலைத் தெரிவிப்பது, பிரபல பள்ளியில் குழந்தையைச் சேர்ப்பது என எந்த இலக்கு நிர்ணயித்தாலும், தினமும் அதை நோக்கி ஒரு இன்ச் ஆவது முன்னேறுங்கள். அதாவது அந்த இலக்கை நோக்கிய பயணத்தை ஒரு பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். தினமும் நாம் அலுவலகத் துக்கோ, பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்கிறோம். எத்தனை அவசரம் இருந்தாலும், என்றாவது ஒருநாள் ஆடை அணிய மறந்து நிர்வாணமாக அந்த இடங் களுக்குச் சென்றிருக்கிறோமா? 'அடச்சே! அவசர அவசரமாக் கிளம்புனேனா... அதான் டிரெஸ் போட மறந்து அப்படியே வந்துட்டேன்' என்று நம்மில் யாராவது புலம்பி இருக்கிறார்களா? மாட்டார்கள். ஆடை அணிவதை ஒரு பழக்கமாக்கிக்கொண்டதால் எத்தனை சிக்கலான சூழலாக இருந்தாலும், ஆடை அணிய மறக்க மாட்டோம். இலக்கை நோக்கிய உங்கள் நடவடிக்கைகளையும் அப்படி தினசரி நடவடிக்கை ஆக்கிக்கொள்ளுங்கள். அது உள்ளுக்குள் ஊறிவிட்டால், போகிறபோக்கில் நீங்கள் உயரங்களை எட்டிப் பிடித்து விடுவீர்கள்!

நான்கு வழிச் சாலைப் பயணம்!

மிக மிகச் சுருக்கமாக, தினமும் உங்கள் தன்னம் பிக்கையை அதிகரித்துக்கொள்ள இந்த நான்கு விதி களைக் கட்டாயம் கடைபிடியுங்கள்.
1) உங்களைப் படுக்கையில் இருந்து துள்ளியெழச் செய்யும் அளவுக்கு இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்!

2) உங்களுக்கு என்ன தேவை, உங்களுக்கு எது மட்டும் தேவை என்பதில் தெளிவாக இருங்கள்!

3) உங்கள் இலக்கை அடைய உங்கள் உழைப்பு மட்டுமே போதுமானதாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள்!

4) இலக்குகளைச் சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, பகுதி பகுதியாக நிறைவேற்றிவெற்றிக் கோட்டை எட்டிப்பிடியுங்கள்!

வாழ்த்துக்கள்!

நீயும்... நானும்! - கோபிநாத்

நீயும்... நானும்!



ரெசஷன்... கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் அதிகமாக உச்சரித்த வார்த்தை. 'கடைத் தெரு எல்லாம் காத்து வாங்குது... யார்கிட்டேயும் பணம் இல்லை... ரெசஷன்பா. தோ இவர் மாப்ள ஐ.டி-யில 50 ஆயிரம் ரூபா சம்பளம் வாங்கிட்டு இருந்தாரு... திடீர்னு வேலை போயிடுச்சு' டைப் வசனங்களை எல்லோரும் கேட்டிருப்போம். பெரிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு... நிதித் தட்டுப்பாடு, புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுப்பதில்லை என நிறையப் புதிய விஷயங்களையும் பொருளாதாரம் சார்ந்த கூறுகளையும் ரெசஷன் நமக்கு அறிமுகம் செய்துவைத்தது.

உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இந்தப் பொருளாதாரச் சரிவின் தாக்கம் கொஞ்சம் குறைவுதான். ரெசஷன் என்கிற போர்வையில் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்றவை திட்டமிட்டு நடத்தப்படுவதும் பல இடங்களில் நடந்தன... நடக்கின்றன. பெருநகரங்களை மையப்படுத்தி நடக்கும் வர்த்தகப் பரிமாற்றங்களும், யோசனைகளும் பொருளாதார வளர்ச்சியை அலங்காரம் சார்ந்ததாக, அடிப்படைக் கட்டமைப்பைப் பலமாக்கும் உத்திகளற்ற வெறும் வர்த்தகப் பரிமாற்றமாக மாற்றிவைத்திருக்கின்றன.

உலக நாடுகளுக்கு எப்படியோ, இந்தியச் சூழலுக்கு சிறு நகரங்களும் கிராமங்களும் வளர வேண்டியதே அவசியம். சமூக நோக்கோடுகூடிய பொருளாதாரத் தன்னிறைவுக்காகத் திட்டம் வகுத்த பலரும், கிராம வளர்ச்சியையே முன்னிலைப்படுத்தினார்கள்.

சமீபத்திய வருடங்களில் இந்தியாவில் நிலைகொண்டுவிட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளும், சித்தாந்தங்களும் ஒட்டுமொத்தச் சமூகத்துக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கின்றன என்பது தெளிவாகப் புரியவில்லை. ஆனால், இளைஞர்களுக்கு 'எவன் எக்கேடு கெட்டால் என்ன... நீ எப்படியாவது பிழைச்சுக்கோ' என்று ஆழமாகச் சொல்லிக்கொடுத்தது.

'வலியவன் வாழட்டும், எளியவன் ஏங்கட்டும்' என்ற பட்டவர்த்தனமான கொஞ்சமும் வாஞ்சைஅற்ற பொருளாதாரச் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்கிற அளவுக்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை. ஆனாலும், மரத்தின் மேல் கிளைக்குப் போனவன் கீழே இருப்பவனுக்குக் கை கொடுத்துத் தூக்கிவிடுகிற மரபு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.

இந்த மாற்றத்தின் பிரதிபலிப்பாகத்தான் கிராமங்களும், சிறு நகரங்களும் தொடர்ந்து பின்தங்கி இருக்கின்றன. தேசம் மட்டுமின்றி, தனி மனிதர்களும் பெருநகரங்களை மையப்படுத்தியே நமது பொருளாதாரப் பரிவர்த்தனைகளை நகர்த்துகிறோம். ஒரு கட்டத்தில் சொந்தக் கிராமத்துக்குப் போவதும், வருவதும் ஓய்வு எடுத்துக்கொள்வதற்கான ஏற்பாடாக மட்டுமே மாறி வருகிறது.

வெளிநாடுகளில் சம்பாதித்து உள்நாட்டில் முதலீடு செய்தல் எப்படி தேசத்தின் வளர்ச்சிக்கு உதவ முடியுமோ, அதேபோல் பெருநகரங்களில் சம்பாதிப்பதை, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் முதலீடு செய்வது பலன் அளிக்கும் என்கிறது ஒரு பொருளாதாரக் கணக்கு.

இப்படி முதலீடு செய்வதன் மூலம், சம்பாதிப்பதற்காக நகரங்களை நோக்கிப் படையெடுக்கும் சூழலும் குறைக்கப்படும். ஆனால், சமீபத்திய மாற்றங்களைப் பார்க்கும்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது என்பதுதான் உண்மை. நகரத்தில் சம்பாதிப்பதைவைத்து, ஊரில் இருக்கிற விளைநிலங்களை மேம்படுத்துவது, விவசாய அபிவிருத்திக்காகச் செலவு செய்வது என்பது மாறிப்போய், கிராமத்து நிலத்தை விற்றுவிட்டு நகரத்தில் ஒரு வீடு கட்டிக்கொள்ளலாம் என்று கணக்குப் போடுகிறோம்.

'வெறும் பொருளாதார யோசனை' என்ற அளவில் பார்க்கும்போது இது சரியாகக்கூட இருக்கலாம். ஆனால், சம்பாதிக்கிற இளைஞர்கள் தொடர்ந்து இந்த உத்தியைக் கையாளுகிறபோது சிறு நகரங்களும், கிராமங்களும் வாழ்வதற்குத் தகுதியற்றதாக மாறிவிடுகின்றன.

'இப்ப என்ன செய்யச் சொல்றீங்க?' என்று கேட்பது காதில் விழுகிறது. நீங்கள், நான், நாம் எல்லாருமே நம்முடைய பூர்வீகம் குறித்த காதலைக் கொஞ்சம் அசை போட்டுப் பார்க்க வேண்டி இருக்கிறது. நம் சக வயது உள்ள அல்லது நம்மோடு படித்த நம் நண்பர்களின் வாழ்க்கை நிலை குறித்தும் கொஞ்சம் அக்கறைப்பட வேண்டி இருக்கிறது... அவ்வளவுதான்.

எனக்குத் தெரிந்த நண்பர்கள் நான்கு பேர். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பிறகு செய்த முதல் விஷயம் சொந்த ஊரில் தொழில் தொடங்கியதுதான். அங்கு தொடங்கிய அந்த சின்ன நிறுவனத்தை நிர்வாகம் செய்யவும், வளர்க்கவும் தங்கள் ஊர் தோழர்களை பொறுப்புகளில் நியமித்தார்கள்.

வார இறுதியில் முறைவைத்து ஒவ்வொரு நண்பரும் ஊருக்குப் போவார்கள். அதேபோல் கம்பெனியைப் பார்த்துக்கொள்கிற உள்ளூர் தோழர்களும் சென்னை வருவார்கள். இன்றைக்கு படித்த நான்கு இளைஞர்களால் படித்த மற்றும் படிக்காத 30 இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே நல்ல வேலை கிடைத்திருக்கிறது.

பூர்வீகத்தோடு தொடர்புடைய இதுபோன்ற முயற்சிகளால் பெரு நகரங்களில் இருக்கிற வாய்ப்பு வசதிகளால் கிடைக்கிற அறிவும் தொழில்நுட்பமும் சிறு நகரங்களுக்கும் சென்று சேருகின்றன. இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை என்று நாம் தொடர்ந்துசொல்லிக் கொண்டு இருப்பது இனியும் நியாயமாக இருக்காது.

சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்களுக்குப் பிறகும், 'பட்டணத்துக்குப் போனா பிழைச்சுக்கலாம்' என்ற நிலை இன்னமும் நீடிக்கிறது. இந்தியத் தன்மையின் பொருளாதாரக் கோட்பாடுகள் உணர்வுபூர்வமானதாக இருப்பதே நல்லது.

இன்றைக்கு சென்னை உட்பட பல பெரிய நகரங்களில் நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கிற நம்மில் பலரும் ஏதோ ஒரு சிறு ஊரில் இருந்து வந்தவர்கள்தான். நாம் கிளம்பி வந்தபோது ஊர் எப்படி இருந்ததோ, கிட்டத்தட்ட இப்போதும் அப்படியே இருக்கிறது என்றால், நம் சம்பாத்தியத்தின் ஒரு பகுதி நம் ஊர்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பதுதான் பொருள்.

பால் ஒபட் ஒயர் (Paul obet oyer) என்ற கென்ய நாட்டுச் செய்தியாளர் ஒருவருடன் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்களின் நிலை குறித்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஒரு முறை கிடைத்தது.

உலகின் பல நாடுகளில் வாழும், வெற்றி பெற்ற பணக்காரர்களாக உயர்ந்த பல கறுப்பினப் பிரதிநிதிகள் அதில் கலந்துகொண்டார்கள். 'அடிமைத்தளையில் இருந்து வெளியே வந்து, இவ்வளவு தூரம் உயர்ந்தும் ஏன் நமது ஆப்பிரிக்கா இந்த அளவுக்குப் பின்தங்கி இருக்கிறது' என்று அதில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.

பால் ஒபட் ஒயர் கோபமாக ஒரு பதில் சொன்னார், 'வளர்ந்துவிட்ட நீங்கள் எல்லாம் உங்கள் வேர்களை மறந்துவிட்டீர்கள்' என்று. வேர்களை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டிய அவசியம் நமக்கும் இருக்கிறது.

அந்த வேலையை நாம் வேகமாகத் தொடங்க வேண்டும்... அப்போது இந்த ரெசஷன் நம்மை ஒன்றுமே செய்யாது!

நீயும்... நானும்! - கோபிநாத்

நீயும்... நானும்!



என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார், 'எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முயன்றால், எல்லோருக்கும் கெட்டவனாகிவிடுவாய்' என்று. உண்மைதான். யார் மனதையும் புண்படுத்திவிடக் கூடாது, எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, யார் எது சொன்னாலும் 'சரி' சொல்பவர்கள் நிறையப் பேர்.

'சரி' சொல்வது ரொம்ப எளிது. சொன்னபடி அதைச் செய்வது ரொம்பக் கஷ்டம். ஆரம்பத்தில் எல்லோருக்கும் 'சரி' சொல்லி வேலையை இழுத்துப்போட்டுச் செய்யும்போது அனைவரின் அபிமானத்தையும் பாராட்டையும் பெறுவதுபோலத் தோன்றலாம். ஒரு நிலையில், 'இவன் என்ன சொன்னாலும் கேட்பான்' என்கிற மனோபாவத்தை எல்லோர் மனதிலும் நீங்களே விதைத்துவிடுகிறீர்கள்.

விளைவு, என்றைக்காவது ஒருநாள் வேறு வழியே இல்லாமல் நீங்கள் முடியாது என்று சொல்லுகிறபோது, 'இவன் முன்னைப்போல் இல்லை' என்ற பேச்சு முளைக்க ஆரம்பிக்கும். நீங்கள் ஏற்கெனவே பல பேருக்கு 'சரி' சொல்லிவிட்டு, அந்த வேலைகளைச் செய்ய முடியாமல் போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்ற விவரம் எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. நீங்களும், எவ்வளவு நாளைக்குத்தான் 'சரி' சொல்லிக்கொண்டே இருப்பீர்கள். கொஞ்ச காலத்தில் களைத்துப்போய், தேர்வு செய்து 'சரி' சொல்ல முனைவீர்கள். இப்போது, 'இவன் முன்ன மாதிரி இல்லை' என்று குற்றம் சாட்டுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கும்.

எல்லோருக்கும் நல்லவனாக இருக்க நீங்கள் எடுத்த முயற்சி இப்போது உங்களுக்கு எதிரா கத் திரும்பி நிற்கிறது. போதாக்குறைக்கு இவர் களுக்கு எவ்வளவு செய்தோம், 'கொஞ்சம்கூட நன்றி இல்லாமல் என்னை விமர்சிக்கிறார்களே' என்ற மன உளைச்சல் வேறு.

'சரி'யோ இல்லை 'முடியாது' என்று சொல்வதோ கண்ணையும் மனதையும் மூடிக்கொண்டு சொல்லாதீர்கள். அதனை முடிவு செய்ய உங்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. வேறு வழியே இல்லாமல் 'சரி' சொல்ல வேண்டிய நிர்பந்தங்களே நமக்கு நிறைய இருக்கின்றன. அப்படி இருக்கையில், யார் எது சொன்னாலும் அவர்கள் மனசு நோகக் கூடாது என்பதற்காக 'சரி' என்று தலை ஆட்ட ஆரம்பித்தால், தலையாட்டிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். முறையாக 'முடியாது' என்று தேவையான இடங்களில் சொல்லிப் பழகாத தால்தான், பலர் கஷ்டப்படுகிறார்கள்.

தன் உயர் அதிகாரியோ, முதலாளியோ, முடியாது என்று சொன்னால், தன்னைப்பற்றித் தவறாக நினைத்துவிடுவார் என்ற எண்ணம்தான் பல நேரங் களில் நம்மைச் 'சரி' சொல்லவைக்கிறது. 'ஏம்ப்பா, உன்னாலதான் அதைச் செய்ய முடியாதே அப்புறம் ஏன் 'சரி'ன்னு தலையாட்டிட்டு வந்தே?' என்று யாராவது கேட்டால், 'முடியாது' என்று எப்படிச் சொல்வது என்று பதில் வரும்.

உண்மைதான். முடியாது என்பதை நாசூக்காகவும், நாகரிகமாகவும் எதிரில் இருப்பவருக்குப் புரியும் படியாகவும் சொல்லுகிற பயிற்சியே நமக்குக் கிடையாதே. தலையை வலமும் இடமும் சாய்த்து நிமிர்த்தினால் வேலை முடிந்தது. 'சரி' என்று சொல்லிஆயிற்று.

நீங்கள் முடியாது என்று சொல்ல நினைத்த விஷ யத்துக்கு 'சரி' சொல்லிவிட்டு, அந்த வேலையை எப்படி ஈடுபாட்டோடு செய்ய முடியும்? ஈடுபாடு இல்லாமல் செய்கிற வேலை எப்படி வெற்றி அடையும்? விளைவு, இரண்டாவது குற்றச்சாட்டும் உங்கள் மீது வரும். 'எல்லாத்துக்கும் சரி சொல்வாரு. ஆனா, ஒரு வேலையைக்கூட உருப்படியாச் செய்ய மாட்டாரு'.

கெட்ட பெயர் எடுக்கக் கூடாது என்பதற்காக நீங்கள் சொன்ன 'சரி' இப்போது உங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது!

'முடியாது' என்று சொல்வதில் நமக்கு இருக்கிற இரண்டு முக்கியமான பிரச்னைகள் என்னென்ன? ஒன்று, அடுத்தவர் தவறாக நினைக்கக் கூடாது. இரண்டாவது முடியாது என்று எப்படிச் சொல்ல முடியும்?

முதல் பிரச்னைக்கான பதில் ஏற்கெனவே கிடைத்துவிட்டது. இரண்டாவது பிரச்னைக்குத் தீர்வு என்ன? நாம் எல்லோரும் ஒன்றும் ராணுவத்தில் இல்லை. இரண்டாவது, இந்த உலகத்தில் இருக்கிற எல்லோரும் நீங்கள் 'முடியாது' என்று சொல்லவே கூடாது என எதிர்பார்க்கவும் இல்லை.

அதைவிட முக்கியமான விஷயம், அடுத்தவர் சொல்கிற அனைத்துக்கும் 'சரி' சொல்கிற ஆளாக இருக்கும்பட்சத்தில் உங்களின் சுய சிந்தனை மரத்துப் போகிறது. சுய சிந்தனை மரத்துப்போனவன் ஓர் இயந்திரம் மாதிரிதான் செயல்பட முடியும். அப்படிப்பட்ட ஒருவர் மீது முதலாளிக்கோ அல்லது உயர் அதிகாரிகளுக்கோ எப்படி மரியாதை வரும்?

நீங்கள் பகுத்தறியும் ஞானம் இல்லாதவர் என்பதைத் தான் எல்லாவற்றுக்கும் 'சரி' சொல்வதன் மூலம் வெளிப் படுத்துகிறீர்கள். 'சரி' சொல்வதைப்போல 'முடியாது' என்று சொல்லுவது எளிதான காரியம் இல்லைதான். ஆனால், குறைந்தபட்சம், 'கொஞ்சம் அவகாசம் கொடுங் கள், யோசித்துச் சொல்கிறேன்' என்று சொல்லலாம்.

இன்றைக்கு இருக்கிற கார்ப்பரேட் உலகம் உங்களின் 'முடியாது' என்று சொல்லத் தெரியாத பலவீனத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறது. உங்களுக்குச் சம்பளம் தீர்மானிக்கும்போது, உங்களிடம் புதிய வேலைகளை ஒப்படைக்கும்போது, இப்படிப் பல தருணங்களில் 'உடனடியாக எனக்குப் பதில் சொல்லுங்கள்' என்பார்கள். காரணம், அந்த அழுத்தத்தை உங்கள் மீது திணிப்பதன் மூலம் உங்களிடம் இருந்து குறைவான விலைக்கு அதிக வேலையைப் பெற்றுவிடலாம். போதாக்குறைக்கு முடியாது என உங்களுக்குச் சொல்லத் தெரியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

இந்தத் தருணங்களில் கொஞ்சம்கூட அச்சப்படாமல் எனக்குச் சற்று அவகாசம் தாருங்கள் எனக் கேட்கலாம். அந்த அவகாசத்தைத் தந்தால் நீங்கள் விழித்துக்கொள்வீர்கள் என்பதால்தான், உடனடியாகப் பதில் கேட்கிறது, கார்ப்பரேட் உலகம். அந்த நிர்பந்தத்துக்குப் பணிந்தும் பயந்தும் நீங்கள் 'சரி' என்று தலையாட்டினால், உங்களைக் குறித்து வைத்துக்கொள்வார்கள் 'இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான்' என்று.

பிறகு, எந்த நியாயம் இல்லாத வேலைப் பளுவாக இருந்தாலும், உங்கள் மீதுதான் சுமத்தப்படும். கடைசி வரை பொதி சுமக்கிற கழுதையாக வாழ்க்கையைத் தள்ளவேண்டி இருக்கும்.

இன்னிக்கு இருக்கிற போட்டி நிறைந்த உலகத்தில்... அவகாசம் கேட்பது, முடியாது எனச் சொல்வதெல்லாம் புத்திசாலித்தனம் இல்லை என்று தோன்றலாம். ஆனால், யதார்த்தத்தை நினைத்துப் பார்ப்போம். வேலை கிடைக்க வேண்டும். சம்பளம் கிடைக்க வேண்டும் அல்லது பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று எல்லாவற்றுக்கும் தலை ஆட்டினால், நியாயமற்ற வேலைப் பளுவைத் தாங்க முடியாமல் மூன்று மாதங்களில் இன்னொரு வேலையைத் தேட வேண்டி இருக்கும்.

அதற்கு நியாயமான விஷயத்துக்கு மட்டும் 'சரி' சொல்லிவிட்டு, சரியான வேலையைச் செய்வது உத்தமம். இல்லையென்றால், அவசரத்துக்குத் தலையாட்டிவிட்டு அதன் பின்பும் 'முடியாது' என்பதைச் சொல்லவே முடியாமல் மனதும் உடம்பும் களைத்துப் போகும். வேலை தண்டனை ஆகும். மாதச் சம்பளம் வருகிறபோது ஏதோ ஜெயிலில் வேலை பார்த்ததற்குத் தரப்படுகிற 'படி' மாதிரி தெரியும். மனைவி செய்கிற 'சுபச் செலவுகள்'கூட தண்டமாகத் தோன்றும். 'நான் நாய் மாதிரிகஷ்டப் படுகிறேன். நீ ஆடம்பரம் பண்றியா?' என்று கத்த வைக்கும். குழந்தைகளை அடிக்கும். 'அவன் ஒரு முசுடு என்று எல்லோரிடமும் பேர் வாங்கித் தரும்.'

எங்கேயோ ஓர் இடத்தில் நாகரிகமாகச் சொல்லப்பட வேண்டிய 'முடியாது' சொல்லப்படாததால், நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்று பாருங்கள்.

நீங்கள் முடியாது என்று நினைக்கிற விஷயத்தை வெளிப்படுத்த ஆரம்ப நிலையில் ஆயிரம் வழிகள் உண்டு. அதைச் செய்ய சங்கடப்பட்டால் ஒருநிலையில் அது மனதோடு கடுமையான வார்த்தைகளாக வெளிவரும். 'என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். நான் என்ன உங்கள் அடிமையா?' என்று கத்தவைக்கும்.

அப்படி வெளிப்படுத்த முடியாத சூழலில் தொடர்ந்து இருக்க நேரிட்டால், மன அழுத்தம் அதிகமாகி டாக்டரைப் பார்க்க வேண்டி இருக்கும். ஆஸ்பத்திரியில் உங்களைப் பார்க்க வருகிற நண்பர்கள், 'எல்லாத்தையும் இப்படி இழுத்துப் போட்டு செஞ்சா அப்புறம் என்ன ஆகும்' என உங்கள் காதுபடவே சொல்லிவிட்டுப் போவார்கள்.

ஒரு நிமிடம் இப்போது யோசித்துப் பாருங்கள், நீங்கள் யார்? எப்படிப்பட்ட மனிதர்? யார் மனதும் புண்படக் கூடாது, எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்... இப்போது ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறீர்கள் அல்லது, இந்த ஆள் ஒரு முசுடு என்று எல்லோரிடமும் பேர் வாங்கி இருக்கிறீர்கள்.

இதற்காகவா இவ்வளவு பாடுபட்டீர்கள்? இந்தச் சமூகத்தில் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது. 'சரி' சொல்வதானாலும் 'முடியாது' சொல்வதானாலும் யோசித்துச் சொல்லுங்கள்.

'தலையாட்டிப் பொம்மையாக இருக்காதீர்கள்!'

நீயும்... நானும் - கோபிநாத்

நீயும்... நானும்!

நீயும்... நானும்!

உறவுகள் ஒன்றுகூடும் விழாக்களில் எத்தனை குதூகலத்துடன் கூடுவோமோ, அதேபோல அந்த நிகழ்வுகள் முடிகிறபோது ஒரு விஷயம் மனசை லேசாக நெருடும். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த எத்தனை உறவினர்கள் சில வருடங்களுக்கு முன்பு வரை நல்லது கெட்டதுகளை, சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிற தோழமையோடு இருந்தார்கள் என்று.

எல்லாக் குடும்பங்களிலும் சம வயது உறவினர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். அவர்களுக்குள் ஓர் அழகான நட்பு இருக்கும். உறவினர் என்ற நிலையைத் தாண்டி, நண்பர்களாகவும் இருப்பார்கள். பரஸ்பரம் நல்ல புரிதல் இருக்கும். அழகழகான செல்லச் சண்டைகள் அரங்கேறும்.

அதென்னவோ தெரியவில்லை, ஒரு காலகட்டம் வரை உறவுத் தோழமையோடு இருந்த அந்த நண்பர்கள் வட்டம் நாலா பக்கமும் சிதறிப்போகிறது. படிப்புக்காக, வேலைக்காக என ஏதோ ஒரு காரணத்துக்காக ஆளுக்கு ஒரு திசையில் பயணப்பட ஆரம்பித்த பிறகு, அந்த அந்நியோன்யம் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைந்துபோகிறது. சில வருடங்கள் கழித்து பொது நிகழ்ச்சியில் அவர்களைச் சந்திக்கிறபோது விட்ட இடத்தில் இருந்து தொடர முடிவது இல்லை.

பால்யத் தோழமை, பள்ளித் தோழமை, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் கிடைக்கிற நட்புகள் இதெல்லாம் சிறப்பான விஷயங்கள் என்றாலும், உறவுத் தோழமை இன்னமும் நெருக்கமானதும் உரிமையானதும்கூட.

நான் பள்ளியில் படிக்கிறபோது எனது தாத்தா உயிரோடு இருந்தார். வருடம் ஒரு முறை கருப்பையா கோயில் திருவிழாவுக்கு உறவுகளின் கூட்டம் களைகட்டும். தாத்தா நடுவில் உட்கார்ந்திருக்க, மகன் வழி, மகள் வழிப் பேரப் பிள்ளைகள் சுற்றி உட்கார்ந்து அந்த ஆறேழு நாட்களும் ஊரே அமர்க்களப்படும்.

அம்மு, வீனு, வாணி, பிரசாத், விமலாக்கா என்று ஏறக்குறைய சம வயதுப் பிள்ளைகள் கூட்டத்தால் வீடே நிரம்பி இருக்கும். தினமும் மாலை வேளையில், எங்கள் எல்லோரையும் உட்காரவைத்து பாட்டி சுற்றிப்போடும். சீட்டுக்கட்டு, கேரம்போர்டு, நொண்டிச்சில்லு, கோக்கா என்று விதவிதமான விளையாட்டுகள். சமைத்துப்போட சித்திமார்கள். காலையில் எழுந்து பம்புசெட்டுக்குப் போய்க் குளித்துவிட்டு, மாங்காய் பறித்துத் தின்றுகொண்டே வரும்போது நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வோம்.

சித்தி பையன், மாமா மகள், பெரியம்மா மகன், அத்தையோட தங்கச்சிப் பையன் என்ற உறவு நிலை களைத்தாண்டி, அது அழகான நட்பு வட்டம்.

இன்றைக்கு அப்படி இல்லை. நான் கருப்பையா கோயில் திருவிழாவுக்குப் போய் 10 வருடங்களாவது இருக்கும். நான் இந்த விஷயங்களைச் சொல்கிறபோது, இதேபோன்று நீங்களும், உங்கள் உறவுத் தோழமைகளோடு நட்புப் பாராட்டிய நாட்கள் நினைவுக்கு வரலாம்.

உறவுகளுக்குள்ளேயே நட்பு வட்டம் அமைவது ஆனந்தமான விஷயம் மட்டுமல்ல; ஆரோக்கியமானதும்கூட. வெளியில் இருந்து ஒரு நண்பர் தருகிற அறிவுரை, யோசனைகளைப்போலவே, குடும்பத்துக்குள்ளேயே இருக்கிற நட்பு வட்டத்தின் யோசனைகள் கூடுதல் புரிதலோடு இருக்கும். அதன் நீக்குப்போக்குகள் குடும்பத்தின் தன்மை தெரிந்து வெளிப்படும்.

உறவுத் தோழமைகளோடு தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால், ஊருக்குள்ளேயே இருக்க வேண்டியதுதான் என்று நினைக்கத் தோன்றும். அப்படியெல்லாம் இல்லை. இன்று இருக்கிற தகவல் தொடர்பு வசதியில் அனைவரையும் ஒரே நேரத்தில் தொலைபேசி வழியேகூடத் தொடர்புகொள்ள முடியும்.

சில வருடங்களுக்கு முன்பு வரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் நீங்கள் சந்தித்து வந்த உங்கள் பெரிய அத்தைப் பையனோடு, சமீப காலத்தில் எப்போது பேசினீர்கள், ஏன் பேசவில்லை என்ற கேள்விக்கு நம்மிடம் காரணமே இருக்காது.

கால ஓட்டத்தில் புதிய புதிய உறவுகளும் நட்புகளும் கிடைக்கிறபோது மறந்தது தெரியாமலே நாம் மறந்துபோவது இந்த உறவுத் தோழமையைத்தான். இப்படி மெனக்கெட்டு ஏன் உறவுத் தோழமைகளோடு தொடர்ந்து சிநேகம்கொள்ள வேண்டும்.

நம்முடைய வெளி வட்டார நட்புகளும்கூட குடும்ப நண்பர்களாக மாற இந்த உறவுத் தோழமைகள்தான் கைகொடுக்கின்றன. வெளி வட்டார நண்பர்களைப்போல உறவுகள் நம்முடைய வளர்ச்சியில் மகிழ்வதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்படுவதற்கு முக்கியமான காரணம், உறவுகள் நட்புறவோடு இயங்காமல் இருப்பதுதான்.

வேக வேகமாக ஓடி, களைத்து, சம்பாதித்துத் திரும்பிப் பார்க்கிறபோது, நாமும் நம்முடைய நாலு நண்பர்களும் மட்டுமே மீதம் இருக் கிறோம். வேலைப் பளு, கல்லூரியின் பாடச் சுமை, பள்ளிக்கூடத்தில் விடுமுறை கிடைக்காதது, பிள்ளைகளின் சம்மர் கோச்சிங் கிளாஸ் இவை எல்லாவற்றையும் தாண்டி, ஊரில் கோயில் திருவிழா என்றால், இரண்டு நாள் போய் கலந்துகொள்ளுங்கள்.

உறவுகள் தூர இருந்தால்தான் அழகு என்பது ஓரளவு உண்மைதான் என்றாலும், சம வயது உறவுத் தோழமைகளோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பில் இருங்கள். அவசரம், ஆபத்துத் தருணங்களில் இளம் பிராயத்து நட்போடு தோள் கொடுங்கள்.

நண்பர்கள் வட்டாரத்தில் சில குறிப்பிட்ட நபர்கள் இணைப்புப் பாலமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக நாம் யாருமே சந்திக்கவில்லை. எனவே, இந்த வார இறுதியில் எல்லோரும் சந்திக்கலாம் என்று ஏற்பாடு செய்வார். அப்படி உறவுத் தோழமைகளுக்குள்ளும் செய்ய முயலலாம்.

ஆளுக்கு ஒரு திசையில் இருந்தாலும் இந்தக் கோடை விடுமுறை நாட்களில் உறவுத் தோழமைகள் ஒன்றுகூடி ஒரு Family tour ஏற்பாடு செய்யுங்கள். பழைய நாட்களின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு தேடுங்கள்.
விடுமுறைகளில் உறவுகள் கூடி மகிழும் பல குடும்பங்களை நான் அறிவேன். நீங்களும் அறிந்து இருப்பீர்கள். அவர்களைப் பார்க்கிறபோது லேசாகப் பொறாமை வரும். ஆசையாகவும் இருக்கும்.

பழைய நண்பர்களைச் சந்திக்கவும், உறவு களைப் பலப்படுத்திக்கொள்ளவும் கல்லூரி களில்கூட அமைப்புகள் இருக்கின்றன. ஏனோ, குடும்பங்களில் அப்படிப்பட்ட ஏற்பாடு இப்போது குறைவாக இருக்கிறது.

உறவுத் தோழமைகள், நட்பை மட்டுமல்ல குடும்ப உறவுகளையும் மேம்படுத்துகின்றன. வைபவச் சந்திப்புகளில், வாய்ப்பு கிடைக்கும்போது மட்டும் பகிர்ந்துகொள்ளப்படுகிற அன்பும் தோழமையும் தொடர, காலத்துக்கேற்றதுபோல சில ஏற்பாடுகளும் தேவைப்படுகின்றன.

'குடும்ப உறுப்பினர்களே, நண்பர்களாகவும் அமைகிற, அமைத்துக்கொள்ளுகிற வாய்ப்பு நமது சூழலில்தான் அதிகம். அதைத் தவறவிடாதீர்கள்.

கருப்பையா கோயில் திருவிழாவில் ஒன்றுகூட தாத்தாக்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டுமா என்ன?

Thursday, April 15, 2010

விரல் அளவே உடைய விலங்கு களின் வித்தியாசமான படங்கள்













தலைமுடியினால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான கட்டிடங்கள்



மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது.
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.